தோலின் நிறத்தால் என்னை அசிங்கம் என்றார்கள்: நடிகர் ஷாரூக் கானின் மகள் பதிவு

நிறப் பாகுபாட்டால் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து நடிகர் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஷாரூக் கான் - கவுரி கான் தம்பதியரின் மகள் சுஹானா. ஷாரூக் கான் நடித்த 'ஜீரோ' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்த சுஹானா மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பு பற்றிய படிப்பை மேற்கொண்டு வரும் சுஹானா கடந்த ஆண்டு ஒரு குறும்படம் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதோடு, தான் சந்தித்த நிறப் பாகுபாடு குறித்து சுஹானா பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது பலரால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

"பல விஷயங்கள் தற்போது நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. நாம் சரி செய்ய வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இது எனக்கான பிரச்சினை மட்டுமல்ல, காரணமே இல்லாமல் தாழ்வு மனப்பான்மையுடன் வளரும் ஒவ்வொரு இளம் பெண்/ ஆணின் பிரச்சினை.

எனது தோற்றம் குறித்து சொல்லப்பட்ட சில கருத்துகள் இவை. எனது 12-வது வயதிலிருந்தே, எனது தோலின் நிறம் காரணமாக நான் அசிங்கமாக இருக்கிறேன் எனப் பல ஆண்களும், பெண்களும் கூறியிருக்கின்றனர். இவர்கள் வயதில் பெரியவர்கள், வளர்ந்தவர்கள் என்கிற விஷயத்தைத் தாண்டி, நாம் அனைவருமே இந்தியர்கள். அதனால் நமது தோல் மாநிறமாகத்தான் இருக்கும். ஆம்! நம் நிறங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், கருமை நிறத்திலிருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகியிருக்க முயன்றாலும் உங்களால் அது முடியாது.

உங்கள் சொந்த மக்களையே நீங்கள் வெறுப்பது உங்களது பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. 5 அடி 7 அங்குல உயரமும், சிவப்புத் தோலும் இல்லையென்றால் நீங்கள் அழகில்லை என சமூக ஊடகம், கல்யாணத்துக்குத் துணை தேடும் முறை அல்லது உங்கள் சொந்தக் குடும்பம் என யார் உங்களை ஒப்புக்கொள்ள வைத்திருந்தாலும் அது தவறே.

நான் 5 அடி 3 அங்குலம், பழுப்பு நிறம், இதைப் பற்றி நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நிறப் பாகுபாட்டை நிறுத்துங்கள்" என்று தனது பதிவை முடித்துள்ளார்.

இத்துடன் தனது புகைப்படங்களின் கீழ், தனது தோலின் நிறத்தைக் கருப்பு என்று குறிப்பிட்டு விமர்சித்தவர்களின் கருத்துகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளார் சுஹானா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE