’கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு,டைரக்‌ஷன்...’; ‘சகலகலா மன்னன்’; ஒழுக்கமானவர்; இனிமையானவர்... டி.ஆர்!  டி.ராஜேந்தர் பிறந்தநாள் ஸ்பெஷல்  

By வி. ராம்ஜி

’எது மாதிரியுமில்லாமல் புது மாதிரி’ என்றொரு வாசகம் உண்டு. இதை சினிமாவில் பார்ப்பது அபூர்வம். அப்படியாக இந்த வாசகத்தின்படி, ‘புதுமாதிரி’யாக படமெடுத்தவர்களைத்தான் இன்றைக்கும் சாதனையாளர்களாக ஏற்றுக்கொண்டு, கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். சாதனை செய்வது ஒரு திசை. மக்கள் மனங்களில் தனியிடம் பிடிப்பது இன்னொரு திசை. இந்த இரண்டையும் கொண்டிருப்பவர்கள் வெகு குறைவு. அந்தக் குறைவுப் பட்டியலில், நிறைவுடன் நிற்பவர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர்.

ஸ்ரீதரின் படங்கள் எப்படியோ, பாலசந்தரின் படங்கள் எப்படியோ, பாரதிராஜாவின் படங்கள் எப்படியோ... டி.ராஜேந்தரின் படங்களும் அப்படித்தான். தனித்துத் தெரிந்தன. புதுபாணியிலாகவே படங்கள் பண்ணினார். வசனங்களில், எதுகைமோனை எனும் விஷயத்தின் உச்சம் தொட்டார்.

அந்தப் படம் அதுவரை வந்திடாத வகையில் இருந்தது. காதலின் கண்ணியத்தைச் சொன்னது. காதலையே கண்ணியமாகச் சொன்னது. எழுபதுகளின் இளைஞர்கள் - யுவதிகளின் தயக்கத்தையும் கூச்சலையும் சொன்னது. அப்போது அவர்களுக்குள் இருக்கிற ரசனைகளைச் சொன்னது. இந்தப் படம் இன்று வரைக்கும் மக்களால் மறக்கமுடியாத படம். தவிர்க்கவே முடியாத படம். இந்தப் படத்தின் மூலம், முதல் படத்தின் மூலம் எத்தனையோ பேர் பிரபலாமானவர்கள். அவர்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர்... டி.ராஜேந்தர். இத்தனைக்கும் டைட்டிலில், டைரக்‌ஷன் கார்டிலெல்லாம் இவர் பெயர் வரவில்லை. ஆனாலும் ‘ஒருதலைராகம்’ டி.ராஜேந்தரின் படம் என்பதை நீருபித்தது. இவரின் இசையிலும் வரிகளிலும் உதித்த பாடல்கள் ஒலிக்காத வீடுகளே இல்லை. முணுமுணுக்காத உதடுகளே இல்லை. அநேகமாக, மாயவரம் என்கிற மயிலாடுதுறையை, வீதிகளை, ரயில்வே ஸ்டேஷனை டி.ராஜேந்தர் அளவுக்கு இதுவரை வேறு எவரும் காட்டியதே இல்லை சினிமாவில்.
மாயாவரத்துக்காரரான டி.ராஜேந்தர், மாயவரத்தில் இருந்து நேராக சென்னை கோடம்பாக்கத்திற்குள் நுழைந்து புறப்பட்டு ஜெயித்தவர். எவரிடம் உதவி இயக்குநராக இல்லாமல், எவரிடமும் முறையே சங்கீதம் பயிலாமல் ‘சினிமா கோதா’வுக்குள் புகுந்து ஜெயித்தவர். ‘இரயில் பயணங்களில்’ படத்தில் தன் திறமை வேரினைப் படரவிட்டார். ‘யாரோ டி.ராஜேந்தராம். கலக்குறார்யா’ என்று எல்லோரும் சொல்லிவந்த நிலையில், ‘வசந்த அழைப்புகள்’ படத்தில் இயக்கியதுடன் நடிக்கவும் செய்திருந்தார்.

இந்த சமயத்தில்தான், இவருடைய ‘ஒருதலைராகம்’ காதல் காவியத்தை தோற்கடிக்க இன்னொரு படம் வெளியானது. காதலித்தவர்கள் எல்லோரும் இந்தப் படத்தை எத்தனைமுறை பார்த்தோம் என்பதைக் கொண்டு காதலை அளந்துபார்த்துக்கொண்டார்கள். காதலிக்காதவர்கள், காதல் மீது மையல் கொள்ளவும் இந்தப் படம் காரணியாக இருந்தது. டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ படத்துக்கு இணையாக வெளியாக அந்தப் படம்... டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’. புயல் கிளப்பியது படம். கங்காவும் நளினியும் இன்று வரைக்கும் சீரியல்களில் கூட நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘செயின் ஜெயபால்’ என்றொரு கேரக்டரில், சுழற்றியடித்து ரசிகர்களை ஈர்த்தார். ‘வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி’ என்று சண்டையிட்டுக்கொண்டே பஞ்ச் வசனம் பேசினார். ’உறவைக் காத்த கிளி’யில் இரட்டை வேடங்களில் அசத்தினார். முன்னதாக, ‘தங்கைக்கோர் கீதம்’மில் ஆனந்த்பாபுவை அறிமுகப்படுத்தினார்.

டி.ராஜேந்தர் இசை ஈர்த்தது. பாடல்களும் வரிகளும் முணுமுணுக்க வைத்தன. அவரின் கதையும் சொல்லும் விதமும் பிடித்துப்போயிற்று. வசனங்களுக்காகவே ஒரே காட்சியில் நான்கைந்து இடங்களில் கரவொலி எழுப்பினார்கள் ரசிகர்கள். ‘தங்கைக்கோர் கீதம்’, ‘உறவைக் காத்த கிளி’, ‘மைதிலி என்னைக் காதலி’ என்று தொடர்ந்து ஹிட்டுகளைக் குவித்தார். ’பாசமலர்’ படத்துக்குப் பின்னர் அண்ணன் தங்கை கதையைச் சொல்லி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார். ‘என் தங்கை கல்யாணி’யும் அப்படித்தான். ‘தங்கைக்கோர் கீதம்’ அவ்விதம்தான். ‘டி.ராஜேந்தர் படத்தோட எழுத்து ஒன்பது இருக்கும். கூட்டிப்பாருங்க’ என்று இதுவே பேசுபொருளானது. தாடியை பிளஸ்ஸாக்கிக் கொண்டார். அதுவே அவரின் அடையாளமானது.

தான் இந்தக் கட்சிதான் என்று சொல்லிவிட்டால், மொத்த ரசிகர்களும் வரமாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, பாக்யராஜ் என பலரும் அதில் விதிவிலக்கானவர்கள். அவர்களில் டி.ராஜேந்தரும் இடம்பிடித்தார். ரிலீஸ் நாளில், கட்சிக்கொடிகள் தியேட்டர் வாசலில் வண்ணம் காட்டும். உள்ளே எல்லா தரப்பு ரசிகர்களும் வியந்து மலைத்து நெகிழ்ந்து ரசித்து விசிலடித்தார்கள். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்று இருந்த காலகட்டத்தில், ‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம்’ என்று டைட்டிலில் இன்னும் இன்னும் சேர்த்து ஜொலித்தார் டி.ஆர். அவரின் வேலைப் பட்டியல் பெரிதாகிக்கொண்டே போக, மொத்த தமிழகமும் அவரை ‘டி.ஆர்’ என்று சுருக்கிச் சொல்லிக் கொண்டாடியது. நடிகை பானுமதியம்மாவுக்குப் பின்னர், ‘அஷ்டாவதானி’ எனும் பட்டத்துக்கு உரியவரானார் டி.ஆர்.
செட் ப்ராப்பர்ட்டி என்று சினிமாவில் உண்டு. கதாநாயகன் வீடு, நாயகி வீடு, வில்லனின் பங்களா, துணை கேரக்டர் தொழில் செய்யும் இடம் என்றால் அந்த இடத்தில் என்னென்ன தேவையோ அதையெல்லாம் வைப்பதுதான் செட் ப்ராப்பர்ட்டி. இவரின் படங்களில், இவரின் வசனங்களுக்குத் தக்கபடிதான் செட் பொருட்கள் வைக்கப்படும். ‘காதலிக்கும் போது அன்பான முகம் தெரிஞ்சிச்சு. கல்யாணத்துக்குப் பின்னாலதான் இன்னொரு முகமே தெரியவந்துச்சு’ என்று சொல்லி, கேரக்டர் சாந்தமான பொம்மையைத் திருப்பும். பொம்மையின் பின்னால் கோரமான முகம் இருக்கும். முள்ளில் சிக்கிக்கொண்ட பறவையின் இறகு, சோகமாய் வானத்தில் பறக்கும் தனிப்பறவை, இதய வடிவத்தில் டெலிபோன் என்று வித்தை காட்டுவார் டி.ராஜேந்தர்.

நடிப்பவர்களைப் பார்ப்பதா, கேமிரா நகருவதைப் பார்ப்பதா, வசனங்களைக் கவனிப்பதா, பின்னணியில் உள்ள பொருட்களைப் பார்ப்பதா என்று எதைப் பார்ப்பது என்றே தெரியாமல் தவிக்கும் ரசிகன், ஒவ்வொன்றுக்காகவும் நான்கைந்து முறை படம் பார்க்க வந்ததுதான் டி.ராஜேந்தரின் தனி ஸ்டைல்! அவரின் அசைக்க முடியாத வெற்றி!

நாலு நிமிஷப் பாட்டை நான்கைந்து நாள் எடுப்பார்கள். அதற்கு முன்னதாக, அதற்காக டி.ராஜேந்தர் செட் போட்டிருப்பார். அந்த செட் போடுவதற்கே, பதினைந்து நாட்களாகியிருக்கும். பாட்டு செட்டோ, வில்லன் பங்களா செட்டோ... மிரட்டியெடுத்துவிடுவார். இசையும் அப்படித்தான். தமிழ் சினிமாவில் அதிக அளவில் டிரம்ஸ் பயன்படுத்திய இசையமைப்பாளர் ராஜேந்தராகத்தான் இருப்பார். சரிதா, ராதாரவி, ஸ்ரீவித்யா, பிரமிளா, ஒய்.விஜயா, செந்தாமரை என்று அழுத்தமான கேரக்டர்கள் கொடுத்து அசத்திவிடுவார். இடிச்சபுளி செல்வராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் என்று ’டி.ராஜேந்தர் படமா, இவர்களெல்லாம் இருப்பார்கள்’ என்று நிரந்தரமாக நடிக்க வைத்த பட்டியலும் உண்டு.

அமலா என்றொரு அற்புத நடிகையை அறிமுகப்படுத்தினார். மும்தாஜை அறிமுகப்படுத்தினார். சிம்பு எனும் அற்புத நடிகரை, தன் மகனை சிறுவயதில் இருந்தே நடிக்கவைத்தார். ‘டி.ராஜேந்தர் படமா?’ என்று பூஜை போட்ட முதல்நாளிலேயே மொத்த ஏரியாவும் விற்றுவிடும். ‘டி.ராஜேந்தர் படமா? முதல்நாளே பாக்கணும்’ என்று தியேட்டருக்கு வந்தவர்களும் அதிகம். வசூல் சாதனைகளும் ஏராளம்.

பந்துலு, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பி.மாதவன், ஏ.சி.திருலோகசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் முதலானோர் போல, சொந்தப் படங்களை தயாரித்து இயக்கினார். இசையை ரசித்தார்கள். பாடலை ரசித்தார்கள். வசனத்தை ரசித்தார்கள். காட்சிகளை ரசித்தார்கள். பிழிந்தெடுக்கும் சோகத்தை ரசித்தார்கள். நாயகியை ரசித்தார்கள். நாயகனை ரசித்தார்கள். வில்லனை, வில்லியை ரசித்தார்கள். வில்லக்கூட்டத்தின் அல்லக்கை கேரக்டரைக் கூட ரசித்தார்கள். டி.ராஜேந்தர் படங்களை ரசித்தார்கள். டி.ராஜேந்தரை ரசித்தார்கள்.

டி.ராஜேந்தர் படத்தின் பாடல்கள் கொண்ட ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் செய்ததெல்லாம் ரிக்கார்டு... சாதனை! படத்தில் ஒன்பது, பத்துப் பாடல்கள் வைப்பார். அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிவிடுவார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சினிமாத்துறையில் ஒழுக்கம், பண்பு, அடக்கம், அன்பு, தயாள குணம் என்று நல்லபேர் எடுப்பதுதான் உலக சாதனை. அப்படியாக நல்லமனிதர் டி.ராஜேந்தர். ஒழுக்கம் தவறாதவர். பண்புடனும் அன்புடனும் பழகக்கூடியவர். எண்பதுகளில்... திரைத்துறையில் தன் ஆளுமையால், வசூல் மழை பொழியச் செய்தவர். ‘கிளிஞ்சல்கள்’, ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ முதலான இவரின் பாட்டுக்கும் இசைக்குமாகவே தனி முத்திரையுடன் திகழ்ந்ததும் வெற்றிப் படங்களாக அமைந்ததும் என டி.ராஜேந்தரின் திறமையும் சாதனையும் மாயவரத்தில் இருந்து சென்னை தூரமிருக்கும் மிகப்பெரிய பட்டியல்.

எளிமையானவர், இனிமையானவர், திறமையானவர், கனிவானவர், கலகலப்பானவர், அதேசமயம், உண்மையாய் இருந்து உணர்ச்சிவசப்படுபவர்... என்று எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிற டி.ராஜேந்தருக்கு 3.10.2020 பிறந்தநாள்.

உன்னதக் கலைஞனை வாழ்த்துவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE