இயக்குநராக அறிமுகமாகும் தயாநிதி அழகிரி

By செய்திப்பிரிவு

'மாஸ்க்' என்ற குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி

‘தமிழ்ப் படம்’, ‘தூங்காநகரம்’, 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் க்ளவுட் நைன் மூவிஸ். இந்நிறுவனத்தை நடத்தி வருபவர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. சில வருடங்களாகவே தயாரிப்பிலிருந்து விலகியே இருந்தார்.

தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் தயாநிதி அழகிரி. ’மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைச் சரியாகக் கையாளாவிட்டால் பயன்படுத்துவோருக்கும் ஆபத்தைத் தரக்கூடியது. இது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.

கோவிட்-19 முடக்கக் காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ளப் பேருதவியாக இருந்தன. பலவகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் 'மாஸ்க்'.

ஓர் இளைஞன் தான் பிரபலமடைவதற்காக ட்விட்டர் மூலம் எதிர்மறையான விஷயங்களையும், பல்வேறு நடப்பு நிகழ்வுகள் குறித்து விமர்சித்தும் பகுத்தறிவற்ற முறையில் செய்திகளைப் பதிவிடுகின்றான். இந்த செயலால் அவன் கண்காணிக்கப்பட்டு இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான்.

அவன், தான் செய்யும் செயல்களை உணர்கிறானா? அவனது வாழ்க்கைப் பயணத்தில் அவனுக்கு யார் உதவுகிறார்கள்? அவன் செய்தது உண்மையில் சட்டவிரோதமானதா? அதன் தாக்கம் என்ன? அவனது எதிர்காலம் என்ன? உலகைப் பார்க்க இதைவிடச் சிறந்த வழி இருக்கிறதா? என்பதை எல்லாம் ‘மாஸ்க்’ குறும்படம் கூறும்.

இந்தக் குறும்படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்கள், தயாநிதி அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE