‘’அரிசி வாங்க காசில்லை. கடன் வாங்கிக்கொண்டு வந்த ஐந்து ரூபாயும் வழியில் விழுந்துவிட்டது. என்னிடம் இருந்த ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஐந்து ரூபாய் எங்கே விழுந்தது, கிடைக்குமா என்று தேடிப் போனேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதளச் சேனலில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் சுவைபடத் தெரிவித்து வருகிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
’’புட்டண்ணா கனகல் சாரிடம் இருந்து வெளியே வந்த பிறகு, அடுத்து என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தேன். அப்போது ‘தாகம்’ என்று படமெடுத்தார்கள். அதில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பல வருத்தங்கள், கோபங்களுக்குப் பிறகு அந்தப் படம் முடிந்தது. அடுத்து என்ன செய்வது என்று மீண்டும் தேடலில் இறங்கினேன்.
இந்த சமயத்தில் இளையராஜா, திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டான். இசை வாத்தியங்கள் இசைத்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். அப்போது மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில்தான் இருந்தோம். அவர்களின் அம்மாவை அழைத்து வந்ததும் எனக்கொரு ஐடியா வந்தது... நாமளும் நம்ம அம்மாவை அழைத்து வருவோம் என்று!
சமைத்துப் போடுவதற்கு சரியாக இருக்குமே என்று முடிவு செய்து அழைத்து வந்தேன். அப்போது என் தம்பி, சென்னையில், அரசுத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அதனால், நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த வீட்டில், இளையராஜா அவர்களின் அம்மா எல்லோரும் இருந்தார்கள். நான் அதேதெருவில் இன்னொரு வீட்டில் என் அம்மாவுடனும் தம்பியுடனும் இருந்தேன்.
என் தம்பி வேலைக்குப் போய்விடுவான். நான் வேலை தேடி அலைவேன். அஸிஸ்டெண்டா வேலை கிடைக்கவேண்டுமே, யாரிடம் கேட்பது என்று அலைந்தேன். எங்கே போவது, யாரைப் பார்ப்பது என்று தேடவேண்டும்.
இந்த விஷயத்தையெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய இலக்கை விட்டுவிடக்கூடாது. நான் பார்க்காத கஷ்டங்கள் கிடையாது.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்...
என் தம்பிக்கு வரக்கூடிய சம்பளம் கம்மி. அது பத்தாது. ஊரிலிருந்து என் அப்பா பணம் அனுப்புவார். திடீரென்று ஒரு மோசமான சூழல் ஏற்பட்டது. தம்பி மிலிட்டிரியில் வேலை பார்க்கிறான். அம்மா எங்களின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும். ஏனென்றால், அரிசி வாங்கக்கூட பணமில்லாத நிலை இருக்கும்.
ஒரு இக்கட்டான சூழ்நிலை. தம்பியின் சம்பளம் வரவில்லை. தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. எனக்கு வருமானம் என்று எதுவுமே கிடையாது. ’என்னடா பண்றது பிள்ளைகளே’ என்கிறாள் அம்மா.
’பேசாம இரு’ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். அப்போது மவுண்ட் ரோடில் சபையர் தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் மருதையன் என்று என் நண்பன், ஓவியர் அவர். அங்கே வேலை பார்த்து வந்தார். அப்போது பேனரை கையிலேயே வரைய வேண்டும். அவன் வரைவான். மருதையன் தியேட்டரில் பெர்மனெண்ட் ஒர்க்கர்.
மருதையனைப் பார்த்து கொஞ்சம் காசு வாங்கி வருவோம். அரிசி வாங்கவேண்டுமே என்று யோசித்தேன். அப்போது நான் ஒரு ஓட்டை சைக்கிள் வைத்திருந்தேன். என் தம்பி வாங்கிக் கொடுத்திருந்தான். அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு, சபையர் தியேட்டருக்குப் போய், மருதையனைப் பார்த்துவிட்டேன். ’வாங்க வாங்க’ என்றார். ‘என்ன விஷயம்’ என்று கேட்டார்.
‘ஒண்ணுமில்ல மருதையார். ஒரு அஞ்சு ரூபா பணம் வேணும்’ என்று கேட்டேன். கொடுத்தார். இப்போதாவது பேண்ட் போடுகிறேன். அப்போது பெரும்பாலும் வேஷ்டிதான். எப்போதாவதுதான் பேண்ட். பணத்தை வாங்கிக் கொண்டு வேஷ்டியில் செருகி, சுருட்டிக்கொண்டு, ’அரிசி வாங்கவேண்டுமே... சமைக்க வேண்டுமே... அம்மாவுக்கு கொடுக்கவேண்டுமே...’ என்று நினைத்துக்கொண்டே சைக்கிளில் திரும்பினேன்.
ஹாம்ரிங்டன் பிரிட்ஜ் தாண்டி வீட்டுக்குப் போய், அம்மாவிடம் ‘இந்தா, அரிசி வாங்கு’ என்று பார்த்தால், அஞ்சு ரூபாயைக் காணோம். அந்தச் சூழலில் ஒரு மனிதனுக்கு எப்படியிருக்கும்? கற்பனை செய்து பாருங்கள். இதுமாதிரி எத்தனையோ பேர் கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். நான் இன்றைக்கு மேலே வந்துவிட்டேன்.
அப்போது நடந்ததுதான் ஆச்சரியம். நம்முடைய நாணயமும் நேர்மையும் சரியாக இருந்தால் பணம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை உள்ளே. கடவுளை வேண்டுகிறேன்.
அப்போதெல்லாம் மனதில் ஏதேனும் தவிப்பும் குழப்பமும் இருந்தால், உடனே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய்விடுவேன். ’நான் நல்லவனா இருந்தா, எங்க அம்மா நல்லவளா இருந்தா, நான் பொய்யில்லாதவனா, உண்மையானவனா இருந்தா, கஷ்டப்பட்டு அஞ்சு ரூபா வாங்கிட்டு வந்தேனே... அது எங்கியாவது கிடக்கணும், என் கண்ணுக்கு கிடைக்கணும்’அப்படி நினைத்துக்கொண்டே, சைக்கிளை எடுத்துக்கொண்டு, நான் வந்த பாதையில் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். பாலதுக்கு அருகில் லாரியெல்லாம் நிற்கும். பார்த்துக்கொண்டே வந்தேன். அங்கே லாரிக்குப் பின்னே பார்த்தேன். அந்த ஐந்து ரூபாய். அது கிடைத்தவுடன், அதை எடுக்கும் போது இருந்த சந்தோஷம் இருக்கிறதே... சின்ஸியாரிட்டிக்கும் உண்மைக்கும் ஒரு மரியாதை உண்டு என்று கடவுளை நினைத்துக்கொண்டேன்.
இன்றைக்கு வரைக்கும் என் வாழ்வில் அந்த ஐந்து ரூபாயை மறக்கவே மாட்டேன். மறக்கவே இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய பல வீடுகளில், இப்படியொரு சம்பவம், அனுபவம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
இதை எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? எத்தனை இன்னல்கள் வந்தாலும், நம்முடைய இலக்கை மட்டும் விட்டுவிடவே கூடாது. முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது.போராடு. பசியோ பட்டினியோ... போராடு. இலக்கை நோக்கி போய்க்கொண்டே இரு. இலக்கை அடையும் வரை சின்ஸியராக போராடிக்கொண்டே இரு. இலக்கை அடைந்தே தீருவாய்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago