கங்கணாவுக்கு மட்டும் ஏன் சம்மன் அனுப்பவில்லை? - போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு நக்மா கேள்வி

By ஐஏஎன்எஸ்

கங்கணாவுக்கு ஏன் என்சிபி சம்மன் அனுப்பவில்லை என்று நடிகை நக்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்குக்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக் காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷிரத்தா கபூர் ஆகிய 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். 4 பேரையும் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்கணாவுக்கு ஏன் என்சிபி சம்மன் அனுப்பவில்லை என்று நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தான் போதைப் பொருள் உட்கொண்டதாக ஒப்புக் கொண்ட கங்கணாவுக்கு ஏன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பவில்லை? நடிகைகளின் வாட்ஸ்-அப் சாட் அடிப்படையில் மட்டும்தான் அவர்கள் சம்மன் அனுப்புவார்களா? அந்த தகவலை ஊடகங்களுக்கு கொடுத்து நடிகைகளின் பெயரை கெடுப்பதுதான் என்சிபியின் வேலையா?

இவ்வாறு நக்மா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் திரைக்கு வந்த புதிதில் போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக கங்கணா கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE