ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களைக் கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவார்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும் நல்ல பாடல்களைக் கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவார்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

டேனி பாயல் இயக்கத்தில் வெளியான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று அடக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். பல்வேறு விருதுகள் வென்றிருந்தாலும் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பது ஏ.ஆர்.ரஹ்மான் அளிக்கும் பேட்டிகளிலிருந்து தெரியும்.

இந்நிலையில் தற்போது சுதா ரகுநாதனின் யூடியூப் சேனலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார். அதில் ஆஸ்கர் விருதுகள் வென்றது குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது:

''அதை ஒரு சிறந்த கவுரவமாகக் கருதுகிறேன். இனவெறி நிறைந்த, அடுத்தவரை மிதித்து முன்னேறும் உலகில் இதை ஒரு சாதனையாகத்தான் நினைக்கிறேன். எங்கள் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் அது ஒரு ஆசீர்வாதம்.

ஆனால், ஆஸ்கர் வாங்கியிருந்தாலும் நல்ல பாடல்களைக் கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவார்கள். ஆஸ்கர் விருது மூலம் நிறைய மரியாதையும், பெயரும் கிடைத்தது. அதன்பிறகுதான் அடுத்தடுத்த விஷயங்களில் இன்னும் கடினமாக உழைக்க ஆரம்பித்தோம்''.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE