அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல்கோஷ் மீடூ புகார்; நோக்கம் சந்தேகத்துக்குள்ளாவதாக தயாரிப்பாளர் குனீத் மோங்கா கருத்து

அனுராக் காஷ்யப் மீது மீடூ குற்றச்சாட்டு எந்த நேரத்தில் எழுப்பப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது அதன் நோக்கம் சந்தேகத்துக்குள்ளாகிறது என்று குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாயல் கோஷ் கூறியுள்ள புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனுராக் காஷ்யப்பின் நெருங்கிய நண்பரும் 'சூரரைப் போற்று' தயாரிப்பாளர்களில் ஒருவருமான குனீத் மோங்கா வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''அனுராக்கின் தயாரிப்பு நிறுவனத்தை 5 வருடங்கள் நான் நடத்தினேன். தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்று அவர் முடிவெடுத்தபோது மனமுடைந்து போனேன். ஆனால், உனக்கென தனியாக றெக்கைகள் வளர்த்து, உயரத்தில் பறக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், அதுதான் நாங்கள் வளர்ந்த சூழல். தன்னைச் சுற்றிய அனைவரையும் உயர்த்தும் அவரது குணத்தை நான் என்றும் மதித்திருக்கிறேன். உண்மையைப் பேச அவர் என்றுமே தயங்கியதில்லை. அதே நம்பிக்கையைத்தான் பலரை ஆதரிக்க, உயர்த்தப் பயன்படுத்துகிறார்.

உங்கள் மீது நீங்களே அதிக நம்பிக்கை வைக்கும்படி உங்களை மாற்றும் திறமை அனுராக்கிடம் உள்ளது. அவர் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையின் மூலம் அதை இரட்டிப்பாக்குவார்.

பெண்களுக்கான சம உரிமை பற்றிப் பேசும்போது, பெண்கள் உயர இடம் கொடுக்கும் அனுராக் போன்ற பல ஆண்கள் நமக்குத் தேவை. எனக்கு 24 வயதாக இருந்தபோது என்னை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆக்கினார்.

மீடூ இயக்கத்தை நான் முழு மனதோடு ஆதரித்தேன். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு எந்த நேரத்தில் எழுப்பப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது அதன் நோக்கம் சந்தேகத்துக்குள்ளாகிறது. அதுவும் அனுராக் உறுதியாக ஒரு கருத்தைப் பேசி வரும்போது இந்தக் குற்றச்சாட்டு ஒழுங்காக விசாரிக்கப்படும் என நம்புகிறேன். உண்மை என்றுமே வெளியே வரும்.

பலர் உங்கள் வாயை அடைக்க நினைக்கும்போது நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும் அனுராக்".

இவ்வாறு குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.

குனீத் மோங்கா தனது கடிதத்தைப் பகிரும்போது "அனுராக் எங்களில் பலருக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைச் சொல்ல ட்விட்டர் தேவையில்லை. ஒரு பெண்ணாக நான் இங்கு எனது பயணத்தைப் பகிர்கிறேன். மேலும் இங்கிருக்கும் அபத்தங்களைச் சுட்டிக்காட்டவே இருக்கிறேன். மீடூ போன்ற முக்கியமான இயக்கங்களை வேறு நோக்கங்களால் சாகடிக்க வேண்டாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE