பல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க வேண்டும்: கங்கணா ரணாவத்

By ஐஏஎன்எஸ்

வாரிசு அரசியல், போதை மருந்து மாஃபியா உள்ளிட்ட தீவிரவாதத் தரப்புகளிடமிருந்து திரைத்துறையைக் காக்க வேண்டும் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு கங்கணா ரணாவத் வெளியிடும் ட்வீட்கள், பேட்டிகள் எனத் தொடர்ந்து பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இதனிடையே உத்திரப் பிரதேசத்தில் மிகப்பெரிய திரைப்பட நகரம் கட்டப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து மீண்டும் பாலிவுட் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் கங்கணா ரணாவத்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் உச்ச திரைத் துறையான பாலிவுட் தவறானது என மக்கள் நினைக்கின்றனர். தெலுங்கு திரைப்படங்கள் மேலே உயர்ந்து இப்போது உச்சத்தில் இருக்கின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்களைச் சென்று சேர்கிறது. பல இந்தித் திரைப்படங்கள் ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தில் படம்பிடிக்கப்படுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய திரைப்பட நகரம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பை நான் பாராட்டுகிறேன். இன்னும் திரைத்துறையில் பல சீர்திருத்தங்கள் நமக்குத் தேவை. முதலில் இந்தியத் திரைப்படத் துறை என்ற ஒன்றிணைந்த பெரிய திரைத்துறை இருக்க வேண்டும். நாம் பல காரணிகளால் பிரிந்திருக்கிறோம். ஹாலிவுட் திரைப்படங்கள் இதனால் சாதகம் பெறுகின்றன. ஒரு துறை, பல்வேறு திரைப்பட நகரங்கள் வேண்டும்.

டப்பிங் செய்யப்படும் சிறந்த மாநில மொழித் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாவது கடினம். ஆனால், டப்பிங் செய்யப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள் பெரிய அளவில் வெளியாகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இதற்கு முக்கியமான காரணம் பெரும்பாலான இந்தித் திரைப்படங்களின் மோசமான தரமும், திரையரங்கங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் ஏகபோக அதிகாரமும்தான். மேலும் ஹாலிவுட் படங்களே ஆதர்சம் என ஊடகங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளன.

வாரிசு அரசியல் தீவிரவாதம், போதை மாஃபியா தீவிரவாதம், பாலியல் வன்முறை தீவிரவாதம், மத ரீதியான மாநில ரீதியிலான தீவிரவாதம், அந்நியத் திரைப்படங்களின் தீவிரவாதம், பைரஸி தீவிரவாதம், தொழிலாளர்களை உறிஞ்சும் தீவிரவாதம், திறமைகளைச் சுரண்டும் தீவிரவாதம் என நாம் இந்தத் துறையை பல்வேறு வகையான தீவிரவாதத்தில் இருந்து காக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கத் திரைப்படங்களால் முடியும். ஆனால், முதலில் தனித்தனி அடையாளங்கள் இருக்கும் இந்தத் துறையை, மொத்தமாக ஒரு அடையாளம் இல்லாத இந்தத் துறையை, அகண்ட பாரதம் போல ஒன்றிணைப்போம். அதை நாம் உலக அளவில் முதலிடத்தில் கொண்டு வைக்க முடியும்".

இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.

எப்போதும் போல இந்த ட்வீட்டிலும் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை நேரடியாகக் குறிப்பிட்டே கங்கணா ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE