என்றும் எஸ்பிபியின் குரல் சுவடுகளில்: பிரிந்து வாடும் மேடைப் பாடகர்கள்

By செய்திப்பிரிவு

எஸ்பிபியின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அவரது பாடல்களை ஒட்டியே தங்களின் தொழில் வாழ்க்கையை வடிவமைத்த சிலர் இருக்கின்றனர். அப்படியான இரண்டு கலைஞர்கள் எம்.ஜே.ஸ்ரீராம் மற்றும் மவுன ராகம் முரளி. இவர்கள் இருவரின் குரல்களுமே எஸ்பிபியைப் போல இருப்பதாகப் பல ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் எஸ்பிபி பற்றிய தங்கள் நினைவுகளை நமக்காகப் பகிர்கின்றனர்.

எம்.ஜே.ஸ்ரீராம் எஸ்பிபி ரசிகர் அல்ல, எஸ்பிபியின் பக்தர். சென்னையில் எஸ்பிபி மற்றும் இளையராஜாவின் பாடல்களை மட்டுமே பாடி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார் ஸ்ரீராம். கிட்டத்தட்ட 550 வாரங்களுக்கு மேல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மிகப் பிரபலம். இந்த ஊரடங்கு காலத்திலும் சமூக ஊடகம் மூலமாக ஸ்ரீராம் பாடல் பாடி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியை இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலோடு ஆரம்பிக்கிறார் ஸ்ரீராம். ஆனால் இதற்காகத்தான் தனியாக எதுவும் திட்டமிடுவதில்லை என்கிறார்.

"நான் எந்த முன் தயாரிப்பும் செய்வதில்லை. விரும்பிக் கேட்கும் பாடல்களையும், எஸ்பிபி பாடிய எண்ணற்ற பாடல்களில் என் மனதில் தோன்றுவதையும் பாடுவேன். இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது ஒரு ஆசிர்வாதம்தான். சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் தரணி உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பல வாரங்கள் வந்து ரசித்துள்ளனர். வீட்டில் கேட்பதை விட என் குரல் மூலமாக அவர்களால் அந்த எஸ்பிபி பாடல்களை ரசிக்க முடிந்திருக்கிறது என்பது பெரிய ஆசியாக நான் நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சில வாரங்களில் எஸ்பிபியே வந்திருக்கிறார். அவருக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். நான் தொடர்ந்து பாடுவதைப் பற்றிப் பல முறை பாராட்டியுள்ளார். அவர்தான் என்றும் என் ஆசான். அவரது அடிச்சுவடுகளைத் தொடரவே நான் விரும்புகிறேன்" என்கிறார் ஸ்ரீராம்.

மவுன ராகம் முரளியின் இசைக் குழு கடந்த 12 வருடங்களில் எஸ்பிபியுடன் 78 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். அவரோடு அதிக நிகழ்ச்சிகளை நடத்திய இசைக் குழு இவர்களே. எஸ்பிபி மேடையில் இருக்கும்போது அவரது பாடல்களை முரளி பாடியதில்லை. அசலே இருக்கும்போது நானெப்படி பாடுவது என்று ரசிகர்களிடம் சொல்வார். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த விதியைத்தான் மீறியது ஏன் என்று இன்று புரியவில்லை என்கிறார்.

ஊரடங்கு காலத்தில், தினமும் 2 மணி நேரம் இசை நிகழ்ச்சியை, ஃபேஸ்புக் மூலம் ஒளிபரப்பி வருகிறார் முரளி. இதில் 100-வது நாளான ஜூலை 18 அன்று, எஸ்பிபியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். விருப்பத்துடன் கலந்துகொண்ட எஸ்பிபி பாடவும் செய்திருக்கிறார். அதே நேரம் முரளியும் எஸ்பிபியின் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபின் வீடு திரும்பிய முரளி, நம்மிடம் பேசும்போது குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

"உங்கள் பாடலை உங்கள் முன் பாடுவது இதுதான் முதலும் கடைசியும் என்றேன். அவர் என்னை ஊக்குவித்து, பாராட்டி, சொல்லிக் கொடுக்கவும் செய்தார். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் இந்த வகையில் உண்மையாகும் என்று நான் நினைக்கவேயில்லை.

இனி எனது எல்லா இசைக் கச்சேரிகளிலும் எஸ்பிபி பாடல்களை மட்டுமே பாடவுள்ளேன். இன்னும் அதிகமான நிகழ்ச்சிகளை நான் தீவிரமாகத் திட்டமிடுவேன். என்னை அவரது குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து அன்பு காட்டியவர். அவருக்கான அஞ்சலியாக அவரது பக்திப் பாடல்களையும் பாடுவேன்.

தமிழக காவல்துறையின் பணிகளைப் பாராட்டி 7 நிமிடப் பாடல் ஒன்றை எஸ்பிபியின் குரலில் பதிவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விதி அதை என்னிடம் திணித்துவிட்டது. நான் அதைப் பாடப் போகிறேன்.

மவுன ராகம் இசைக் குழுவுடன் கடைசியாக எஸ்பிபி, மதுரையில், ஜனவரி 26 அன்று இசை நிகழ்ச்சி நடத்தினார். அவரது கடைசி பொது இசை நிகழ்ச்சி ஜூலை 18 அன்று நடந்திருக்கிறது. அதன் பிறகு ஜூலை 27 அன்று ஒரு பதிவுக்காக மூன்று நாட்கள் ஹைதராபாத் சென்றார். அதன் பிறகுதான் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

பிப்ரவரி 14, 2008 அன்று ரொமான்டிக் எஸ்பிபி என்ற நிகழ்ச்சியின் மூலம்தான் எங்கள் நட்பு வலுப்பெற்றது. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் அவரோடு ஒரு நிகழ்ச்சி திட்டமிடுவேன். நாங்கள் உலகம் முழுக்கச் சுற்றினோம். குறைந்தபட்ச இசைக் கருவிகளை வைத்து கச்சிதமாக இசையமைப்பதற்கு என்றுமே எங்கள் இசைக்குழுவை அவர் பாராட்டுவார்.

மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கு நான் சொல்லும் 25 பாடல்களில் 15 பாடல்களை அவர் தேர்ந்தெடுப்பார். ஆனால் எங்களுக்குள் புரிதல் அதிகமானபின் நான் மிகச்சரியாக 15 பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். அவரது அரிய பாடல்களும் அதிலிருக்கும். அதை எஸ்பிபி மறுப்பின்றி பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்தபின்னும் எங்களைப் பாராட்டிப் பேசி பதிவு செய்து அனுப்புவார்" என்கிறார் முரளி.

- ஸ்ரீனிவாச ராமானுஜம், சோமா பாசு (தி இந்து - ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்