பங்களா இடிப்பு விவகாரம்: ட்விட்டர் பதிவுகளை தாக்கல் செய்ய கங்கனாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே, மும்பையில்பாலி ஹில் பகுதியில் உள்ளஅவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இதனிடையே, கங்கனாவின் அவசர மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க தடைவிதித்தது. எனினும், தனது பங்களாவின் 40 % இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கனா மனு தாக்கல் செய்தார். இதை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கங்கனா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் பிரேந்திர சராப் வாதிடுகையில், ‘‘சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கங்கனா குறித்து கடுமையாக விமர்சித்தார். அதற்கு கங்கனா ட்விட்டரில் பதிலளித்தார். இதனால்தான் கங்கனாவின் பங்களாஇடிக்கப்பட்டது’’ என்றார்.

சஞ்சய் ராவத் பேச்சின் குறிப்பிட்ட பகுதி வீடியோ காட்சி ஒன்றையும் அவர் வெளியிட்டார். எனினும், ‘கங்கனா என்று பெயர்குறிப்பிட்டு சஞ்சய் ராவத் எதுவும்கூறவில்லை’ என்று சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத்தின் முழு பேட்டியையும் கங்கனாவின் ட்விட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்யுமாறு கங்கனாவின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE