’உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா?’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பொட்டுவைத்த முகமோ’, ‘தேன்சிந்துதே வானம்’, ‘நந்தா நீ என் நிலா’;  - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள் 

By வி. ராம்ஜி

எஸ்.பி.பி... தமிழ் சினிமாவின் இன்னொரு மூன்றெழுத்து மந்திரம். இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை. இவரின் குரலின் கேட்காத செவிகளே இருக்கமுடியாது. சிலர் பேசினால் நன்றாக இருக்கும். சிலர் பாடினால்தான் நன்றாக இருக்கும். ஆனால், எஸ்.பி.பி.யின் குரல், குலோப்ஜாமூன் குரல். ஜீராவின் ஊறிய ஜாமூனைப் போல், அப்படியொரு இனிமையான குரல். பேசினாலும் அப்படித்தான். பாடினாலும் அவ்விதம்தான்!

அன்றைக்கெல்லாம் கோயில் விழாக்களென்றால் பாட்டுக்கச்சேரி நிச்சயமாக இடம்பெறும். உள்ளூர் கச்சேரிக்காரர்கள், சினிமாப் பாடல்களை அப்படியே பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரின் குரலுக்குத் தகுந்தபடி பாடுவதற்கு, இரண்டு மூன்று பாடகர்கள் இருப்பார்கள். எஸ்.பி.பி.யின் பாடலைப் பாடுபவர் எழுந்து மைக் பிடித்தாலே அப்படியொரு கைதட்டலும் விசிலும் பாடுவதற்கு முன்பே அதிரவைக்கும்.

‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடல்தான் அன்றைக்கு பெல்பாட்ட இளைஞர்களின் மவுத்டோன் பாடல். எப்போதும் பாடிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பாட்டில் ‘பபபபபப்பாபா... பபபபபபபா’ என்றெல்லாம் எஸ்.பி.பி. ஹம்மிங்கில் விளையாடிவிட்டு பாடலைத் தொடருவார். கிறுகிறுத்துப் போனார்கள் ரசிகர்கள்.
ஜெமினி கணேசனுக்கு ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்று பாடியதுதான் முதல் பாடல். ஆனால் அதற்குள் வந்துவிட்டது எம்ஜிஆருக்காக பாடிய ‘ஆயிரம் நிலவே வா’. அன்றைக்கு டாப் மோஸ்ட் இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வி.யும் பாடவைத்தார்கள்.

‘அவள் ஒரு நவரசநாடகம்’ என்றும் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என்றும் ‘வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்றும் எம்ஜிஆருக்குப் பாடியது தனி ஸ்டைலாக இருந்தது. ‘நீ எனக்காகப் பாடுற மாதிரி பாடாதே. நீ எப்படிப் பாடுவியோ, அப்படியே பாடு. நான் பாத்துக்கறேன்’ என்று சிவாஜி சொல்ல, ‘பொட்டு வைத்த முகமோ’ என்று பாடினார்.

‘நான் அவனில்லை’ படத்தில் ஜெமினிக்கு ‘ராதா காதல் வராதா’ என்ற பாடல் அப்போது அட்டகாசமாக புதுரத்தம் பாய்ந்த பாடலாக அமைந்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில், கமலுக்கு ‘கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே’ என்ற பாடல், மைக் பாடலாக அமைந்தது. இதேபோல், ‘பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் கமலுக்கு ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடலும் மைக் பாடலாக ஹிட்டடித்தது.

விஜயகுமாருக்கு ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலும் ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடலும் ஏகப்பட்ட சங்கதிகளுடன் அன்றைக்கு எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடலாக அமைந்தது.

எம்ஜிஆருக்கு ‘அவள் ஒரு நவரசநாடகம்’ தனித்துத் தெரிந்தது. சிவகுமாருக்கு ‘தேன் சிந்துதே வானம்’ முதலான பாடல்கள் அதுவொரு குரலாக த்வனியாக இருந்தன. ’பாடும்போது நான் தென்றல்காற்று’ பாடலில் எம்ஜிஆருக்கு அப்படியொரு ஸ்டைலுடன் பாடியிருந்தார்.

’எங்கள்வீட்டு தங்கத்தேரில் எந்த மாதம் திருவிழா’ என்ற பாடலும் அப்படித்தான். ‘அவள் ஒரு தொடர்கதை’யில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, அப்போது கைதட்டல் பெறுவதற்காகவும் ரசிகர்களைக் கவர்வதற்காகவும் மேடைகளில் பாடப்பட்டது.

‘மன்மத லீலை’யில் ‘ஹலோ மைடியர் ராங்நம்பர்’ என்ற பாடலைக் கேட்டால் கமல் பாடுவது போலவே இருக்கும். ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில், இரண்டு பாடல்கள்தான். இரண்டுமே எஸ்.பி.பி.யின் தேன் குரலில் வந்தன. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலும் ‘இலக்கணம் மாறுமோ’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

ஜி.கே.வெங்கடேஷ் இசையில், ‘தொடுவதென்ன தென்றலோ’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் இசையில் ‘தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு’ பாடலும் நம்மை தாலாட்டும்.

இப்படி எழுபதுகளில், கருப்பு வெள்ளை காலத்தில் ஏராளமான பாடல்களை, அன்றைக்கு உள்ள நடிகர்களுக்குத் தக்கபடி பாடினார். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கமலுக்கான எல்லாப் பாடல்களும் எஸ்.பி.பி.தான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘பாரதி கண்ணம்மா’, இனிமை நிறைந்த உலகமிருக்கு’ என்ற பாடல்களெல்லாம் கமல் பாடுகிறாரா எஸ்.பி.பி. பாடுகிறாரா என்று நம்மை குழப்பும்.

அதில், ரஜினிக்கு, ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலும் ‘பொல்லாதவன்’ படத்தில், ‘நான் பொல்லாதவன்’ பாடலும் ‘பில்லா’ படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா’ பாடலும் ரஜினியே பாடுவது போல் பாடி அசத்தியிருப்பார்.

‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் சிவசந்திரனுக்கு ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்ற பாடலில் எஸ்.பி.பி.யும் கொஞ்சுவார். வயலினும் குழையும். சங்கர் கணேஷின் இசையில் ‘நீயா’ படத்தில், ‘ஒரே ஜீவன்’ பாடலும் ‘நான் கட்டில் மீது கண்டேன்’ பாடலும் சொக்கவைக்கும்.

யாருக்குப் பாட வேண்டும் என்பதையும் எந்தச் சூழலுக்கான பாடல் என்பதையும் எந்தவிதமான பாவங்களைக் கொண்ட பாடல் என்பதையும் முழுவதுமாக அறிந்து உணர்ந்து அநாயசமாகப் பாடிவிட்டுச் சென்றுவிடுவார் எஸ்.பி.பி. பிறகு அந்தப் பாடலுக்கான காட்சிக்கு நடிகர்கள் அவர் பாடியதற்குத் தக்கபடி நடிக்கவேண்டியிருந்தது.
அப்படித்தான்... தேங்காய் சீனிவாசனும் ஜெய்கணேஷும் பாடுகிற பாட்டு. ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ என்ற பாட்டு. எம்.எஸ்.வி.யும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடியிருப்பார்கள். ‘இலக்கணம் மாறுமோ’ பாடலை எஸ்.பி.பி. பாடிய விதத்தைக் கேட்டு சிலிர்த்துக் கண்ணீர் விட்டார் மெல்லிசை மன்னர். அதேபோல், இந்தப் பாடலை பாடி முடித்ததும் எஸ்.பி.பி.யை அப்படியே கட்டியணைத்துக்கொண்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அப்படி பாலுவை கட்டியணைத்துக்கொள்ள நிலவுலகில் மெல்லிசை மன்னர் காத்துக்கொண்டிருக்கிறாரோ? ‘வான் நிலா நிலா அல்ல என் பாலுவே நிலா’ என்று கவியரசர் அங்கே மாற்றி எழுதித்தருவாரோ?

‘ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது’ என்று பாடியதைக் கேட்டு மகிழ்ந்த ரசிகக்கூட்டம் இனி நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் பாடும்நிலாவை, பாடும் நிலா பாலுவை நினைத்து நெகிழ்ந்துகொண்டே இருக்கப் போகிறோம்.

கவிஞர்கள் நிலாவை பெண்களுக்கு உவமையாகத்தான் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த உலகில், நிலாவை ஆணுக்கு உவமையாக, அடைமொழியாக மாற்றிக்கொண்ட ஒரே பாட்டுடைத்தலைவன்... பாடும் நிலா பாலுவாகத்தான் இருக்கமுடியும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்