எஸ்பிபி மறைவு; துக்க நேரத்தில் மனமார்ந்த இரங்கல்: மருத்துவமனை நிர்வாகம்

By செய்திப்பிரிவு

எஸ்பிபியின் குடும்பம், நண்பர்கள், நல விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் இழப்புக்கு, இந்த துக்க நேரத்தில் மனமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே எஸ்.பி.பி மறைவு குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஆகஸ்ட் 5-ஆம் தேதி எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்குக் கடுமையான கோவிட்-19 காரணமாக வந்த நிமோனியாவால் ஆகஸ்ட் 14 முதல் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எங்கள் மருத்துவர் குழு அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தது. செப்டம்பர் 4 அன்று அவருக்குக் கரோனா தொற்று நீங்கிவிட்டது என்பது தெரியவந்தது.

இன்று காலை ஏற்பட்ட பின்னடைவினால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவிகளும், மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகளையும் தாண்டி, அவரது நிலை இன்னும் கவலைக்கிடமானது. அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்தது.

செப்டம்பர் 25, மதியம் 1:04 மணியளவில் அவர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரது குடும்பம், நண்பர்கள், நல விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் இழப்புக்கு, இந்த துக்க நேரத்தில் மனமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE