ஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும்: சீனு ராமசாமி

By செய்திப்பிரிவு

ஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் 150 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எப்போது திறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எப்போது என்பது தெரியவில்லை.

இதனால் தயாராகியுள்ள படங்கள் யாவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வெளியீட்டு முடிவால் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் படங்கள் வெளியீடு முடிவு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருப்பதாவது:

"ஓடிடி வருகையால் திரையரங்குகள் பாதிக்கப்படுமா என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும், பாதிப்படையாது. எப்படி தொலைக்காட்சி வரும்போது சினிமா அழியும், அழியும் என்று சொன்னார்கள். ஆனால் அதில் செய்யப்பட்ட விளம்பரங்களால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது அதிகரித்தது.

அதேபோலத் தான் இப்போதும் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள். திரையரங்குகள் எப்போதும் மாற்றமடையாது. சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல கதைசொல்லும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் இதிகாசங்கள், புராணங்கள் வைத்து படங்கள், பின்னர் வசன சினிமா அதன்பின் காட்சி பூர்வமான சினிமா, இப்படி மௌன படத்தில் தொடக்கி இன்று கதை சொல்லும் விதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எது மாறினாலும் மனிதனுக்கும் திரைக்குமான உறவு இன்னும் மாறவில்லை. காரணம், மனிதனின் அடிப்படை உணர்ச்சியே ஒன்றுகூடுதல் தான். கொண்டாட்டத்திற்கும், தூக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஒன்று கூடுவதும் எனும் மனிதனின் அடிப்படை உணர்ச்சியே இதற்கான அடிப்படை காரணம். ஒன்றுகூடும் உணர்வின் வெளிப்பாடு, திரையரங்கம் கொடுத்த அனுபவம் ஆகியவை திரையரங்கை வாழவைக்கும். இதுதான் திரையரங்கின் உயிர்மூச்சு. ஒன்றுகூடுதல் உணர்வு மனிதர்களுக்கு இருக்கும் வரைக்கும், திருமணத்திற்கும், துக்க நிகழ்ச்சிக்கு ஒன்றுகூடும் மக்கள் இருக்கும் வரைக்கும் திரையரங்குகள் வாழும்.

அப்படியென்றால் ஓடிடி என்ன ஆகும்..? திரையரங்கம் சென்றுசேர முடியாத படங்கள் ஓடிடியில் வந்துசேரும். எல்லாவிதமான படங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய இடமாக ஓடிடி இருக்கும். இதனால், திரையரங்கங்கள் வீழ்ச்சி அடையாது. திரையரங்குகள் அழிந்துபோகாது. மனிதனின் ஒன்றுகூடுதல் உணர்வின் வெளிப்பாடுதான் திரையரங்கம். மக்கள் திரையரங்குகளை மிஸ் செய்ய மாட்டார்கள். திரையரங்கம் வந்துசேர முடியாத படங்கள் ஓடிடியில் கவனம்பெறும், உலகப்புகழ் பெறும்”

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE