திரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா? - குஷ்பு கேள்வி

By செய்திப்பிரிவு

திரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு பாலிவுட் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளது. இவரது மரணத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடங்கிய விசாரணையில், பல முன்னணி நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட பலரை போதை மருந்து தடுப்புப்பிரிவு கைது செய்துள்ளது. மேலும், பல்வேறு முன்னணி நடிகைகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விசாரணையில் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரை விசாரணைக்கான நோட்டீஸ் விடுக்கப்பட்டது. தற்போது ரகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வெறும் நடிகைகளிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன், திரைத்துறையில் பெண்கள் மட்டும் தான் போதை மருந்து பழக்கம் இருப்பவர்களா, ஆண்கள் கிடையாதா? இல்லையென்றால் பெண்களை மட்டும் தான் கேள்வி கேட்டு விசாரணை செய்து, சம்மன் அனுப்பி, அவதூறு பேசவேண்டும் என்பது விதியா. இந்த வழக்கம் எனக்குப் புரியவில்லை"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE