சிம்பு - சுசீந்திரன் கூட்டணி உருவானதன் பின்னணி

By செய்திப்பிரிவு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் திண்டுக்கல்லில் தொடங்குகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. நிறைய நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தற்போது, 'மாநாடு' படத்துக்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.

திண்டுக்கல்லில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கிவிட்டு, கோபிசெட்டிபாளையத்தில் சில காட்சிகளையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். எப்படி இந்தக் குறுகிய காலத்தில் சிம்பு - சுசீந்திரன் கூட்டணி இணைந்தது என்பது தான் அனைவருடைய கேள்வியாக இருந்தது.

இது குறித்து விசாரித்த போது, சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் ட்ரெய்லரை சிம்புவிடம் காட்டியுள்ளார். குறைந்த நடிகர்களை வைத்து இப்படியொரு படமாக என்று சுசீந்திரன் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

அப்போது கரோனா அச்சுறுத்தல் காலத்தில் எப்படியெல்லாம் படமாக்கினேன் உள்ளிட்ட விஷயங்களை சிம்புவிடம் தெரிவித்துள்ளார் சுசீந்திரன். அப்போது தன்னிடம் உள்ள கிராமத்துக் கதையையும் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். உடனே அந்தக் கதையைக் கேட்ட சிம்பு, இந்தக் கதையில் தானே நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஏனென்றால் சிம்புவுக்கு சுசீந்திரன் சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டது.

உடனே, தயாரிப்பாளர் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க, சுசீந்திரன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுப்பது என்று பேசி முடிவெடுத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சிம்பு இல்லாமல் முதலில் தொடங்குகிறது.

கேரளாவில் இருக்கும் சிம்பு அக்டோபர் 5-ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். ஒரே கட்டமாக சுசீந்திரன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்திலிருந்து 'மாநாடு' படத்துக்குத் தேதிகள் கொடுத்துள்ளார் சிம்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE