’நடையை மாத்து உன் நடையை மாத்து’; ‘பட்டுவண்ண ரோசாவாம்..’; பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசியின் ‘கன்னிப்பருவத்திலே’ - 41 ஆண்டுகளாகியும் மறக்கமுடியாத ஹிட் லிஸ்ட் படம்! 

By வி. ராம்ஜி

எழுபதுகளின் மத்தியில் இருந்து தொடங்கியது பாரதிராஜாவின் காலம். தமிழ்த் திரையுலகில் தென்றலைப் போல் புயல் கிளப்பிய பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த பாக்யராஜின் கதை, வசனத்தில் உருவான ஒரு படம், அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அந்தப் படத்தின் மூலம் நமக்குக் கிடைத்தவர்கள் ராஜேஷும் வடிவுக்கரசியும். அந்தப் படம் ‘கன்னிப்பருவத்திலே’.

வாழ்க்கையில் சபலம் என்பது தடக்கென்று எப்போதேனும் நிகழ்ந்துவிடக்கூடியது. இந்த சபலம், குறுகுறுவென நெஞ்சைக் குத்திப் போடும். இப்படியான சபலத்தைக் கொண்டே, நண்பனுக்கு துரோகம் செய்யும் கதை, தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். அந்தக் கதையை வலிக்க வலிக்க, கதறகதறச் சொல்லியிருப்பதுதான் ‘கன்னிப்பருவத்திலே’!

சின்னஞ்சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டில் காளையை அடக்குகிறான் சுப்பையா. இவனுடைய வீரத்திலும் கண்ணியத்திலும் மனதைப் பறிகொடுக்கிறாள் கண்ணம்மா. இருவரும் விரும்புகிறார்கள்.

இந்தநிலையில், ஊருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு வருகிறான். கண்ணம்மாவை சுப்பையா பெண் கேட்க, அவள் வீடு மறுக்கிறது. வேறொருவருக்கு மணம் முடிக்க நினைக்கிறது. பிறகு எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

முதலிரவு. இருவரும் கூடுகின்றனர். அப்போது தடக்கென்று நெஞ்சு வலியால் விலகுகிறான் சுப்பையா. மாடு பிடிக்கும் போது, மாடு முட்டி கீழே விழும் வேளையில், உயிர் நிலையில் அடிபட்டுவிட்டதால், இதுமாதிரி நிகழ்கிறது என தெரியவருகிறது. எப்போது சரியாகும், சரியாகுமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும் என மருத்துவர் சொல்ல, இடிந்துபோகிறார்கள் இருவரும்.

இந்தநிலையில், சுப்பையாவின் உயிர் நண்பன் சீனு, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்கிறான்.

இந்த சமயத்தில், சுப்பையாவைத் தேடி வீட்டுக்கு வருகிறான் சீனு. வீட்டில் அவன் இல்லை. அப்போது சமைத்துக்கொண்டிருக்கும் கண்ணம்மாவின் புடவையில் தீப்பிடித்துவிடுகிறது. சீனு காப்பாற்றுகிறான். இருவரும் ஒருவர் மீது ஒருவராகக் கிடக்கிறார்கள். அப்போது ஏற்படுகிற ஸ்பரிசம்... மனதுக்குள் அவளுக்குள் சபலத்தை உண்டுபண்ணுகிறது. அவனுக்கும் சபலம். சீனு அவளை விடமறுக்கிறான். ஒருகட்டத்தில், சுதாரித்து, படக்கென்று எழுந்துவிடுகிறாள்.

ஆனால், இதைவைத்துக் கொண்டே, அவளை ஒவ்வொரு முறையும் டார்ச்சர் செய்கிறான் சீனு. அவனின் கொடுமையில் இருந்து ஒவ்வொரு தருணமும் தன்னைத் தற்காத்துக்கொண்டே இருக்கிறாள். இறுதியாக, ‘உன் புருஷனை விட்டுட்டு வா. இந்த ஊரை விட்டே போயிடலாம்’ என அழைக்கிறான் சீனு.

அவள் அவனின் இம்சையில் இருந்து தப்பித்தாளா? அவனுடன் சென்றாளா? நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன முடிவெடுத்தாள் என்பதை, உணர்வுபூர்வமாக, உணர்ச்சிபூர்வமாக திரைக்கதையாக செதுக்கியிருப்பதுதான்... ‘கன்னிப்பருவத்திலே.’

சுப்பையாவாக ராஜேஷ். கண்ணம்மாவாக வடிவுக்கரசி. சீனுவாக பாக்யராஜ். இந்த மூவரைக் கொண்டே கதையும் திரைக்கதையும் வடிக்கப்பட்டிருக்கும். இந்தப் படம்தான் ராஜேஷுக்கு முதல்படம். ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் சின்ன கேரக்டரில் அறிமுகமான வடிவுக்கரசிதான் இந்தப் படத்தின் நாயகி. ’புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயகனாக நடித்த பாக்யராஜ்... இதில் வில்லன்.

வடிவுக்கரசிதான் படத்தின் மையம். ஒரு பக்கம் குதூகலம், இன்னொரு பக்கம் கணவனின் துயரம், அந்தப் பக்கம் பாக்யராஜ் மீது கொண்ட ஆவேசம், இந்தப் பக்கம் எதுவும் செய்ய முடியாத இயலாமை... என மொத்த உணர்வுகளையும் கொட்டித்தீர்த்திருப்பார் வடிவுக்கரசி. கண்ணம்மாவாகவே வாழ்ந்திருப்பார். ஒவ்வொரு முறையும் பாக்யராஜ் டார்ச்சர் செய்யும் போதெல்லாம், செய்வதறியாமல் கதறுவார் வடிவுக்கரசி. ‘பாக்யராஜ் மட்டும் கையில கிடைச்சா,அவ்ளோதான்’ என்று படம் பார்க்கிறவர்கள் அப்படி ஆவேசப்பட்டார்கள். அந்தத் தேதிக்கு தமிழ் சினிமாவுக்கு அப்படியொரு வில்லன் மிகப்பெரிய டெர்ரர்தான்!

ராஜேஷின் நடிப்பு, பக்குவப்பட்ட, பண்பட்ட நடிப்பு. காளையை அடக்குவதில் வீரம், வடிவுக்கரசியிடம் கோபமாகப் பேசி உதறுகிற நிதானம், பிறகு காதலித்து கல்யாணம் செய்துகொண்டு அன்பைப் பொழிகிற தருணம், உயிர் நண்பனான சீனு என்கிற பாக்யராஜ் மீது கொண்டிருக்கும் பேரன்பு, ஆண்மை போன நிலையால் நொந்து போகும் இயலாமை, ‘இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்க புள்ள’ என்று மனைவியைச் சொல்லும் பெருந்தன்மை... என படம் முழுக்க, தன் யதார்த்த நடிப்பால், முதல் படத்திலேயே அட்டகாசமான முத்திரையைப் பதித்திருப்பார் ராஜேஷ்.

படத்துக்கு திரைக்கதையும் வசனமும் எழுதி, வில்லனாகவும் நடித்து எக்கச்சக்க கைத்தட்டல்களையும் ஏகப்பட்ட வசவுகளையும் வாங்கியிருப்பார் பாக்யராஜ். ஆரம்பத்தில், நண்பனின் மனைவியிடம் நல்லவிதமாக பழகுவது, வடிவுக்கரசியைக் காப்பாற்றும் வேளையில் ஏற்பட்ட ஸபரிசத்தால் சபலப்படுவது, பிறகு அதைக் கொண்டே வடிவுக்கரசியை மிரட்டிப் பணியை வைக்க முயலுவது, வீட்டில் திருமண ஏற்பாடுகளை வேண்டாம் என்பது, நண்பனுக்கு ஆண்மை இல்லை எனும் விவரத்தை ஊருக்குச் சொல்லிவிடுவேன் என மிரட்டுவது, கடைசியாக, ‘உன் புருஷனை விட்டுட்டு வா. நாம ஓடிப்போயிடலாம்’ என்று வடிவுக்கரசியிடம் சொல்வது... என பாக்யராஜ் வில்லத்தனம் செய்யும் போது, நடுங்கி கிடுகிடுத்துத்தான் போவோம்.

அந்த கேரக்டருக்கு, வில்லத்தனத்துக்கு, பாக்யராஜுக்கு கிடைத்த வெற்றி. ’புதிய வார்ப்புகள்’ போலவே இந்தப் படத்துக்கும் பாக்யராஜுக்கு டப்பிங் குரல்தான். அவர் குரலில்லை. அதில் கங்கைஅமரன். இதில் யாரென்று தெரியவில்லை.

அம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களுக்குப் பின்னர் மூன்றாவதாக ‘கன்னிப்பருவத்திலே’படத்தைத் தயாரித்தார் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ’16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பி.வி.பாலகுருதான் இயக்கினார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தன்னைச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக, படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாகவும் நடித்திருந்தார் பாக்யராஜ். இத்தனைக்கும் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலமாக அப்போது நடிகராக, ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார் பாக்யராஜ்.

படம் முழுக்க, திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டன. சங்கர் கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நடையை மாத்து’ என்கிற டைட்டில் பாடல், அன்றைக்கு டாப் மோஸ்ட் ஹிட்டடித்தது. அப்போது இந்தப் பாடல் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை.

‘ஆவாரம்பூ மேனி’ என்றொரு பாடல் அற்புதமான மெலடி. ‘அடிஅம்மாடி சின்னப்பொண்ணு... ஆசைப்பட்டா அவ நெஞ்சுக்குள்ளே’ என்ற பாடலைப் பாடாத இளசுகளே இல்லை. ‘கன்னிப்பருவத்திலே’ படத்தைச் சொல்லும்போதே நினைவுக்கு வருகிற பாடல்... ‘பட்டுவண்ண ரோசாவாம்’ பாட்டுதான்! படத்தில் இரண்டு முறை வரும் இந்தப் பாடல், எண்பதுகளில், ரேடியோக்களில் அடிக்கடி நேயர்களால் விரும்பிக் கேட்ட பாடல். மலேசியா வாசுதேவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் ’பட்டுவண்ண ரோசாவாம்’ பாடலும் ஒன்று.

இந்தப் படம் பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சில ஊர்களில், 200 நாட்கள் ஓடின. படம் பார்த்துவிட்டு, பாக்யராஜ்தான் எல்லோரும் கவனத்தையும் ஈர்த்தார், என்றாலும் ராஜேஷ், வடிவுக்கரசியின் நடிப்பு தனிப்பாராட்டுகளைப் பெற்றது.

1979ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21ம் தேதி ‘கன்னிப்பருவத்திலே’ ரிலீசானது. மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதோ... ‘கன்னிப்பருவத்திலே’ படம் வெளியாகி இப்போது 41 வருடங்களாகின்றன.

இன்றைக்கும் பாக்யராஜ் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார். ராஜேஷ், இயல்பான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடிவுக்கரசி, சினிமாவிலும் சீரியல்களிலும் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்.

41 ஆண்டுகளானாலும் இளமை மாறாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘கன்னிப்பருவத்திலே’. ’கன்னிப்பருவத்திலே’ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்