பெண்களை பாதுகாப்பதை விட ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்: ஆயுஷ்மான் குரானா

பெண்களை பாதுகாப்பதை விட ஆண்பிள்ளைகளை நாம் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.

கடந்த மாதம் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஏற்படுத்திய அதிர்ச்சி குறைவதற்குள் அதே உ.பி மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயதுப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

" அதிர்ச்சியாகவும், சோகமாகவும் இருக்கிறது. ஹாத்தரஸ் சம்பவத்தை தொடர்ந்து பல்ராம்பூர் மாவட்டத்தில் இன்னொரு பெண்ணும் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது காட்டுமிராண்டித் தனமானது, மனிதத்தன்மையற்றது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் எப்போது நிறுத்தப்படும்?

நம் நாட்டு பெண்களை நாம் ஒவ்வொரு நாளும் பாதுகாக்க தவறுகின்றோம். பெண்களை பாதுகாப்பதை விட ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாக நாம் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு ஆயுஷ்மான் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்குக் குரல் கொடுக்க, நடிகர் ஆயுஷ்மான் குரானாவை கடந்த மாதம் யுனிசெஃப் அமைப்பு தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE