வி.சி.கணேசன், சிவாஜி கணேசன், சிவாஜி... நடிகர்திலகம்! நடிப்பில் எட்டாவது அதிசயம்; எட்டாத ஆச்சரியம்!  - நடிகர் திலகம் சிவாஜி 92வது பிறந்தநாள் ஸ்பெஷல் 

By வி. ராம்ஜி

கடல், யானை, வானம், நிலா என்று எப்போது பார்த்தாலும் பிரமிப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் சந்தோஷம்தான். அப்படி எத்தனைமுறை பார்த்தாலும் பிரமிப்பு ஏறிக்கொண்டே இருக்கும். அவரை எத்தனை முறை பார்த்தாலும் சந்தோஷம் கூடிக்கொண்டே இருக்கும். பிரமிப்பும் வியப்பும் மேலிடுகிற, சந்தோஷமும் உற்சாகமும் தருகிற அவர்... நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.

1952ம் ஆண்டுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ‘நடிப்பு’ என்றொரு வார்த்தை புழக்கத்தில் இருந்ததா என்பதெல்லாம் தெரியவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் படம் நன்றாக இருந்தது, பாடல்கள் அருமையாக இருந்தது என்றெல்லாம் இருந்திருக்கலாம். மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்தார் என்று எவரையேனும் சொல்லியிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் ‘பராசக்தி’க்குப் பிறகுதான் இந்த வார்த்தையெல்லாம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களிடமும் புழக்கத்துக்கு வந்தன. சிவாஜி என்ற சொல்லும் நடிப்பு என்ற சொல்லும் பிரிக்கவே முடியாதவை என்பதை அடுத்தடுத்து வந்த படங்களிலேயே புரிந்து உணர்ந்து சிலிர்த்தார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அப்போது கதைகள் பண்ணிவிடுவார்கள். அந்தக் கதையை மிக அழகாக திரைக்கதையாக்கிவிடுவார்கள். கதைக்குள் உலவுகிற கதாபாத்திரங்களையும் ஏற்படுத்திவிடுவார்கள். 20 ரீல் கொண்ட படங்களில் 22 பாடல்களைக் கொண்டு, இசை விருந்தே படைத்துவிடுவார்கள். ஆனால், கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவது, ஒவ்வொரு கேரக்டர்களுக்குமான உடல்மொழியை உருவாக்குவது, உடல் மொழியுடனும் வசன ஏற்ற இறக்கங்களில் கதையின் சூழலை, கதாபாத்திரத்தின் நிலையை உணர்த்துவது என்று சிவாஜி செய்த ஜாலங்களெல்லாம் கருப்பு வெள்ளை காலத்திலேயே டாலடித்தன. ‘இவர் வித்தியாசமான நட்சத்திரம், துருவ நட்சத்திரம்’ என்று வியக்கச் செய்தன.

‘இந்தக் கதையில்தான் நடிப்பேன்’, ‘இதுமாதிரியான கேரக்டரில்தான் நடிப்பேன்’, ‘என்னுடைய இந்த கதாபாத்திரம் இப்படியெல்லாம் வடிவமைத்திருந்தால்தான் நடிப்பேன்’ என்று லிமிட்டேஷனே வைத்துக்கொள்ளவில்லை சிவாஜி. இமேஜ் எல்லைகள் போட்டு, தன்னைச் சுற்றி வட்டமெல்லாம் சுழித்துக்கொண்டு நிற்கவில்லை அவர். அப்படி லிமிட்டுக்குள் இல்லாமல் இருந்ததால்தான், நடித்ததால்தான்... நமக்குக் கிடைத்தன சிவாஜியிடம் இருந்து ‘அன் லிமிடெட்’ மீல்ஸ் நடிப்புகள்.

நாட்டுக்கு உதவும் நல்ல மன்னராக நடிப்பார். மது, மாது என்றிருக்கும் மன்னனாகவும் நடிப்பார். இரண்டு ராஜாக்களும் நடுவே ஒரு கோடு கிழித்துக்கொண்டு, நடிப்புக்கபடி விளையாடுவார் சிவாஜி. ஆங்கிலேயரை எதிர்க்கும் அரசனாகவும் வருவார். பகத்சிங்காகவும் நடிப்பார். இரண்டுமே வீர நெஞ்சம்தான். ஆனால் நெஞ்சு விறைத்துக்கொண்டு நிற்பதிலும் நடப்பதிலும் வித்தியாசம் காட்டுகிற வித்தையெல்லாம் சிவாஜியின் நடிப்புப்பசிக்கான தீனிகள்.

‘பாகப்பிரிவினை’யும் ‘பட்டிக்காடா பட்டணமா’வும் கிராமத்துக்கதைதான். ஆனால், இரண்டு சிவாஜிகளுக்குள்ளும் இருநூறு வித்தியாச மேனரிஸங்கள். ‘ராஜா’வும் ‘தங்கப்பதக்கம்’ செளத்ரியும் போலீஸ்தான். இதில் ஸ்டைல் என்றால் அதில் மிடுக்கு. சுதந்திரத்துக்காக வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனாகவும் சிவாஜியை ரசிக்கமுடியும். தேச ரகசியங்களையே விற்கத்துணியும் ‘அந்தநாள்’ சிவாஜியையும் ரசிக்கமுடியும். ‘பலே பாண்டியா’வில் வருகிற விஞ்ஞானி சிவாஜி வேறு. ‘பாலும் பழமும்’ படத்தில் மருத்துவ விஞ்ஞானி வேறு. கூடுவிட்டு கூடு பாய்வது என்றொரு வார்த்தை உண்டு. அப்படிப் பாய்கிற சக்தி யாருக்கு இருந்ததோ... தன் நடிப்பால், வசன உச்சரிப்பால், உடல் மொழியால், நடையால், பார்வையால் கூடுவிட்டு கூடு பாய்ந்துகொண்டே இருந்ததுதான் அவரின் அளப்பரிய நடிப்புச் சக்தி. அப்படி அவர் தந்ததெல்லாம் நமக்கு, சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு... எனர்ஜி பூஸ்டர்.

‘என்னய்யா சிவாஜி சிவாஜின்னு. பணக்கார கேரக்டர்தானே’ என்று பட்டியலிட்டு, அந்த ஆக்டிங் கங்கையை, ‘பணக்கார’ சொம்புக்குள் அடைத்துப் பார்க்கமுடியாது. குற்ற உணர்ச்சியில் தவித்து மருகி, நண்பன் துரோகம் செய்கிறான் என்று வெதும்பி, சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம் என்று மரண விளிம்பு தொடும் ‘ஆலயமணி’ சிவாஜியும் பணக்காரர்தான். அப்பாவின் சொல்லை மீறமுடியவில்லை, காதலித்தவளை கரம்பிடிக்கமுடியவில்லை என்று இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கும் நேர்மையாக, காதலியின் நினைவுகளிலும் மூழ்கி, மிடுக்குடனும் தவிப்புடனும் இருக்கிற ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியும் பணக்காரர்தான். இரண்டு மகள்களையும் கண்களாக பாவிப்பதும், இதில் ஒருத்தி தன் மகளில்லை என்று தெரிந்து வெறுப்பதும், அதனால் அப்படியே புறக்கணிப்பதும், அந்தஸ்து போய்விடுமே என்று பதறுவதும் இவள் மகளா, அவள் மகளா என்று தவித்துக் கலங்குவதும், இறுதியில் கெளரவத்தை விட அன்பும் பிரியமுமே சாஸ்வதம் என்று புரிந்துகொள்வதுமாக இருக்கிற ‘பார் மகளே பார்’ சிவாஜியும் பணக்காரர்தான்.

‘புதிய பறவை’ சிவாஜி ஒருவிதம். ‘வசந்தமாளிகை’ சிவாஜி இன்னொரு விதம். ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி மற்றொரு விதம். அப்பாவி என்றால் அப்பாவிதான். ஆனால், சூழ்ச்சிகள் ஏதும் தெரியாத அப்பாவி, வெள்ளந்தியான அப்பாவி... இன்னொரு பக்கம் இயலாமை கலந்த அப்பாவி என்றெல்லாம் வெரைட்டி காட்டமுடியுமா. ‘படிக்காத மேதை’ சிவாஜியையும் ‘பாகப்பிரிவினை’ சிவாஜியையும் இப்படித்தான் பிரித்துப் பார்த்து பிரமித்தார்கள் ரசிகர்கள்.

‘பாவ மன்னிப்பு’ சிவாஜி இஸ்லாமியர். ‘ஞான ஒளி’ சிவாஜி கிறிஸ்தவர். ‘வியட்நாம் வீடு’ சிவாஜி பிராமணர். மூன்று திசையாக இருக்கும் இந்த கதாபாத்திரங்களை நடிப்பு எனும் நாலாவது திசைக்குக் கொண்டு வந்து, சகலத்தையும் கலை எனும் ஒரே திசைக்குள் கட்டிப்போடுகிற செப்படிவித்தை, சிவாஜிக்கு மட்டுமேயான கலை.
சிவமாகவும் வருவார். விஷ்ணுவாகவும் வருவார். கர்ணனாகவும் வருவார். கந்தனுக்கு அருகில் உள்ள வீரபாகுவாகவும் வருவார். அம்பிகாபதியாகவும் பாடுவார். மகாகவி காளிதாஸாகவும் பாடுவார். தான்சேன் அவதாரமும் எடுப்பார். கிரேக்க சக்கரவர்த்தியாகவும் ஆளுவார்.ராஜராஜ சோழனாகவும் உலவுவார். வ.உ.சி.யாக, பாரதியாராக, வாஞ்சிநாதனாக, திருப்பூர் குமரனாக, பக்தசிங்காக... அவ்வளவு ஏன்... வயோதிகமான அப்பர் பெருமானாகவும் வருவார். கம்பீரம் குறையாத திருமங்கை ஆழ்வாராகவும் வருவார். பெரியாழ்வாராகவும் தோன்றுவார்.

ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டு பியானோ வாசித்தால், ‘சிவாஜிக்கு பியானோ வாசிக்கவும் தெரியும் போல’ என்று சொல்லுவோம். ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று கிடார் வாசித்தால், ‘அட, கிடாரும் தெரியும் போல’ என்போம். நாகப்பட்டினம் பக்கத்தில் சிக்கல் என்ற ஊரில்தான் சிவாஜி நாகஸ்வர வித்வானாக சிலகாலம் வாழ்ந்திருக்கிறார் என்று இருநூறு காலம் கழித்துச் சொல்லிவிட்டு, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் போட்டுக்காட்டினால் நம்பிவிடுவார்கள். ‘நாயனம் மட்டுமில்லை, மிருதங்கமும் சிவாஜி வாசிப்பார்’ என்று ‘மிருதங்க சக்கரவர்த்தி’யைப் பார்த்தால் சொல்லுவார்கள். ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்றும் சிதார் வாசிப்பார். அவ்வளவு ஏன்... எப்படியும் பத்துப்படங்களிலாவது பியானோ வாசிப்பது போல் சிவாஜி நடித்திருக்கிறார். ஆனால், பத்துப் படங்களிலும் நூறு எக்ஸ்பிரஷன்களைக் காட்டியிருப்பார் என்பதுதான் ஆச்சரியம். சிவாஜி எனும் கலைஞன் எட்டாவது அதிசயம்; எவருக்கும் எட்டாத அதிசயம்.

சிகரெட் பிடிப்பது போல் பல படங்கள். உலகில் எத்தனை பிராண்டுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், சிகரெட் புகைக்கும் ஸ்டைல், பிராண்டுகளின் கணக்கை விட அதிக ஸ்டைல். இயல்பாகப் பிடிப்பது, ஸ்டைலாகப் பிடிப்பது, கோபத்துடன் புகைப்பது, வன்மத்துடன் புகைப்பது, சோகத்துடன் புகைப்பது, சந்தோஷத்தில் புகைப்பது, திருட்டுத்தனம் செய்துவிட்டு புகைப்பது, திருடர்களைப் பிடிக்கச் செல்லும்போது புகைப்பது, நல்லவன் தான்... ஆனால் புகைப்பது. புகைப்பதிலேயே கெட்டவன் என்று வெளிப்படுத்துவது... என ஒரு சிகரெட்டுக்குள் புகையிலை திணிப்பது மாதிரி, நடிப்பைத் திணித்து புகைத்தவர் சிவாஜியாகத்தான் இருக்கமுடியும். இதிலும் சிகரெட் புகைப்பதும், பீடி வளிப்பதும் பைப் பிடிப்பதும் எழுத தனித்தனிக் கட்டுரைகள் தேவை.

சிவாஜியின் ஆகச்சிறந்த படங்கள் ஏராளம். அதேபோல் தோல்விப்படங்களும் தாராளம். ஆனால் எந்தப் படங்களாக இருந்தாலும் அங்கே சிவாஜி பிராண்ட் லேபிள்களை ஒட்டாமல் இருக்கமாட்டார். தன் முத்திரையைப் பதிக்காமல் இருக்கமாட்டார். பக்கம்பக்கமாக வசனங்கள் பேசுகிற சாதுர்யமும் ஞாபக சக்தியும் உண்டுதான். ஒரு விழி உருட்டலில் காட்சியை விவரித்துவிடுவார் சிவாஜி. கழுத்தில் உள்ள ‘டை’ யை கழற்றுகிற விதத்திலேயே சட்டை பட்டனைப் போட்டுக்கொள்கிற விதத்திலேயே, தோள் துண்டை உதறிவிட்டு அணிந்துகொள்கிற விஷயத்திலேயே காட்சியின் கனத்தை நமக்குள் கடத்திவிடுகிற மிகப்பெரிய கெமிஸ்ட்ரி லேப்... நடிப்புப் பல்கலைக்கழகம் சிவாஜி கணேசன்.

அப்பாவை மதிக்கச் சொல்லுகிற படமா? சிவாஜி நடித்திருப்பார். அம்மாவுக்கு பாசம் காட்டுகிற படமா... சிவாஜி நடித்திருப்பார். தங்கை மீது பாசம், தம்பியிடம் எப்படியான பிரியம், உறவை மதிக்கும் பாங்கு, ஊரை நேசிக்கும் மனிதநேயம், பிள்ளைகளிடம் காட்டுகிற வாஞ்சை, எதிராளியிடம் காட்டுகிற திமிர், தோல்வியின் துக்க அடர்த்தி, வெற்றியின் அகல ஆழ உணர்வுகள்... என்று மூன்று தலைமுறை மனிதர்களுக்கு தன் நடிப்பால் சொல்லிக் கொடுத்த சக்கரவர்த்தி... சிவாஜி கணேசன்!

ஜாலியும் கேலியுமான சிவாஜி கேரக்டர்களை வைத்து தனி ஆய்வு நடத்தலாம். சிவாஜியின் வயதான கேரக்டர்களில் அவரின் பாடி லாங்வேஜ் பற்றி பி.ஹெச்டி பண்ணலாம். ‘சாப்பாட்டு ராமன்’ மாதிரியான சிவாஜி, வண்டி இழுக்கும் ‘பாபு’ மாதிரியான சிவாஜி, ‘இருமலர்கள்’ மாதிரியான சிவாஜி, மாலைக்கண் நோயால் அவதிப்படும் ‘தவப்புதல்வன்’ மாதிரியான சிவாஜி, ‘சவாலே சமாளி’ மாதிரியான சிவாஜி, ‘எங்கிருந்தோ வந்தாள்’ மாதிரியான சிவாஜி, போலீஸ் சிவாஜி, வக்கீல் சிவாஜி, கொள்ளைக்கார சிவாஜி, பட்டாகத்தி பைரவன் சிவாஜி, என்றெல்லாம் தனித்தனியே ஆய்வுகள் போல் எழுதினால், சிவாஜியின் நூற்றாண்டு தாண்டியும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். அத்தனை பிரமாண்டமான, மெகா சைஸ் புத்தகம்... டிக்‌ஷனரி... சிவாஜி!

அதனால்தான் வி.சி.கணேசன், சிவாஜி கணேசனானார். சிவாஜி கணேசன்... சிவாஜியானார். சிவாஜி... நடிகர்திலகமானார்!

நடிப்புக்குத் திலகமிட்ட, திலகமிட்டு கெளரவித்த சிவாஜி கணேசன், 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். இன்று அந்த மகத்தான கலைஞனுக்கு 92வது பிறந்தநாள். இன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கின்றன... நூற்றாண்டு கொண்டாடுவதற்கு! 99 ல் இருந்தே கொண்டாடிவிடுவோம் அந்த மகா கலைஞனை! இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் கொண்டாடிக்கொண்டே இருக்கும் தமிழ் உலகம்!

நடிகர் திலகத்தைக் கொண்டாடுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்