'தனுஷ் 43', 'சூரரைப் போற்று', 'வாடிவாசல்', 'ஜெயில்', 'தலைவி' அப்டேட்: ஜி.வி.பிரகாஷ் தகவல்

தனுஷுடன் கூட்டணி, 'சூரரைப் போற்று' படம் ஆகியவை குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ்த் திரையுலகின் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் ஹாலிவுட் பாடல் ஒன்றை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'அசுரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது 'சூரரைப் போற்று'. விரைவில் இதர பாடல்களை வெளியிட்டு, விளம்பரப்படுத்தப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதனிடையே, ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ வடிவில் பதிலளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதில் ஜி.வி.பிரகாஷ் எதிர்கொண்ட கேள்விகளும், பதில்களும்!

கேள்வி: D43 படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணையுமா?

ஜி.வி.பிரகாஷ்: கண்டிப்பாக வரும். நான் அதிகமாகப் பணிபுரிந்த நாயகன் தனுஷ்தான். அவருடன் 5 படங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளேன். D43 பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அந்த ஆல்பத்துக்காக உற்சாகமாக இருக்கிறேன். அந்தப் படம் இல்லாமல் கண்டிப்பாகத் தொடர்ச்சியாக இணைந்து பணிபுரிவோம். அவருடைய வரிகள், என்னுடைய இசை, அவருடைய குரல் என அனைத்துமே செட்டாகியுள்ளது.

கேள்வி: 'சூரரைப் போற்று' அப்டேட்?

ஜி.வி.பிரகாஷ்: படம் செமயாக இருக்கும். இந்திய சினிமாவுக்கு ரொம்பப் புதுமையான ஒரு படம். ரொம்ப அற்புதமான இயக்குநர் சுதா கொங்கரா. இன்னும் அற்புதமான 3 பாடல்கள் வெளிவரவுள்ளன. அந்தப் படத்தின் பயணம் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இயக்குநராக சுதா பெரும் உயரத்துக்குச் செல்லவுள்ளார். ஏனென்றால் அந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன்.

கேள்வி: உங்களுடைய அடுத்த படங்கள் அப்டேட்?

ஜி.வி.பிரகாஷ்: அடுத்த வெளியீடு 'ஜெயில்'. அதன் காத்தோடு பாடல் பெரிய ஹிட். அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்த தனுஷ், அதிதி ராவுக்கு நன்றி. 'ஐங்கரன்', 'பேச்சுலர்', 'செல்ஃபி' என நிறையப் படங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக வெளியாகும்.

கேள்வி: 'வாடிவாசல்' படத்தில் ஜல்லிக்கட்டுக்கான பிஜிஎம் இருக்குமா?

ஜி.வி.பிரகாஷ்: கண்டிப்பாக இருக்கும். அதுவொரு அற்புதமான கதை. வெற்றிமாறன் சார் சண்டைக்காட்சிகளை எப்படி எடுப்பார் என்று தெரியும். சூர்யா சார், தாணு சார் எல்லாம் இருக்காங்க. அற்புதமான படமாக இருக்கும்.

கேள்வி: 'தலைவி' படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும்? ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கணா குறித்து?

ஜி.வி.பிரகாஷ்: 'தலைவி' படத்தின் இசை கண்டிப்பாகப் பேசப்படும். ஏனென்றால் பழைய காலத்து ரெட்ரோ இசைக்கு உங்களை அழைத்துக் கொண்டு போன மாதிரி இருக்கும். எம்.எஸ்.வி சார், ஆர்.டி. பர்மன் சார் இசையை மீண்டும் உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். கங்கணா ரணாவத் ஒரு அற்புதமான நடிகை. பாடல் வரிகள், விஜய்யின் இயக்கம், இசை என அனைத்துமே உங்களைப் பழைய நினைவுகளுக்குக் கூட்டிக் கொண்டு போகும். தலைவி பாடல்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE