ரியா போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: போதை மருந்து தடுப்புப் பிரிவு தகவல்

மேல்தட்டு வர்க்கத்தினருடனும், போதை மருந்து விற்பவர்களுடன் தொடர்பிலிருந்த போதை மருந்து கும்பலில் ரியா சக்ரபர்த்தி தீவிரமாகச் செயல்பட்ட உறுப்பினர் என்று நீதிமன்றத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

"ஒட்டுமொத்த சூழலைப் பார்த்தால், சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை மருந்து உட்கொண்டவர் என்பது ரியாவுக்குத் தெரிந்திருக்கிறது. அவர் போதை மருந்து உட்கொண்டபோது அவருக்கு அடைக்கலம் தந்து மறைத்து வைத்துள்ளார்" என்று போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றிய விசாரணையில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் இது.

ரியா, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதால் ரியாவின் ஜாமீன் கோரிக்கைக்குப் போதை மருந்து தடுப்புப் பிரிவு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த போதை மருந்து பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுக்கு உதவியது, உடந்தையாக இருந்தது மற்றும் பணம் கொடுத்தது என ரியா செயல்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமுயல் மிராண்டா மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோர் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெற்றுக் கொள்வதற்காகத்தான், போதை மருந்துகளுக்குத் தான் பணம் கொடுத்ததாக ரியா வாக்குமூலம் அளித்துள்ளார். இது சட்டப்படி குற்றம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமான கட்டத்தில் விசாரணை நடைபெற்று வரும்போது ரியாவுக்கு ஜாமீன் கிடைத்தால் அது விசாரணையைப் பாதிக்கும் என்று போதை மருந்து தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

கிரெடிட் கார்ட், பணம் மற்றும் இன்னும் சில பரிவர்த்தனைகள் மூலம் போதை மருந்துகளைக் கொடுத்தனுப்ப ரியா பணம் கொடுத்துள்ளதால் அவர் போதை மருந்துக் கடத்தலில் இருந்ததற்கான போதிய ஆதாரமும் இருப்பதாகவும், சுஷாந்த் போதை மருந்துகளை வைத்துக் கொள்ள, உட்கொள்ளத் தனது வீட்டில் ரியா அனுமதித்ததாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. சுஷாந்தோடு சேர்ந்து ரியாவும் போதை மருந்து வாங்குவதற்கான நிதியை நிர்வகித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE