கமலும் ரஜினியும் எத்தனையோ படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். பாலசந்தரின் உருவாக்கம் இரண்டுபேரும். அவரின் ‘அபூர்வ ராகங்கள்’தான் ரஜினியின் முதல் படம். இருவரும் இணைந்து நடித்த முதல்படமும் இதுவே. பிறகு பாலசந்தரின் இயக்கத்திலேயே இருவரும் இணைந்து நடித்தார்கள்.
ஐ.வி.சசி. ஸ்ரீதர் முதலானோர் இயக்கத்திலும் இணைந்து நடித்தார்கள். பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்தார்கள். ரஜினி நடித்த ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் கமல் கெளரவ வேடத்தில் நடித்தார். கமல் நடித்த ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில், ரஜினி ஒரு காட்சியில் தோன்றினார். இப்படி இருவரும் சேர்ந்து கலக்கினார்கள். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இப்படி இருவரும் சேர்ந்து பிரமாதப்படுத்திய படம்தான் ‘ஆடு புலி ஆட்டம்’.
மகேந்திரனின் கதை வசனத்தில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமலும் ரஜினியும் இணைந்து நடித்த படம் ‘ஆடு புலி ஆட்டம்’. இதில் கமல், ரஜினி, கே.நட்ராஜ், முத்தையா, ஜெயச்சந்திரன் முதலானோர் கேங்ஸ்டர் திருடர்களாக நடித்திருந்தார்கள். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாதவர்களுக்கு வழங்குகிற கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதில் நட்ராஜின் பெயர் நட்ராஜ். முத்தையாவின் பெயர் முத்தையா. ஜெயசந்திரனின் பெயர் ஜெயச்சந்திரன். கமல் பெயர்... கமல் அல்ல. மதன். இப்படி கேரக்டர்களின் பெயர்களைக் கொண்டும் கெட்டது பிறகு நல்லது செய்ய திருந்துவதும் என உணர்வுகளைக் கொண்ட அற்புதமான ஆக்ஷன் படமாகக் கொடுத்திருந்தார் எஸ்.பி. முத்துராமன்.
ஒருகட்டத்தில் திருந்திவிடுவார் கமல். ஆனாலும் திருந்தாமல் தவறு மேல் தவறு செய்துகொண்டிருப்பார் ரஜினி. பிரிந்துவிடுவார்கள். தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின், பார்வையற்ற சிறுவனின் நலனுக்காகவே உழைப்பார் கமல். பின்னர் போலீஸ் இன்ஃபார்மராக மாறுவார். கடைசியில் கமலுக்கும் ரஜினிக்கும் சண்டை. இதில் ரஜினியின் பார்வை பறிபோகும். ரஜினி திருந்துவார். போலீஸ் ஸ்டேஷன் செல்வார். கமலுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
இதனிடையே கமல் - சங்கீதா காதல் நிறைவேறாமல் போகும். சங்கீதா கன்னியாஸ்திரீயாகிவிடுவார். அவர்தான் கமலைத் திருத்தியிருப்பார். ஸ்ரீப்ரியா கமலை விரும்புவார். ஆனால் கமல் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார். கடைசியில் சிஸ்டர் சங்கீதாவே, இருவரையும் சேர்த்துவைப்பார்.
கருப்பு வெள்ளையில் வந்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல் மிரட்டியெடுக்கும். அடிக்கடி ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று அடிக்கடி சொல்லுவார். ‘இதுதான் மதன் ஸ்டைல்’ என்று கமல் சொல்லுவார். கமலை வைத்தும் ரஜினியை வைத்தும் எத்தனையோ படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், இருவரையும் இணைத்து இயக்கிய ஒரே படம் ‘ஆடு புலி ஆட்டம்’.
77ம் ஆண்டு, ‘ஆளுக்கொரு ஆசை’, ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆடு புலி ஆட்டம்’ என படங்களை இயக்கினார் எஸ்.பி.முத்துராமன். அதேபோல், விஜயகுமாருடன் ‘ஆறு புஷ்பங்கள்’, சிவகுமாருடன் ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ஜெய்சங்கருடன் ‘காயத்ரி’, கமலுடன் ‘16 வயதினிலே’, ‘ஆடு புலி ஆட்டம்’ முதலான படங்களில் நடித்தார் ரஜினி.
‘உறவோ புதுமை’, ‘வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ’ என்று எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படத்துக்கு இசை விஜயபாஸ்கர். எழுபதுகளில், ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, எண்ணற்ற பாடல்களை ஹிட் பாடல்களாகக் கொடுத்த விஜயபாஸ்கரை, அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை திரையுலகம். கமலின் ஆரம்பக்கால படம்... அதற்கு எஸ்.பி.பி.யின் ஆரம்பகாலக்குரல்... ‘வானுக்கு தந்தை எவனோ’வும் ‘உறவோ புதுமை’யும் கேட்டுப் பார்த்தால் பிரமித்துச் சொக்கிப் போவோம்.
ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், பாலசந்தரின் ‘தப்புத்தாளங்கள்’ முதலான பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ’அன்பு மேகமே இங்கு ஓடிவா’ எனும் ‘எங்கம்மா சபதம்’ பாடலும் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் ‘சம்சாரம் என்பது வீணை’ பாடலும் ’வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்’, ’தப்புத்தாளங்கள்’ படத்தில் ‘அட என்னடா பொல்லாத வாழ்க்கை’ என்பது உள்ளிட்ட ஏராளமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர். கன்னடம் முதலான பல மொழிகளில் இசையமைத்திருக்கிறார்.
77ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, வெளியான ‘ஆடுபுலி ஆட்டம்’ கமலுக்கும் ரஜினிக்கும் மிக முக்கியமான படம். இவர்களின் ரசிகர்களுக்கும்தான். படம் வெளியாகி 43 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றைக்கும் இருவரும் ஆட்டநாயகர்களாகவே இருக்கிறார்கள் என்பதே மாபெரும் சாதனைதான்!
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago