ஏன் பாலியல் வன்கொடுமை என்பது நிலையான குற்றமாக மாறிவிட்டது? - நடிகை அமைரா கேள்வி

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்புர் நகரில் இளம்பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நர்சிங்புர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த புகாரை எடுத்துக் கொள்ள போலீஸார் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (02.10.20) அன்று அந்த பெண் தன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களுக்கு நடிகை அமைரா தஸ்துர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கை பதிவு செய்ய ஒரு பெண் இறந்து போக வேண்டுமா? இந்தியாவுக்கு என்ன ஆகிறது? ஏன் காவலர்களால் நம்மை பாதுகாக்க முடியவில்லை. ஏன் பாலியல் வன்கொடுமை நிலையான குற்றமாக மாறிவிட்டது? பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது? பெண்களை துன்புறுத்துவதற்கு ஏன் ஆண்கள் பயப்படுவதில்லை?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE