போதைப்பொருள் விற்றதாக இந்தி நடிகர் உட்பட 2 பேர் கைது: பெங்களூரு போலீஸார் விசாரணை

போதைப் பொருள் விற்றதாக இந்தி நடிகர் உட்பட 2 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் தடுப்புவழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி,ஓட்டல் அதிபர்கள் ரவிசங்கர், ராகுல் சங்கர், விரேன் கண்ணா, பிரதீக் ஷெட்டி, முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன்ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 28 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸார் கர்நாடகா முழுவதும் போதைப்பொருள் விற்பனை கும்பலை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மங்களூருவில் எம்டிஎம்ஏ போதைப்பொருளை விற்ற கிஷோர் அமன் ஷெட்டி (30), அக்யுல் நவ்ஷீல் (28) ஆகியோரை கைது செய்தனர். இதில் கிஷோர் அமன் ஷெட்டி இந்தி திரைப்படங்களில் நடிகராகவும், ந‌டன கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியில் பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ என்ற ஒருபடத்திலும், கன்னட தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

கைதான கிஷோர் அமன் ஷெட்டி மும்பையில் இருந்து எம்டிஎம்ஏ போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்தவிருந்து நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்துள்ளார். மேலும் கன்னட மற்றும் இந்தி திரையுலகினருக்கு போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார். அவருக்கு உதவியாக வெளிநாட்டு கேளிக்கை விடுதிகளில் பணியாற்றிய நவ்ஷீல் இருந்ததாக கூறப்படுகிறது.

கைதான இருவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களும், 2 செல்போன், மடிகணிணி, 2 இரு சக்கர வாகனங்க‌ள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றன‌ர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE