போதை மருந்து பழக்கத்தால் மன அழுத்தம் வரும்: தீபிகாவைக் கிண்டல் செய்து கங்கணா ட்வீட்

By ஐஏஎன்எஸ்

போதை மருந்து பழக்கத்தின் பக்க விளைவே மன அழுத்தம் என்று கூறி நடிகை தீபிகாவை கங்கணா ரணாவத் கிண்டல் செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வாட்ஸ் அப் உரையாடலில் போதை மருந்து வாங்குவது தொடர்பாகப் பேசியிருந்தது அமலாக்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் போதை மருந்து தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைக் கையிலெடுத்தது.

அதனைத் தொடர்ந்து ரியா சக்ரபர்த்தி, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்துள்ளது போதை மருந்து தடுப்புப் பிரிவு. மேலும், பலருடைய வாட்ஸ் அப் பதிவுகளை வைத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் தீபிகா படுகோனுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடலைத் தனியார் செய்தி சேனல் ஒன்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்தே கங்கணா இந்தக் கிண்டல் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கணா, தீபிகாவின் பெயரைக் குறிப்பிட்டே இந்தக் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எங்கே நான் சொல்வதைத் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம். போதை மருந்து பழக்கத்தின் பக்க விளைவாக மன அழுத்தம் வரும். உயர் சமூக, பணக்காரக் குழந்தைகள் என்றும், மிகவும் கண்ணியமானவர்கள், நன்றாக வளர்க்கப்பட்டவர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் மேலாளரிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கின்றனர்".

இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.

மேலும், போதை மருந்து பழக்கம் இருக்கும் பாலிவுட் பிரபலங்களைப் புறக்கணியுங்கள் என்றும், தீபிகா படுகோன் என்றும் ஹேஷ்டேக் போட்டு கங்கணா குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாள், தீபிகா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து, "எங்கே நான் சொல்வதைத் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம். மன அழுத்தம் ஒரு நோய்" என்று பகிர்ந்திருந்தார்.

மீண்டும் ஜூன் 16 அன்று, "எங்கே நான் சொல்வதைத் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம், மன அழுத்தம் என்பது ஒரு வகையான மனநோய்" என்று பகிர்ந்திருந்தார். இப்போது அதே மாதிரியான வார்த்தைகளை வைத்து கங்கணா, தீபிகாவைக் கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை போதை மருந்து தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE