ஒருவரது வியாபாரத்தை இன்னொருவர் நசுக்குவோம்; 2018 டிசம்பர் 21 நிலை: விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

ஒருவரது வியாபாரத்தை இன்னொருவர் நசுக்குவோம் என்றும், 2018 டிசம்பர் 21 நிலையைப் பார்த்திருக்கிறேன் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. சில தினங்களுக்கு முன்புதான் தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சில படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு எதுவுமே இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனிடையே, விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் தனது படங்கள் திரையரங்க வெளியீடுதான் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதனால் அவசரமாகப் படத்தை முடிக்க எண்ணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேட்டிக்கு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் "முடிக்காமல் வைத்திருக்கும் படத்தினால் உபயோகமில்லை. படங்களை முடித்துவைத்தால் மட்டுமே திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிட வாய்ப்பிருக்கும்" என்று தெரிவித்தார்.

தனஞ்ஜெயனின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"முடிக்கப்படாத திரைப்படங்கள் தொடர்பான உங்களது பார்வையை நான் மதிக்கிறேன். நான் எனது 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படத்தைப் பற்றி மட்டுமே பேசினேன், ஒரு தயாரிப்பாளர்/நடிகராக எனக்கு எது பொருந்தும் என்று பேசினேன். மேலும், ரசிகனாக என் பார்வையைச் சொன்னேன்.

'காடன்'/ 'ஆரண்யா' ஏற்கெனவே இறுதிக்கட்டப் பணியில் உள்ளது. ஈராஸ் தயாரிப்பு நிறுவனம் திரையரங்கில் வெளியிட விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பை என்னால் முடிக்க முடியும். ஆனால், இதற்கு முன் நடந்ததைப் போலவே வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் எண்ணற்ற திரைப்படங்களின் வரிசையில் நானும் காத்திருப்பேன். ஒருவரது வியாபாரத்தை இன்னொருவர் நசுக்குவோம்.

இந்த மாதிரியான ஒரு நிலையை ஏற்கெனவே 2018 டிசம்பர் 21 அன்று வெளியான படங்களில் நான் பார்த்திருக்கிறேன். நான் மிகவும் முன்னெச்சரிக்கையுடன், எனக்கும் துறைக்கும் என்ன நல்லது என்பதைச் செய்கிறேன். இந்தச் சூழல் நம் கையை மீறிச் சென்றுள்ளதால் காத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்ப்பதே நல்லது.

என் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதை நான் செய்கிறேன். படப்பிடிப்புக்குச் சென்று விரைவில் முடிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் என் வாழ்த்துகள்".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி 'சீதக்காதி', 'மாரி 2', 'கனா', 'அடங்க மறு' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்தப் படங்களின் வெளியீட்டுப் போட்டியைக் கட்டுப்படுத்த தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எந்தவொரு தயாரிப்பாளரும் வெளியீட்டிலிருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE