தொழிலாளியின் காலில் விழுந்த எஸ்பிபி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

ஐயப்பன் கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளியின் காலில் விழுந்த எஸ்பிபியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.

இரங்கல்கள் மட்டுமன்றி எஸ்பிபி அளித்த பேட்டிகள், மேடைக் கச்சேரியில் எஸ்பிபியின் குறும்பு உள்ளிட்ட வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாயின. அதில் பலராலும் பாராட்டப்பட்ட ஒரு வீடியோ சபரிமலை ஐயப்பன் கோயிலில் எடுக்கப்பட்டுள்ளது.

பம்பை நதியிலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல, சுமையாளிகள் தூக்கிச் செல்லும் டோலி இருக்கும். சேர் மாதிரி இருக்கும் இந்த டோலியில் உட்காரவைத்து, நால்வர் தூக்கி நடந்தே ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

அப்படியொரு முறை டோலியில் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார் எஸ்பிபி. அப்போது டோலியில் உட்காரும் முன்பு, தன்னைத் தூக்கிக்கொண்டு போகும் அனைத்துத் தொழிலாளிகளின் காலைத் தொட்டு வணங்கியுள்ளார் எஸ்பிபி. பின்பு டோலியில் அமர்ந்தவுடன், தொழிலாளிகள் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை நேற்று முதல் சமூக வலைதளத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். எந்த அளவுக்கு எளிமையான மனிதராக இருந்திருக்கிறார் எஸ்பிபி என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

எஸ்பிபி அவருடைய பாடல்களால் மட்டுமல்ல, பண்பாலும் கவனம் ஈர்த்த கலைஞராகத் திகழ்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE