அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போன ‘நோ டைம் டு டை’ - ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அதிருப்தி

வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டு டை’ திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டு டை’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. நடிகர் டேனியல் க்ரைக் கடைசி முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இது. கரோனா அச்சுறுத்தலால் ஏப்ரல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நவம்பர் 12-ல் பிரிட்டனிலும், நவம்பர் 20-ல்அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‘நோ டைம் டு டை’ திரைப்படம் வெளியாகும் என்று எம்ஜிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றன. கரோனா தொற்றும் குறைந்தபாடில்லை. எனவே நவம்பர் மாதம் வெளியாகவிருந்த ‘நோ டைம் டு டை’ அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''எம்ஜிஎம், யுனிவர்சல் மற்றும் பாண்ட் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜி வில்சன், பார்பரா ப்ரோக்கோலி ஆகியோர் 25-வது பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தரும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், பெரும்பாலான மக்கள் இப்படத்தைத் திரையரங்கில் காண வேண்டும் என்ற நோக்கிலேயே இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்ஜிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதிருப்தியளிப்பதாக ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE