அனைத்து அரியநாச்சிகளுக்கும் 'க/பெ ரணசிங்கம்' வெற்றி சமர்ப்பணம்: ஐஸ்வர்யா ராஜேஷ் உற்சாகம்

By செய்திப்பிரிவு

அனைத்து அரியநாச்சிகளுக்கும் 'க/பெ ரணசிங்கம்' வெற்றி சமர்ப்பணம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

'க/பெ ரணசிங்கம்' நடிப்புக்குக் கிடைத்துள்ள பாராட்டுக் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விடுத்துள்ள கூறியிருப்பதாவது:

" 'க/பெ ரணசிங்கம்' படத்துக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என் நன்றி. இந்த நன்றி என்ற மூன்று எழுத்துக்குள்தான் என்னுடைய தற்போதைய நிலையைச் சொல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளேன்.

கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து நன்றி சொல்லியிருப்பேன். அந்த அளவுக்கு 'க/பெ ரணசிங்கம்' படத்தின் விமர்சனங்களில் எனது நடிப்பைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள்.

நான் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே உங்களுடைய ஆதரவு இருந்து வருகிறது. சரியான நடிப்பின்போது தட்டிக் கொடுப்பதும் தவறான படத்தின்போது குட்டு வைப்பதும் என உங்களுடைய விமர்சன வரிகளால்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.

'க/பெ ரணசிங்கம்' படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவுக்குக் கதையை ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார் இயக்குநர் விருமாண்டி சார். வசனங்களைக் கத்தி முனை போன்று கூர்மையாக எழுதியிருந்தார் சண்முகம் சார்.

ஒரு கதையே படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும்தான், தற்போது இந்தப் படம் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் ராஜேஷ் சார், என்னுடன் நடித்த விஜய் சேதுபதி சார் மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் சார், இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் என உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றி.

எனது திரையுலக வாழ்க்கையில் 'க/பெ ரணசிங்கம்' ரொம்ப முக்கியமான படம். கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாகத் திரையரங்கில் வெளியாகிக் கொண்டாடப்பட்டு இருக்கும். இப்போது ஜீ ப்ளக்ஸ் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படம் பார்க்கும்போதே இந்த அளவுக்குப் பாராட்டு மழை என்றால், திரையரங்கில் வெளியாகி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே மகிழ்கிறேன்.

அனைவரும் எழுதியிருக்கும் விமர்சனங்கள், பேசிய வார்த்தைகள் என அனைத்தையும் கேட்டேன். கண்டிப்பாக அனைத்து வார்த்தைகளையும் என் இதயத்தின் ஓரத்தில் வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும்.

இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அப்படியே பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. கண்டிப்பாக இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வணங்கி, இந்தப் படத்தின் வெற்றியை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்".

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்