நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் வீடுகளை வாங்க பாக். முடிவு

By செய்திப்பிரிவு

இந்தி நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் ஆகிய இருவருமே பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இருவருமே இந்தியாவிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களின் மூதாதையர் வீடுகள் பெஷாவர் நகரில் உள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் தொல்பொருள் துறை தலைவர் டாக்டர் அப்துஸ் சமத் கூறியதாவது:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள திலீப் குமார், ராஜ் கபூர் ஆகியோரின் வீடுகள் பாரம்பரியம் மிக்கவை. அந்த வீடுகளை அரசே வாங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ் கபூரின் வீடு பெஷாவர் நகரில் அமைந்துள்ளது. இது கபூர் ஹவேலி என அழைக்கப்படுகிறது. ராஜ் கபூர் வீடு 1918 முதல் 1922-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. இந்த வீட்டில்தான் ராஜ்கபூர் பிறந்தார்.

பெஷாவரின் கிஸ்ஸா கவானி பஜார் பகுதியில் திலீப் கபூர் வீடு அமைந்துள்ளது. திலீப் கபூரின் வீடு 2014-ல் தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை இடித்து, வணிக வளாகமாக மாற்ற அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் தடுத்துவிட்டனர். இந்த 2 வீடுகளையும் வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு டாக்டர் அப்துஸ் சமத் கூறினார் - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE