#மீடூ இயக்கம்  குற்றம் சாட்டியவரையே குற்றவாளியாக்குகிறது - பாயல் கோஷ் காட்டம்

இந்தியாவில் உள்ள #மீடு இயக்கம் குற்றம் சாட்டியவரையே குற்றவாளியாக்குகிறது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

பாயல் கோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வெர்ஸோவா காவல் நிலையம் அனுராக் காஷ்யப்புக்குச் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்.1 அன்று அனுராக் காஷ்யப் வெர்ஸோவா காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள #மீடு இயக்கம் குற்றம் சாட்டியவரையே குற்றவாளியாக்குகிறது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து பாயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள மீடு இயக்கத்தின் மூலம் எல்லா குற்றவாளிகளும் தப்பித்துவிடுகின்றனர். அது குற்றம் சாட்டியவரையே குற்றவாளியாக்குகிறது. பிறகு ஏன் அவர்களை தண்டிப்பதில்லை. எது உண்மை? குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றால் பொய்யாக குற்றம் சுமத்திய பெண்களை ஏன் சிறையில் அடைக்கவில்லை?

குற்றம்சாட்டப்பட்டவர் எந்தச் சூழலிலும் அத்தகைய தவற்றை செய்யவேமாட்டார் என்று அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்களுக்கு உண்மை நிலை தெரிய வாய்ப்பில்லை. இது பாலியல் குற்றவாளியின் மனைவி தன் கணவர் ஒரு அப்பாவி என்று கூறுவதை போல உள்ளது.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE