அனுராக் மீது மீடூ புகார்: முன்னாள் மனைவி எதிர்ப்பு

அனுராக் காஷ்யப்பிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டாலும், அவர் மீதான மீடூ புகாருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார் கல்கி கொச்சிலின்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாயல் கோஷ் கூறியுள்ள புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியான கல்கி கொச்சிலின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தனது முன்னாள் கணவர் மீதான மீடூ புகாருக்கு எதிராக வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த அனுராக். இந்த சமூக ஊடகக்கூத்து உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைக்கதைகளில், பெண்களின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மைக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இவற்றுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் என்னை உங்களுக்குச் சரிசமமாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். நமது விவாகரத்துக்குப் பிறகும் எனது கண்ணியத்துக்காகத் துணை நின்றீர்கள். நாம் ஒன்று சேரும் முன்னரே ஒரு பணிச் சூழலில் நான் பாதுகாப்பின்றி உணர்ந்தபோது என்னை நீங்கள் ஆதரித்தீர்கள்.

யாரும், யாரையும் அவதூறு பேசும், வினோத காலகட்டம் இது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அருவருப்பான செயலாகும். இது குடும்பங்களை, நட்பை, தேசங்களைச் சிதைக்கிறது.

ஆனால், இந்த மெய்நிகர் உலகின் ரத்தக்களறிகளைத் தாண்டி கண்ணியமான உலகம் ஒன்று இருக்கிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களின் தேவைக்காக உழைக்கும் உலகம், யாரும் பார்க்காத போதும் ஒருவர் கனிவாக இருக்கும் உலகம், உங்களுக்கு அந்த உலகம் தெரியும் என நான் நினைக்கிறேன்.

அந்தக் கண்ணியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள், வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள். உங்கள் முன்னாள் மனைவியிடமிருந்து"...

இவ்வாறு கல்கி கொச்சிலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE