’அன்புமேகமே இங்கு ஓடி வா’... எஸ்.பி.பி.யின் பாட்டு!  46 வருடங்களாகியும் மெலடியில் கலக்கும் காதல் டூயட்!  - ‘கன்னடத்து எம்.எஸ்.வி.’ விஜயபாஸ்கரின் அட்டகாச மெட்டு

By வி. ராம்ஜி


எழுபதுகளில், விதம்விதமான இசையமைப்பாளர்கள் வந்தார்கள். ரகம்ரகமான பாடல்களைத் தந்தார்கள். பல நடிகர்களுக்கு நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன. அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் அவையெல்லாம், அந்தப் பாடல்களெல்லாம் தமிழ் உலகுக்குக் கிடைத்தன. ரசிகர்களுக்குக் கிடைத்தன. அப்படிக் கிடைத்த அற்புதப் பாடல்... ‘அன்பு மேகமே இங்கு ஓடிவா’ பாட்டு.

1974ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எங்கம்மா சபதம்’. முத்துராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மேஜர் சுந்தர்ராஜன், எம்.என். ராஜம், அசோகன் முதலானோர் நடித்திருந்தார்கள். ’அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். கண்ணதாசனும் பஞ்சு அருணாசலமும் பாடல்களை எழுதியிருந்தனர்.

டி.எம்செளந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி முதலானோர் பாடல்களைப் பாடியிருந்தார்கள்.
படத்தின் எடிட்டிங் ஆர்.விட்டல். ஒளிப்பதிவு பாபு. இதைச் சொன்னதுமே படத்தின் இயக்குநர் யாரென்பது எல்லோருக்குமே தெரிந்துவிடும். ஆமாம்... எஸ்.பி. முத்துராமன் தான் படத்தை இயக்கினார்.

எழுபதுகளில், கருப்பு வெள்ளைக் காலத்திலேயே இப்படி ஏராளமான வித்தியாசமான படங்களையும் குடும்பக் கதை கொண்ட படங்களையும் தந்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

யூனியன் லீடர் மேஜர் சுந்தர்ராஜன், அவர் மனைவி எம்.என்.ராஜம். தொழிற்சாலைப் பிரச்சினையில் முதலாளி அசோகன் தரப்பு கொன்றுவிட, ஒற்றை ஆளாக இருந்து மகள்கள் ஜெயசித்ராவையும் விதுபாலாவையும் ஆளாக்குவார் எம்.என்.ராஜம். பின்னர், அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களைச் சொல்லுவார். அசோகனைப் பழிவாங்க வேண்டும், கதறடிக்கவேண்டும் என சபதம் போடுவார். அந்த சபதத்தை, மகள்கள் இருவரும் சேர்ந்து எப்படி நிறைவேற்றுகின்றனர் என்பதுதான் கதை. அசோகனின் மகன்களாக முத்துராமன், சிவகுமார்.

படத்தை கலகலப்பாகவும் அதேசமயம் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைத்து இயல்பான வசனங்களை பஞ்சு அருணாசலம் அசத்தியிருப்பார். எஸ்.பி.முத்துராமன் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ போல, ‘மோகம் முப்பது வருஷம்’ போல இயல்பாக இயக்கி பிரமிக்கவைத்திருப்பார்.

படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்டு. எழுபதுகளில் புதுமாதிரியான இசையைத் தந்த விஜயபாஸ்கர்தான் இசையமைப்பாளர். ’இளமை அழைக்கின்றது’ என்றொரு பாடல். டி.எம்.எஸ். பாடியிருப்பார். சுசீலாவும் இணைந்து பாடியிருப்பார். ‘என்னய்யா முழிக்கிறே’ என்ற பாடல், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். இப்படி பல பாடல்கள் இருந்தாலும், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது எஸ்.பி.பி. பாடிய பாடல். அவருடன் வாணி ஜெயராம் இணைந்து பாடியிருந்தார். அந்தப் பாடல்தான்... ‘அன்புமேகமே இங்கு ஓடி வா’

பாடலின் தொடக்கத்திலும் நடுவிலும் வரும் ஹம்மிங்... அப்படியே பாடலுடன் நம்மை கைகோர்க்கச் செய்துவிடும். ’கன்னடத்து எம்.எஸ்.வி.’ என்று போற்றப்படுகிற விஜயபாஸ்கர் மெல்லிசையாக கொடுத்த அற்புத டியூன் இது. சிவகுமார், ஜெயசித்ரா பாடலுக்கு நடித்தார்கள். சென்னை கடற்கரையில், இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடத்தினார்கள்.

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா


பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

என்று பாடும் போது, ‘நான் நீயன்றோ நீ நானன்றோ’ என்று சொல்லும்போதே, காதல் வயப்பட்டுவிடுவோம்.

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமமாகும் காட்சி உண்டு
பூ மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் பிறந்தது
பழைய கனவு மறைந்தது

என்ற பாடல், காதலில் கிறங்கடிக்கும். அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே இல்லை. எஸ்.பி.பி.யின் குரலும் அந்தக் குரலில் இருந்து வெளிப்படும் குழைவும்... கேட்டால், குரலைக் கேட்டு மேகமே பூமிக்கு வந்துவிடும்.

74ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியானது ‘எங்கம்மா சபதம்’. ‘அன்புமேகமே இங்கு ஓடி வா’ பாடல் கிடைத்து நமக்கு 46 ஆண்டுகளாகின்றன. அந்தப் பாடலை இப்போதும் கேட்டுப் பாருங்கள். எண்பதுகளுக்கு அழைத்துப் போகும் அந்தப் பாட்டு. எண்பதுகளில், உங்களுக்கு என்ன வயதோ அந்த வயதுக்காரராகவே மாற்றிவிடும் இந்தப் பாட்டு.

‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’ பாடல்... எஸ்.பி.பி.யின் இனிமையான பாடல். அவரின் எண்ணற்ற பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனிச்சுவையுடன் கூடிய பாடல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE