’’எஸ்.பி.பி... மோட்டார் பைக், கூலிங்கிளாஸ், டைட் பேண்ட்; ஒல்லி உடம்பு;  எஸ்.பி.பி. பாட்டு ரிக்கார்டிங்னா, ஸ்கூலுக்கு கட் அடிச்சிருவேன்!’’ - முக்தா சீனிவாசன் மகன் உருக்கம்

By வி. ராம்ஜி

’’மோட்டார் பைக்கில், கூலிங்கிளாஸும் ஒல்லி உடம்புமாக டைட் பேண்ட் அணிந்து கொண்டு ஸ்டைலாக வருவார் எஸ்.பி.பி. அப்பாவின் படத்துக்கு அவர் பாடுகிற பாடல் ரிக்கார்டிங் என்றால், அன்றைக்கு ஏதாவது சொல்லி ஸ்கூலுக்கு கட் அடித்துவிடுவேன். அற்புதமான பாடகர், மனிதர்’’ என்று இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த 51 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று செப்டம்பர் 25ம் தேதி காலமானார்.

அவரின் மறைவு குறித்து திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வருத்தங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி எஸ்.பி.பி., குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:

’’அற்புதமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். என்னுடைய இளம் வயதிலேயே அவரின் குரலும் அவர் பாடுகிற விதமும் என்னை ரொம்பவே ஈர்த்தன. எங்களின் முக்தா பிலிம்ஸ் தயாரித்த படங்கள் பலவற்றில் அவர் பாடியிருக்கிறார். ’ அருணோதயம்’, சூரிய காந்தி, பேரும் புகழும், இமயம், அவன் அவள் அது, பொல்லாதவன், சிம்லா ஸ்பஷல், கீழ் வானம் சிவக்கும், சிவப்புசூரியன், தம்பதிகள், ஒரு மலரின்,பயணம், பிரம்மச்சாரி , ராஜபாண்டி முதலான படங்களிலெல்லாம் பாடியிருக்கிறார்.

சாவித்திரி அம்மா, ‘குழந்தை உள்ளம்’ படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் ‘முத்துச்சிப்பிக்குள்ளே’ என்ற பாடலை எஸ்.பி.பி. பாடியிருந்தார். இந்தப் பாடலையெல்லாம் சொல்லி, சாவித்திரி அம்மாதான் ‘இந்தப் பையன் நல்லாப்பாடுறான். வாய்ப்பு கொடுங்க. பெரியாளா வருவான்’ என்று சொன்னார்கள். அப்பாவும் அந்தப் பாடலைக் கேட்டு ரசித்தார். பிறகு எங்கள் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தில், 23 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். முதல் படத்தில் பாடிய பாட்டின் சம்பளம் 750 ரூபாய்.

மோட்டார் பைக்கில்தான் அப்போது வருவார். டைட் பேண்ட் போட்டிருப்பார். கூலிங் கிளாஸ் போட்டிருப்பார். வந்தவுடனே, பாடலை தெலுங்கில் எழுதிவைத்துக்கொள்வார். கே.வி.மகாதேவன் மாமாவிடம் இருந்த புகழேந்தி மாமாவிடம், ‘ர,ற, ல,ள, ழ’ வெல்லாம் கேட்டுக்கொள்வார்.

இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது... ‘எங்கள் வீட்டுத் தங்கதேரில் இந்த மாதம் திருவிழா’ பாடலை அவ்வளவு அழகாகப் பாடினார். காலையில் வந்தவர் மதியம் இரண்டரை, மூன்று மணியானாலும் பாடிக்கொண்டே இருந்தார். நடுவில் சாப்பிடவே இல்லை. அவரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்போது ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன்.

‘சூர்யோதயம்’, ‘அவன் அவள் அது’, ’பொல்லாதவன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’னு நிறைய படங்களுக்குப் பாடினார். எங்கள் படத்துக்கு எஸ்.பி.பி சாரின் ரிக்கார்டிங் நடக்கிறதென்றால், அன்றைக்கு ஏதாவது சொல்லி ஸ்கூலுக்கு கட் அடித்துவிடுவேன்.

கடுமையான உழைப்பு. அசராமல் பாடினார். தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். விதம்விதமாகப் பாடினார்’’

அவருடைய அந்த சிரித்த முகத்தை இனி பார்க்கமுடியாது. ஆனாலும் அந்தக் குரல், அவருடைய குரல், எஸ்.பி.பி. இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இருக்கிறார் என்றே நம்மை நினைக்கச் செய்யும். அவர் தன் குரலால் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

இவ்வாறு முக்தா ரவி உருக்கத்துடன் தெரிவித்தார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE