தலைசிறந்த பல தமிழ் நாவல்கள் திரைப்படங்கள் ஆவதில்லை அப்படியே படமானாலும் அவை வெற்றிபெறுவதில்லை என்ற அங்கலாய்ப்பு இலக்கியம், சினிமா இரண்டின் மீதும் தீவிர ஆர்வம் கொண்ட பலரிடம் வெளிப்படுவதுண்டு. தமிழில் நாவல்கள், சிறுகதைகளை மையமாகக்கொண்டு உருவாக்கப்படும் படங்கள் எப்போதும் இருந்துவந்துள்ளன.
மகேந்திரன் இயக்கிய காலத்தால் அழியாக கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிட்ட 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' ஆகிய இரண்டு படங்களும் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை வைத்து உருவாக்கப்பட்டவைதாம். 'மோகமுள்','கரையெல்லாம் செண்பகப்பூ', 'ப்ரியா', 'காயத்ரி' எனப் பல புகழ்பெற்ற திரைப்படங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்டவையே. தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகள் நடந்துவந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியில் தோல்வியடைவதோடு அந்தக் கதைகளின் வாசகர்களையும் திருப்திப்படுத்தத் தவறின. இதனால் வெற்றிபெற்ற கதைகளைத் திரைப்படமாக்கும் போக்கு கிட்டத்தட்ட நின்றுபோனது. சசி இயக்கிய 'பூ' உள்ளிட்ட படங்கள் விதிவிலக்குகளாக அமைந்தன.
அரிதான நிகழ்வு
» 'அசுரன்' ஒரு ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொடுத்தது: வெற்றிமாறன் பெருமிதம்
» 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் '96' மாயாஜாலம் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது: த்ரிஷா உற்சாகம்
இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் என்னும் நட்சத்திரம் நடித்து தற்காலத்தில் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த தமிழ் இயக்குநர்களில் ஒருவராக பாவிக்கப்படும் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும்புகழ் பெற்ற தமிழ் நாவல் ஒன்று திரைப்படமானதோடு விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த அரிதான நிகழ்வைச் சாத்தியமாக்கிய திரைப்படம் 'அசுரன்' கடந்த ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 4) வெளியானது.
'வெக்கை'யிலிருந்து வெற்றித் திரைக்கதை
எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு 'அசுரன்' படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருந்தார் வெற்றிமாறன். தமிழ் இலக்கிய வாசகர்கள், விமர்சகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற அந்த நாவலின் கதையை அப்படியே எடுக்காமல் அதன் அடிப்படைச் சட்டகத்தையும் கருவையும் கதை மாந்தர்களையும் எடுத்துக்கொண்டு தன் பாணியில் சில விஷயங்களைச் சேர்த்து திரைக்கதையை உருவாக்கியிருந்தார்.
இரண்டு கால அடுக்குகள்
1980-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நிலவுடைமை கொண்ட தலித் குடும்பத்துக்கும் அந்த நிலத்தை அபகரிக்க முயலும் ஆதிக்கச் சாதிக் குடும்பத்துக்கும் இடையிலான பகை, அதன் முன்கதையாக 1960களில் ஆதிக்கச் சாதிகள் தலித் மக்கள் மீது ஏவிய சாதிய ஒடுக்குமுறை என இரண்டு அடுக்குகள் கொண்ட திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய திறப்புகளை ஏற்படுத்தின. தென் மாவட்டங்களின் நிலவும் சாதியக் கட்டுமானம் சார்ந்த வாழ்க்கைமுறையையும். சாதியப் படிநிலையில் கீழே இருக்கும் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளையும் அவற்றுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிளர்ந்தெழும் நாயகனின் எழுச்சியையும் ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.
1968-ல் நடைபெற்ற கீழ் வெண்மணி குடிசை எரிப்பு படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்திய காட்சி பார்த்த அனைவரையும் உலுக்கியது. இதற்கு எதிராக முன்னிறுத்தப்படும் நாயகன் தன் வீரத்தாலும் துணிச்சலாலும் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவது அனைவருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிப்பதாக இருந்தது. அதே நேரம் நாயகன் வன்முறைச்சூழலுக்கு தள்ளப்பட்டாலும் கடைசியில் தன் மகனுக்கு அவனை வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுத்து கல்வியின் மூலமாகத்தான் எல்லா விதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட முடியும் என்பதை உணர்த்திவிட்டுச் செல்வதும் ஒரு படைப்பாளியாக வெற்றிமாறனின் சமூகப் பொறுப்புணர்வுக்குச் சான்றாக அமைந்தன.
வெகுஜனத்தை ஈர்த்த சமூக அக்கறை
சாதிய ஒடுக்குமுறை குறித்து இதற்கு முன்பு பல படங்கள் வந்திருந்தாலும் 'அசுரன்' படத்தில் அவை வெகுஜன ரசனைக்கு ஏற்ற காட்சிகளாக உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் நாயகன் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் வெகுண்டெழும்போதும் திரையரங்கமே ஆர்ப்பரித்து அநியாயத்துக்கெதிரான அந்த எழுச்சியைக் கொண்டாடியது. அதே நேரம் இது போன்ற காட்சிகளின் மூலம் கடத்தப்படும் விஷயங்களின் முக்கியத்துவமும் தீவிரத்தன்மையும் கொஞ்சம்கூட நீர்த்துப்போய்விடாமல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் வெளிப்படுத்த வேண்டிய சாதியம் மீதான சாடலோ அது நீங்க வேண்டும் என்ற சமூக அக்கறையோ எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை. மிகச் சவாலான இந்தக் காரியத்தைச் செய்துகாட்டியதில்தான் ஒரு திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநராக வெற்றிமாறனின் வெற்றி ரகசியம் அடங்கியிருக்கிறது
ஒட்டுமொத்த படக்குழுவின் வெற்றி
இப்படி ஒரு கதையில் அதுவும் தன் நிஜ வயதைவிட 20-25 வயது அதிகமுள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்றுக்கொண்டதற்காகவே தனுஷைப் பாராட்ட வேண்டும். அதுவரை இளைஞராக மட்டுமே பார்த்துப் பழகிய தனுஷை தலை நரைத்த வேட்டி சட்டையும் துண்டும் அணிந்த பருவ வயது மகன்களின் தந்தையான 45 வயதுக்காரராக சிவசாமி குடும்ப கதாபாத்திரமாக கச்சிதமாக உருமாறியிருந்தார். உடல்மொழி, குரல், முகபாவம் என அனைத்திலும் ஒரு கிராமத்து நடுத்தர வயதுக்காரரின் சாயலைக் கொண்டுவந்தார்.
தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர், மச்சானாக பசுபதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும் வழக்கறிஞராக பிரகாஷ் ராஜ், தனுஷின் மகன்களாக டீஜே அருணாச்சலம். கென் கருணாஸ், வடக்கூரானாக 'ஆடுகளம்' நரேன்' என அனைவரும் 80-களின் தெற்கத்தி மனிதர்களாக வாழ்ந்து காட்டினர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமியத்தன்மையில் தோய்ந்ததாகவும் மனதைத் தொடுவதாகவும் அமைந்திருந்தன என்றால்; பின்னணி இசை ருத்ரதாண்டவமாக அமைந்தது. குறிப்பாக 'வா அசுரா வா' எனும் தீம் இசை ரசிகர்களுக்கு உணர்வெழுச்சியை ஏற்படுத்தியது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஆர்.ராமரின் படத்தொகுப்பு, கலை இயக்கம் எனத் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் வழக்கமாக வெற்றிமாறன் படங்களில் தென்படும் நேர்த்தியும் தரமும் வெளிப்பட்டிருந்தன
கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்திருந்த 'அசுரன்' 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி ரூ.100 கோடி வசூலித்துக் கடந்த ஆண்டு மிக் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது ஸ்ரீகாந்த் அத்தலா இயக்க வெங்கடேஷ் நடிப்பில் இந்தப் படத்தின் தெலுங்கில் மறு ஆக்கமான 'நாரப்பா' படத்தையும் தாணுவே தயாரிக்கிறார்.
வரலாற்று முக்கியத்துவம்
மிகப் பெரிய வணிக வெற்றி, விமர்சன ரீதியான பாராட்டு, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலைக் காத்திரமாகப் பதிவு செய்தது ஆகிய சிறப்புகளோடு வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற நாவல்கள்/சிறுகதைகளை வெற்றிகரமான சினிமாவுக்கும் சூத்திரத்தை 'அசுரன்' படத்தின் மூலம் உருவாக்கித் தந்திருக்கிறார் வெற்றிமாறன். இதற்காகவும் இந்தப் படம் வரலாற்றில் அழிக்க முடியாத இடம்பிடித்துவிட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago