நடிகர் கதிர் பிறந்த நாள் ஸ்பெஷல்: மாறுபட்ட கதைகளை நாடிச் செல்லும் நடிகர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் நடிகர்களில் குறுகிய காலத்தில் பல தரமான படங்களில் நடிப்பவராக மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவராக ரசிகர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுவிட்ட நடிகர் கதிர் இன்று (செப்டம்பர் 21) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரித்த முதல் திரைப்படம் 'மதயானைக் கூட்டம்', வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும் பல தேசிய விருதுகளை வென்ற 'ஆடுகளம்' படத்தின் வசனகர்த்தாவுமான விக்ரம் சுகுமாரன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். மதுரை வட்டாரத்தில் குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரின் சாதி உணர்வு சார்ந்த வன்முறை அவர்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை மேம்பட்ட திரைமொழியுடனும் அந்தக் கதைக்குத் தேவையான பதைபதைப்புடனும் சொன்ன அந்தப் படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் நாயகனாக அறிமுகமானவர்தான் கதிர். சிறு நகரத்தைச் சேர்ந்த இளைஞராக மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார்.

அடுத்ததாகத் தேசிய விருதுபெற்ற 'காக்கா முட்டை' படத்தின் மூலம் அறிமுகமான மணிகண்டன் கதை வசனம் எழுதி அணுசரண் இயக்கிய 'கிருமி' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் கதிர். போலீஸ் இன்ஃபார்மர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய மாறுபட்ட கதையம்சமுள்ள படம் அது. ,காவல்துறையினருடன் நெருங்கிப் பழகுவதில் இருக்கும் ஆபத்துகளைப் பிரச்சார நெடியின்றி எளிமையாகவும் உயிரோட்டமாகவும் சொன்ன 'கிருமி' விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. கதிரின் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமும் யதார்த்தமான நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.

வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டுதல்களையும் பெற்ற 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார் கதிர்.

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 செப்டம்பர் 28 அன்று வெளியான 'பரியேறும் பெருமாள்' கதிரின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்களிலும் சட்டக் கல்லூரியிலும் நிலவும் சாதிய ஏற்ற தாழ்வுகளைத் தோலுரித்த அந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனும், சட்டக் கல்லூரி மாணவனுமான பரியனாக அனைவரையும் வியக்க வைக்கும் நடிப்பைத் தந்திருந்தார் கதிர்.

சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட கல்வி மீதான பற்று, ஆசிரியர்களால் அவமானப்படுத்துவதால் ஏற்படும் புழுக்கம், வன்முறையைத் தவிர்க்க சாதி வெறியர்களின் சீண்டல்களையும் இழிவுபடுத்தல்களையும் பொறுத்துக்கொள்ளும் நிதானம், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை அவமானப்படுத்தப்படும்போது வெடித்துக் கிளம்பும் கோபம், இறுதியில் நாயகியின் தந்தையிடம் பேசும்போது வெளிப்படும் முதிர்ச்சி என பரியனை மறக்க முடியாதவனாக ஆக்கியதில் கதிரின் நடிப்புக்கும் தோற்றப் பொருத்தத்துக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு.

விமர்சகர்கள். ரசிகர்கள் அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு 'பிகில்' திரைப்படத்தில் நாயகன் விஜய்யின் நண்பராக மற்றுமொரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படம் அது

தொடர்ந்து 'ஜடா', 'சத்ரு' போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். 'சிகை' என்னும் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 'சர்பத்' உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தரமான படங்களில் மாறுபட்ட கதையம்சமுள்ள படங்களிலும் நடிக்கத் தொடர்ந்து முனைப்பு காண்பிக்கிறார். நாயகனாக நடித்துக்கொண்டே நல்ல துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தயங்குவதில்லை. கதாபாத்திரத்துக்கும் கதையம்சத்துக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிக்கும் நடிகராக பரிணமித்திருக்கும் கதிர்,. ஒரு நடிகராக இன்னும் பல வெற்றிப் படங்களில் நடித்து விருதுகள் வெல்வது உட்பட பல சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE