நடிகர் சத்யராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து நிலைகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் வில்லன்களின் அடியாளாக அறிமுகமாகி, மெயின் வில்லனாக உயர்ந்து, துணை நடிகராகி, கதாநாயகனாகச் சாதித்து நட்சத்திரமாக மின்னிவிட்டு, இப்போது குணச்சித்திர நடிகராக இந்தி உட்பட பல மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ் இன்று (அக்டோபர் 3) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிறு வேடங்களில் தொடக்கம்

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவரும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகருமான ரங்கராஜ், நடிகராகும் கனவுகளுடன் 1976இல் சென்னைக்கு வந்தார். அப்போது முன்னணி நட்சத்திர நடிகராக இருந்த சிவகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார்

இருவரையும் வழிகாட்டியாகக் கொண்டு திரைத் துறையில் வாய்ப்புகளைத் தேடினார் ரங்கராஜ். சினிமாவுக்காக தன் பெயரை சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டு 1978-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'சட்டம் என் கையில்' படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் மெயின் வில்லனான தேங்காய் சீனிவாசனின் அடியாளாக நடித்தார். தொடர்ந்து அதேபோன்ற சின்ன சின்ன துணை வேடங்களில் பல படங்களில் நடித்துவந்தார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் நாயகனாக நடித்த பல படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்தார்.

வில்லனாகவும் நாயகனாகவும்

சத்யராஜின் கல்லூரி நண்பரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான மணிவண்ணன் சத்யராஜின் கல்லூரி நண்பர். அவர் இயக்கி 1984-ல் வெளியான 'ஜனவரி 1' என்னும் படத்தில் முதல் முறையாக ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ். தொடர்ந்து அவர் இயக்கிய 'நூறாவது நாள்', '24 மணி நேரம்' படங்களில் மெயின் வில்லனாக அதுவும் கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தார் சத்யராஜ். க்ரைம் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த இந்த இரண்டு படங்களுமே வெற்றியைப் பெற்றன.

1985-ல் கார்த்திக் ரகுநாதன் இயக்கிய 'சாவி' திரைப்படத்தில் முதல் முறையாகக் கதாநாயகனாக அன்றைய முன்னணி நடிகை சரிதாவுக்கு ஜோடியாக நடித்தார் சத்யராஜ். அந்தப் படம் வெற்றி பெற்றது. ஆனால் கதாநாயகனாக அவரை நிலைநிறுத்திய படம் பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்'. 1986-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் கடல்புறத்தில் வாழும் ரவுடியாகவும் பிறகு காதலால் மனம் திருந்திய மென்மையான மனிதராகவும் நடித்திருந்தார். அதுவரை வில்லனாகவும் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நடித்து வந்த சத்யராஜ் இந்தப் படத்தில் மென்மையான காதலராக முற்றிலும் புதிய பரிமாணத்தில் சிறப்பாக வெளிப்பட்டிருந்த விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

அதே ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'மிஸ்டர் பாரத்', கமல்ஹாசனின் 'விக்ரம்' ஆகிய படங்களில் மெயின் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார். 'மிஸ்டர் பாரத்' படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்திருந்தாலும் முதுமையான வேடத்திலும் ஸ்டைலையும் தனித்துவத்தையும் காட்ட முடியும் என்று நிரூபித்தார்.

நாயகனாக தொடர் வெற்றிகள்

80-களின் பிற்பகுதியில் 'மந்திரப் புன்னகை', இயக்குநர் பாசிலின் 'பூவிழி வாசலிலே', கமல்ஹாசன் தயாரித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'மக்கள் என் பக்கம்', 'அண்ணாநகர் முதல் தெரு', 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'சின்னப்பதாஸ்' என சத்யராஜ் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெற்றிபெற்றன. ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றன.

குறிப்பாக 'பூவிழி வாசலிலே' தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் தரமான படைப்பாக விளங்குகிறது. தனி நாயகனாக நடித்துவந்தபோதே சிவாஜி கணேசனுடன் 'ஜல்லிக்கட்டு', பிரபுவுடன் 'சின்னதம்பி பெரியதம்பி' , கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய 'பாலைவன ரோஜாக்கள்' உள்ளிட்ட படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்துவந்தார் சத்யராஜ். பாரதிராஜா இயக்கிய 'வேதம் புதிது' படத்தில் பகுத்தறிவு கொள்கைகள் கொண்ட நடுத்தர வயது மனிதராக வெகு சிறப்பாக நடித்திருந்தார். இந்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் வெற்றிபெற்று சத்யராஜின் வணிக மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின.

90-களின் வெற்றி நாயகன்

90-களில் பி.வாசு இயக்கிய 'நடிகன்' படத்தில் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பியிருந்தார் சத்யராஜ். மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படம் சத்யராஜின் அடுத்த பத்தாண்டு வெற்றிப் பயணத்துக்கான தொடக்கமுமாக அமைந்தது. 'வேலை கிடைச்சிடுச்சு', 'பிரம்மா', 'ஏர்போர்ட்', 'புது மனிதன்', 'ரிக்‌ஷா மாமா', 'வால்டர் வெற்றிவேல்', 'தாய்மாமன்' என 90களின் தொடக்க ஆண்டுகளில் சத்யராஜ் நாயகனாக நடித்த பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அவர் விமானியாக நடித்திருந்த 'ஏர்போர்ட்' அந்த காலகட்டத்தின் மிக வித்தியாசமான படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

அடையாளமான 'அமைதிப்படை'

மணிவண்ணன் எழுத்து-இயக்கத்தில் 1994இல் வெளியான 'அமைதிப்படை' சத்யராஜின் நீண்ட திரை வாழ்வில் மகுடம் சூட்டிய படமாக அமைந்தது. தமிழ் சினிமாவின் தலைசிறந்த அரசியல் பகடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ஊழலும் கயமையும் நிறைந்த அரசியல்வாதியாக நடித்திருந்தார். அந்த அரசியல்வாதியின் மகனும் நேர்மையான காவல்துறை அதிகாரியுமான படத்தின் நாயகக் கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருந்தார். இந்தப் படம் பட்டி தொட்டியெங்கும் வெற்றிபெற்று விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு கிளாசிக் அந்தஸ்தையும் பெற்றுவிட்டது.

ஒற்றைப்பட இயக்குநர்

ஒரு நடிகராக தன்னுடைய 125-ம் படத்தை சத்யராஜ் எழுதி இயக்கவும் செய்தார். 'வில்லாதி வில்லன்' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தில் சத்யராஜ் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் ஏனோ அதன் பிறகு சத்யராஜ் ஒரு படத்தைக்கூட இதுவரை இயக்கியதில்லை.

90களின் பிற்பகுதியில் பி.வாசு இயக்கிய 'மலபார் போலீஸ்', சுந்தர்.சி இயக்கிய 'அழகர்சாமி' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார் சத்யராஜ்.

புத்தாயிரத்தின் நகைச்சுவைப் படங்கள்

புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் அதிகமாக நடித்தார் சத்யராஜ். பி.வாசுவின் 'அசத்தல்', சுராஜின் 'குங்குமப்பொட்டு கவுண்டர்' ஆகிய வெற்றிப் படங்கள் அமைந்தன.

மணிவண்ணன், பி.வாசுவுக்கு அடுத்து இயக்குநர் சக்தி சிதம்பரத்துடன் சத்யராஜுக்கு வெற்றிகரமான கூட்டணி அமைந்தது. 'என்னம்மா கண்ணு', ',மகாநடிகன்', 'இங்கிலீஷ்காரன்', 'கோவை பிரதர்ஸ்' என இந்த இணையின் நான்கு படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

பெயர் சொல்லும் 'பெரியார்'

நிஜவாழ்வில் பகுத்தறிவுவாதியான சத்யராஜ் அவர் மிகவும் மதிக்கும் தலைவரான தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பெரியாராக நடிக்கும் நல்வாய்ப்பைப் பெற்றார். ஞானராஜசேகரன் இயக்கிய அந்தப் படத்தில் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்திலும் பெரியாராக வாழ்ந்து காட்டினார். அவருடைய திரை வாழ்வில் பெருமைக்குரிய படங்களில் முதன்மையானதாக அமைந்த படம் 'பெரியார்'. அதே காலகட்டத்தில் தங்கர்பச்சான் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் ஏழை முதியவராக சத்யராஜின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

பன்மொழிகளில் குணச்சித்திர நடிப்பு

2010-ல் குணச்சித்திர நடிகராக சத்யராஜின் அடுத்த பரிமாணம் தொடங்கியது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். தமிழில் 'நண்பன்' படத்தில் கண்டிப்பு மிக்க கல்லூரி முதல்வராக அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 'ராஜா ராணி' படத்தில் நாயகியின் கனிவான தந்தையாக மனதில் நிற்கும் நடிப்பைத் தந்திருந்தார். 'தலைவா', வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'சிகரம் தொடு', 'இசை, 'மெர்சல்', 'கடைக்குட்டி சிங்கம்', 'கனா' எனப் பல படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் சத்யராஜின் நடிப்பு அந்தப் படங்களின் ஈர்ப்புக்குரிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. அதேபோல் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற இந்திப் படத்தில் ஷாருக்கான் – தீபிகா படுகோனுடன் நடித்தார்.

சத்யராஜின் நடிப்பு வாழ்க்கையின் மற்றொரு சிகரமாக ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய பிரம்மாண்டப் படங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் மகிழ்மதி அரச வம்சத்தின் பாதுகாலவரும் மாவீரருமான கட்டப்பாவாக சத்யராஜின் நடிப்பு தேசிய, சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

வெற்றிக்கு வித்திட்ட தனிச்சிறப்புகள்

நடிகராக பல கட்டங்களைக் கடந்து அனைத்திலும் முத்திரை பதித்து தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் சத்யராஜ் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். எல்லா வகையான நடிப்பிலும் ஜொலித்திருக்கிறார். வில்லனாக நடித்தபோதே தனக்கென்று ஒரு ஸ்டைல், கெத்து மற்றும் தனித்துவத்தைத் தக்கவைத்திருந்தார். 'காக்கிச் சட்டை' படத்தில் 'தகடு தகடு', 'மிஸ்டர் பாரத்' படத்தில் 'என்னம்மா கண்ணு', பல படங்களில் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' என்று அவர் பேசிய சின்ன சின்ன வசனங்கள் பல படங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. தொடக்கத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும் பல படங்களிலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இமேஜ் வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் நல்ல கதைகள் பலவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். நாயகனாக முன்னேறிக்கொண்டிருந்தபோது 'வேதம் புதிது' படத்தில் நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் நடித்ததை இந்தப் பண்புக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

சென்டிமென்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடிக்கும் நாயக நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' தொடங்கி 'கனா'வரை பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நகைச்சுவையிலும் தனக்கென்று பிரத்யேக பாணியைக் கொண்டிருப்பவர். பகடி, நக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய நகைச்சுவையை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் என்று சத்யராஜைச் சொல்லலாம். கவுண்டமணி, வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார் சத்யராஜ்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தனிமனிதராகவும் எப்போதும் கலகலப்பானவராகவும் தலைக்கனம் இல்லாதவராகவும் அறியப்படுகிறார் சத்யராஜ். அதேபோல் பகுத்தறிவுக் கொள்கையிலும் தமிழுணர்விலும் சமரசம் எப்போதும் செய்துகொள்ளாதவர். அரசியல், சமூக விவகாரங்கள் குறித்து மனதில் பட்டதைத் துணிச்சலாகப் பேசுவது அவரிடம் உள்ள அரிதான பண்புகளில் ஒன்று.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துவருரும் சத்யராஜ் திரை வாழ்வில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE