’’ஜேசுதாஸ் அண்ணா மாதிரி என்னால் பாடமுடியாது. நான் பாடமாட்டேன் என்று மறுத்தார் எஸ்.பி.பி.சார். அதேபோல், ‘ட்ராக்’ பாடியவர்களின் குரலைக் கேட்டுவிட்டு அவர்களை மனதாரப் பாராட்டி, அவர்களின் வாய்ப்புக்கு சிபாரிசு செய்திருக்கிறார் பாலு சார்’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பி. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
எஸ்.பி.பி. குறித்து நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்ததாவது:
வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, அந்தந்த வார்த்தைகளுக்குத் தகுந்தது போல, உச்சரிப்பது எஸ்.பி.பி. சாரின் ஸ்பெஷல். அதாவது நாங்கள் எல்லோரும் நடிக்கும் போது ஒரு வசனத்தைச் சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஷன் கொடுப்போம். அதேபோல், அவர் பாட்டுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பார். எந்த வார்த்தையைப் பாடும்போது எப்பேர்ப்பட்ட எக்ஸ்பிரஷன் கொடுக்கவேண்டும் என்பதை மிக அழகாக உணர்ந்து பாடுவார். ஒரு பாட்டிலேயே, பாட்டு வரியிலேயே, வரிகளை உச்சரிப்பதிலேயே கதைக்கு உண்டான, சூழலுக்குத் தேவையான எமோஷனை, பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார் எஸ்.பி.பி.சார்.
» எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை: ஆந்திர முதல்வருக்கு கமல் நன்றி
» பங்களா இடிப்பு விவகாரம்: ட்விட்டர் பதிவுகளை தாக்கல் செய்ய கங்கனாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
’இதுநம்ம ஆளு’ படத்தில் ‘பச்சைமலை சாமி ஒண்ணு உச்சிமலை ஏறுதின்னு’ என்ற பாடல் டைட்டில் பாடலாக வந்தது. அந்தக் காட்சியில் பாடிக்கொண்டு நான் நடித்திருப்பேன். நானே பாடியிருந்தேன். தெலுங்கில் இந்தப் படத்தை டப் பண்ணினோம். பாலு சார் டப்பிங்கிற்கு வந்தார். வந்தவர் டைட்டில் பாடலைக் கேட்டார். ‘நீங்கதானே பாடினது? நீங்களே பாடிருங்க. பொருத்தமா இருக்கும். நல்லாருக்கும்’ என்றார்.
’இவ்ளோ நல்லாப் பாடிருக்கீங்க. நீங்களே நடிச்சிருக்கீங்க. நீங்களே தெலுங்குலயும் பாடிருங்க. அதான் சரியா இருக்கும். நீங்களே பாடிருங்க. நான் எஞ்சினியர் ரூம்ல உக்கார்றேன்’ என்றார்.
‘இல்லீங்க சார். எனக்கு தெலுங்கு அந்த அளவுக்கு வராது. உச்சரிக்கறது கஷ்டம் சார். எனக்கு கரெக்ட்டா இருக்காது’ என்று சொன்னேன். உடனே அவர், ‘நாங்களெல்லாம் அப்படி நினைச்சிருந்தா, தமிழ்ப் பாட்டெல்லாம் பாடியிருக்க முடியுமா? ஒண்ணு ரெண்டு வார்த்தைகள் அப்படி இப்படின்னு இருக்கும். போகப்போக சரியாயிரும். ஜனங்களும் அதெல்லாம் ஏத்துக்குவாங்க’ என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். கடைசியில் அவரைப் பாடவைப்பதற்குள் படாதாபாடு பட்டேன். என்னை தெலுங்கில் பாடவைக்கவேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்.
அடுத்து... ‘ஆராரோ ஆரிரரோ’ படத்தில் ‘என் கண்ணுக்கொரு நிலவா’ பாட்டு. பாலு சார் வருவதற்கு முன்னதாக ஜானகியம்மா வந்திருந்தார். அவருக்கு பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, கேட்டுக்கொண்டிருந்த ஜானகியம்மா, ‘இந்தப் பாட்டை நீங்களே பாடிருங்களேன். எத்தனையோ பேர்கூட பாடியிருக்கேன். இந்தக் காலத்துல உங்க கூடவும் பாடினதா இருக்கட்டும். நல்லாப் பாடுறீங்க. நீங்களே பாடிருங்க’ என்று சொன்னார்.
உடனே நான், ‘இல்லயில்ல. நான் பாடலை. நான் இந்தப் பாட்டைப் பாடினா நல்லாருக்காது. இந்தப் பாட்டுல நடுவுல மேலேயெல்லாம் போகவேண்டியிருக்கும். அப்படிப் பாடும் போது பிசிறு தட்டிரும்’ என்று சொல்லி மறுத்தேன்.
பிறகு கொஞ்ச நேரத்தில் பாலு சார் வந்தார். அவருக்கு பாட்டைச் சொல்லிக்கொண்டே இருக்கும் போது, திடீரென்று பாலு சார் குறுக்கிட்டார். ‘ஆமாம்... நீங்க ஏன் இந்தப் பாட்டை பாடக்கூடாது? ஜானகியம்மா பாடிட்டாங்கதானே. நீங்களே இந்தப் பாட்டைப் பாடிருங்க’ என்று பாலு சார் பிடிவாதம் பண்ணினார். உடனே ஜானகியம்மா, ‘நானும் அதைத்தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டே இருந்தேன். நீயும் கரெக்ட்டா அதையே சொல்றே. அவர் சொல்லிக்கொடுக்கும் போதே நல்லாருந்துச்சு. அந்த த்வனி, அந்த ஃபீலிங் எல்லாமே நல்லாருந்துச்சு’ என்று சொன்னார்.
‘இல்ல சார். எனக்கு சரியா வராது. மியூஸிக் பண்றேன். கம்போஸ் பண்றேன்னாலும் கூட, இந்தப் பாட்டு எனக்கு கொஞ்சம் கஷ்டம் சார். நீங்க பாடினாத்தான் நல்லாருக்கும். நீங்க பாடுங்க சார்’ என்று எஸ்.பி.பி.சாரிடம் சொன்னேன். அவரும் மிகச்சிறப்பாக பாடினார்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேனென்றால்... எனக்கு மட்டுமில்லை. பாலு சார் சுபாவமே அப்படித்தான். பல பாடல்களை பாலு சார் பாடுவதற்கு முன்னதாக, சிலர் ட்ராக் பாடியிருப்பார்கள். பாலு சார் வந்து அதைக் கேட்பார். ‘இந்த ட்ராக் பாடின வாய்ஸே நல்லாருக்கே. நல்லாப் பாடியிருக்காரே. அவரோட வாய்ஸையே வைச்சுக்கலாம். நல்லாருக்கும். இவரை ஏன் ட்ராக் ஸிங்கரா மட்டுமே நினைக்கிறீங்க’ என்று பல முறை சொல்லியிருக்கிறார் எஸ்.பி.பி. ’ட்ராக் பாடினவரே இந்தப் பாட்டை பாடட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் சொல்லி, ட்ராக் பாடியவர்களை என்கரேஜ் பண்ணினார் பாலு சார்.
இப்படி எல்லாரையும் பாராட்டுபவர் எஸ்.பி.பி. சார். யாரையுமே தன்னுடைய போட்டியாளராக நினைக்காமல், எல்லோரும் வளரவேண்டும் என்கிற மனம் கொண்டவர். அப்படியொரு பெருந்தன்மை இயல்பாகவே இருந்தது அவரிடம். அவரைப் பற்றி நிறைய பாடகர்கள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
எஸ்.பி.பி. சார் பற்றி ரொம்பவே நெகிழ்ந்த விஷயம் இது...
ஜேசுதாஸ் சார் மிகப்பெரிய பாடகர். எஸ்.பி.பி. சாரும் அதே உயரத்தைத் தொட்டவர். ஜேசுதாஸ் சாரை உட்கார வைத்து, அவரது பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்து, பாதபூஜை செய்தார் எஸ்.பி.பி.சார். பாலு சார் மீது எனக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்குமே பெரிய மதிப்பு கூடியது இதைப் பார்த்துவிட்டு.
அப்புறம் இன்னொரு விஷயம்...
‘இது நம்ம ஆளு’ படத்தில், ‘கண்ணுறங்கு பொன்மயிலே நீ கண்ணுறங்கு’ என்ற பாடலை ஜேசுதாஸை பாடவைத்து எடுத்திருந்தேன். இந்தப் பாட்டு வேறொரு படத்துக்காக எடுத்த பாட்டு. இந்தப் படத்துக்கு இந்தப் பாட்டைப் போடலாம் என்று பார்த்தால், ஆனால் பாடல் வரிகள், இந்தப் படத்தின் கதைக்கோ காட்சிக்கோ செட்டாகவில்லை. மறுபடியும் ஜேசுதாஸ் சாரை அழைத்துப் பாடவைக்கலாமென்றால், அவரோ அமெரிக்காவில் இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்டது. இப்போது போல், அங்கே அனுப்பிவைத்துவிட்டு, பாடச் சொல்லி அனுப்பி வைப்பதெல்லாம் அப்போது கிடையாது. அதனால் ஜேசுதாஸ் சார் பாடிய பாடலை, எஸ்.பி.பி. சாரை வைத்து பாடச் சொல்லி எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பாலு சாரை வரவழைத்தேன். அவரும் வந்தார். பாலு சாருக்கு ஜேசுதாஸ் சார் பாடிய பாடலைப் போட்டுக் காட்டினேன். கேட்டவர், ‘முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டார். ’ரொம்பப் பிரமாதமா இருக்கு. ஜேசுதாஸ் அண்ணா அளவுக்கு என்னால பாடவே முடியாது. அவ்ளோ பிரமாதமாப் பாடிருக்கார். முடியவே முடியாது’ என்றார். பிறகு அவருக்கு எல்லாவற்றையும் விளக்கினேன். ’அதனாலதான் உங்ககிட்ட நான் இவ்ளோ ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்’ என்று சொன்னேன். அதன் பின்னர், பாலு சாருக்கு இஷ்டமே இல்லாமல், என்னுடைய வற்புறுத்தலுக்காக பாடிக்கொடுத்தார். அதாவது இன்னொரு பாடகர் மீது அவ்வளவு பெரிய மரியாதை வைத்திருந்தார். ‘அவர் அளவுக்கு என்னால பாடமுடியாது’ என்று தன்னடக்கத்துடன் சொன்னார். அடுத்தவரின் திறமையை மனதாரப் புகழ்பவர் எஸ்.பி.பி.சார். ’ஜேசுதாஸ் சார் பாடினது, ரிக்கார்டுல இருக்கும். நீங்க பாடினது படத்துல வரும் சார்’ என்று சொன்னபிறகுதான் சமாதானமானார்.
இப்படி நிறைய பேர் எஸ்.பி.பி.சாரைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவு விஷயங்களாக இருந்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
சினிமாவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், ரேடியோவைக் கண்டுபிடித்த மார்க்கோனி முதலானோருக்கு நன்றி சொல்லவேண்டும். இந்தத் துறைகளில் நுழைந்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்து, மறைந்துவிடுகிறார்களா கலைஞர்கள். இல்லை. எப்போதும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
எஸ்.பி.பி. சார் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய படத்தில் எனக்காக அவர் பாடியிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குப் பெருமையான விஷயங்கள்.
பாலு சார்... உங்களுக்காக, எத்தனையோ மனிதர்கள் அஞ்சலி செலுத்தி, நெகிழ்ந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஒருவருக்கு பார்வை போய்விட்டது. ‘எஸ்.பி.பி.சார் பாடல்களென்றால் எனக்கு உயிர்’ என்று சொன்ன அந்த ரசிகரைத் தேடிச் சென்று, அவரைப் பார்த்தீர்கள். அவரைக் கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டீர்கள். அவருக்காகப் பாடினீர்கள். நேரில் வந்து, உங்களை அணைத்து பிரார்த்தனை செய்யமுடியவில்லை. ஆத்மார்த்தமாக, என் மனதில் உங்களை அணைத்துக்கொண்டு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்கிறேன். உலகம் உள்ளவரை எஸ்.பி.பி. சாரை எல்லோரும் நினைத்துக்கொண்டே இருப்பார்கள்.’’
இவ்வாறு கே.பாக்யராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago