காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே உதாரணம் - கணவர் மீது புகாரளித்தது குறித்து பூனம் பாண்டே பகிர்வு

By செய்திப்பிரிவு

கவர்ச்சியான புகைப்படங்கள், காணொலிகள், அதிரடியான சவால்கள் என சமூக ஊடகத்தில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புபவர் பூனம் பாண்டே. இந்தியில் 'நாஷா' என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் திரைப்படங்களைத் தாண்டி இணையத்தில் இவர் உருவாக்கும் சலசலப்பினால்தான் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை பூனம் பாண்டே காதலித்து வந்தார். இவர்களுக்குக் கடந்த 10 ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பூனம் - சாம் ஜோடி கோவாவில் தங்கள் தேனிலவைக் கொண்டாடி வந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று தனது கணவர் சாம் மீது பூனம் பாண்டே, கோவா போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் சாம் தன்னை அறைந்ததாகவும், தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பூனம் பாண்டே கூறியுள்ளார். பூனம் பாண்டேவின் புகாரையடுத்து சாம் பாம்பே நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன் கணவர் மீது புகாரளித்ததற்கான காரணம் குறித்து பூனம் பாண்டே கூறியுள்ளதாவது:

எனக்கும் சாமுக்கு இடையே தர்க்கம் ஏற்பட்டது, அது முற்றிய நிலையில் அவர் என்னை தாக்கத் தொடங்கினார். அவர் என்னை கழுத்தை நெறித்தார். நான் இறக்கப் போகிறேன் என்றே நினைத்தேன். அவர் என் முகத்தில் குத்தி, என் தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலின் முனையில் என் தலையை மோதினார். எப்படியோ அவரது பிடியிலிருந்து விலகி அந்த அறையை வெளியே ஓடி வந்தேன். ஓட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு போன் செய்ததால் அவர்கள் வந்து சாமை கைது செய்தனர். என்னிடமிருந்தும் புகார் பெற்றுக் கொண்டனர்.

நாங்கள் காதலிக்கும் காலத்திலேயே அவரால் நான் பலமுறை மருத்துவமனைகளில் இருந்துள்ளேன். இந்த மோசமான உறவை நான் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நான் நம்பியதுதான். எங்களை எப்போதும் ஒரு சிறந்த ஜோடியாக நான் உருவகித்துக் கொண்டேன். அவரது அதீத காதலாலாலும், பாதுகாப்பின்மையாலும் கோபம் வெளிப்படும். இவை அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, இது நல்ல முடிவாக இருக்கவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே சிறந்த உதாரணம்.

இவ்வாறு பூனம் பாண்டே கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE