’பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாட்டு... கங்கை அமரன் இசையில், மலேசியா வாசுதேவன் குரலில் காதல் தோல்விப்பாடல்!  - 40 ஆண்டுகளாகியும் வெண்மேகமாக, விடிவெள்ளியாக நிற்கும் பாட்டு! 

By வி. ராம்ஜி

எண்பதுகள், தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். எண்பதாம் ஆண்டும் அப்படித்தான் தொடங்கியது. படங்கள் தோற்றுப் போனாலும் பாடல்கள் மட்டும் ஹிட்டடித்ததெல்லாம் எப்போதுமே நடந்திருக்கின்றன. அப்படி வெற்றி அடையாத படங்கள் ஏராளம். அதேபோல், காலங்கள் கடந்தாலும் மனதில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும் பாடல்களும் ஏராளம்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமானவர்கள் சுதாகரும் ராதிகாவும். இதன் பின்னர் ‘நிறம் மாறாத பூக்கள்’ தொடங்கி ஏராளமான படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். பொருத்தமான ஜோடி என்றும் ராசியான ஜோடி என்றும் கொண்டாடப்பட்டார்கள்.

அதேசமயம், வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன சுதாகருக்கு. ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பட்டாளத்தானாக நடித்த விஜயனும் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இன்னும் சொல்லப்போனால், அந்தக் காலகட்டத்தில், சுதாகரும் விஜயனும் மினிமம் கியாரண்டி நடிகர்களாகவே உலா வந்தார்கள். சுதாகர் படமும் விஜயன் படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. தோல்விப்படமாகவும் அமைந்தது. ஆனாலும் சுதாகர் படத்துக்கும் விஜயன் படத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்தது. அப்போதெல்லாம் இவர்களின் படங்களை மிஸ் செய்யாமல் பார்த்தார்கள் ரசிகர்கள்.

சுதாகர், ராதிகா ஜோடியின் ‘எங்க ஊர் ராசாத்தி’ அப்படி வந்த படங்களில் ஒன்று. கிராமத்து சப்ஜெக்ட். இருவருக்குமே அழகாகப் பொருந்தியது. கலைமணியின் கதைக்கு என்.எஸ்.ராஜேந்திரன் திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கியிருந்தார்.

சுதாகர், ராதிகா, கவுண்டமணி, காந்திமதி, சி.ஆர்.சரஸ்வதி முதலானோர் நடித்திருந்தனர். சிறிதும் பெரிதுமாக எல்லாப் பொருட்களின் மீது ஆசைப்படும் ராதிகா. ஊரில் தையல் கடை வைத்திருப்பவர் சுதாகர். டீக்கடை வைத்துக்கொண்டு, தவறான தொழில் செய்து வரும் பெண்மணியிடம் அடிக்கடி வருவார் கவுண்டமணி. அவருடைய மனைவி சி.ஆர்.சரஸ்வதி.

அப்படி வரும்போது ராதிகாவைப் பார்ப்பார். ஆசைப்படுவார். டீக்கடைப் பெண்ணிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ராதிகாவை, கவுண்டமணிக்கு இரையாக்க முனைவார். அப்போது தப்பிப்பார். விஷயம் பஞ்சாயத்து வரை போகும். சுதாகரின் டெய்லர் கடையையும் தீக்கிரையாக்கிவிடுவார்கள்.

வெளியூர் போய், வேலை பார்த்து, காசு சம்பாதித்து வருகிறேன் என்று சுதாகர் சொல்லிச் செல்வார். இங்கே, வலுக்கட்டாயமாக, கவுண்டமணி தன் மனைவியின் தம்பிக்கு ராதிகாவை திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுவார். ஜெயித்தும்விடுவார். அந்தப் பையன் மனநிலை பாதிக்கப்பட்டவன். திருமணமும் ஆகிவிடும். ஒருபக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட கணவன், இன்னொரு பக்கம் தன்னை அடையத் துடிக்கும் கவுண்டமணி. இந்தநிலையில், பணம் சம்பாதித்து, புடவை நகையுடன் ஊருக்கு வருவார் சுதாகர்.

பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக ராதிகாவை தவறாக நினைப்பார். பிறகு ராதிகா விளக்குவார். இந்த விஷயங்களெல்லாம் தெரிந்த கவுண்டமணியின் மனைவி சி.ஆர்.சரஸ்வதி, சுதாகருடன் கிளம்பி நல்லபடியாக வாழச் சொல்லுவார்.

கோயில் திருவிழா. கூத்து. திரெளபதி மானபங்கக் காட்சி. சுதாகர் ஊர்க்கோடியில் காத்திருப்பார். வீட்டார் அனைவரும் கூத்துப் பார்ப்பார்கள். ராதிகா வீட்டில் இருப்பார். அப்போது கவுண்டமணி வீட்டுக்குள் நுழைந்து மானபங்கப்படுத்த முயல, அந்த சமயத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட கணவன் ஓரளவு புரிந்து கொண்டு, கவுண்டமணியைக் கொல்ல முற்பட, கவுண்டமணியிடம் இருந்து அவனைக் காப்பாற்றுவார் சுதாகர். ஆனால் சுதாகர் குத்துப்பட்டு சாகக் கிடப்பார்.
சுதாகர் வாங்கிவந்த புடவை நகைகளை அணிந்துகொண்டு சாகக்கிடக்க சுதாகர் முன்னே வரச்சொல்லுவார் மாமனார். அப்படி வந்து நிற்பார் ராதிகா. மனநிறைவுடன் இறந்துபோவார் சுதாகர்.

சுமாரான கதைதான். அதைவிட சுமாரான திரைக்கதை. தன்னை காதலித்து வேறொருவரை திருமணம் செய்துகொண்ட சுஜாதாவை, ஒருநாள் முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று கமல் சொல்லும் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ காட்சியும் புடவை நகை அணிந்து கொண்டு வரச் சொல்லும் இந்தப் படத்தின் காட்சியும் ஒன்று போலான கான்செப்ட்டாகவே இருக்கும். மனநிலை பாதிக்கப்பட்ட கணவன், கவுண்டமணியின் அத்துமீறல், சுதாகரின் வருகை என்றே பிற்பாதி திணறிக்கொண்டிருக்கும். என்ன முடிவு எடுப்பதில் ராதிகாவுக்கு இருக்கும் குழப்பத்தை விட, சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் அதிக குழப்பமும் தவிப்பும்.

‘கிழக்கே போகும் ரயில்’ போலவே இதிலும் கவுண்டமணியின் வில்லத்தனம். அதைப் போலவே இதிலும் ராதிகாவை அடையத் துடிக்கும் கேரக்டர். படத்தில் காமெடியும் இல்லை. கவுண்டமணியும் வில்லன்.

‘எங்க ஊர் ராசாத்தி’ படத்தின் ஒரே ஆறுதல்... பாடல்கள்தான். கங்கை அமரன் இசையில் எல்லாப் பாடல்களும் இதம். ’எங்க ஊரு மாரியம்மா, தங்கமனக் காளியம்மா’ என்றொரு பாடல். டைட்டில் முடிந்ததும் வருகிற பாடல். கிராமத்துத் திருவிழாவுக்கான மெனக்கெடல்கள் காட்சிகளில் இல்லாது போனாலும் இந்தப் பாடல், அப்படியே திருவிழா மூடு கொடுத்துவிடும்.

’ஆசைப்படி புருஷன் வரட்டுமே அடி அம்மாடி ஆசைப்பட்டு பாத்தா அழகான பொண்ணு’ என்ற பாடல் மெலடியில் நம்மை ஈர்க்கும். ராதிகாவின் கேரக்டரையும் ஏக்கத்தையும் சொல்லும் பாட்டாகவும் அமைந்தது.

கிராமத்து திருவிழாவில் எசப்பாட்டு பாடுவது வழக்கம். இவரை கேலி செய்ய அவரும் அவரை கேலி செய்ய இவரும் காசு கொடுத்து பாடவைப்பார்கள். ’சிறுக்கி ஒருத்தி சிங்காரக் குறத்தி’ என்ற பாடல் நக்கலும் கேலியும் நிறைந்த பாடல். இந்தப் பாடல் நையாண்டியாக அமைந்து, அப்படியே இருவரும் காதலிப்பதைச் சொல்லும் பாட்டாகவும் மாறும்.

இவை எல்லாவற்றையும் விட, முத்தான பாடலாகவும் சோக ஆழம் சொன்ன பாட்டாகவும் காதல் தோல்விக்கான மருந்துப் பாடலாகவும் அமைந்த பாடல்தான்... ‘பொன்மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாட்டு. எண்பதுகளில், காதல் தோல்விக்காரர்கள், இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுத்து, சோகமாற்றினார்கள்.

பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி

மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ


எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ

இன்னோரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போட இருப்போம்
அது கூடாம போச்சுதுன்னா
என் ராசாவே...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்
என்னை அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

- என்ற பாடலும் மெட்டும் உருக்கியெடுத்துவிடும். எல்லாப் பாடல்களையும் மலேசியா வாசுதேவன் தான் பாடியிருந்தார். இந்தப் பாட்டும் அவர்தான். உடன் எஸ்.பி.ஷைலஜா பாடியிருப்பார். அத்தனைப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தவர் கங்கை அமரன்.

கங்கை அமரன் இசையமைத்த பாடல்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்தப் பட்டியலில், ‘பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாட்டுக்கு தனியிடம் கொடுத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

1980ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி வெளியானது ‘எங்க ஊர் ராசாத்தி’. படம் பெரிதாகப் போகவில்லை. ஆனாலும் ‘பொன்மானைத் தேடி’ பாடல் 40 வருடங்களாகியும் இன்றைக்கும் பூவைப் போல மணந்துகொண்டே இருக்கிறது. காற்றிலும் மனித மனங்களிலும் கலந்துவிட்ட மந்திரக்குரலோன் மலேசியா வாசுதேவனின் குரலும் ஷைலஜாவின் குரலும் கங்கை அமரனின் அட்டகாசமான கிராமத்து இசையும் காலத்துக்கும் மறக்காது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்