நுரையீரல் செயல்பாடு, சுவாசம், உடல் வலிமையில் முன்னேற்றம்: எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் தகவல்

By செய்திப்பிரிவு

எஸ்பிபியின் நுரையீரல் செயல்பாடு, சுவாசம் மற்றும் உடல் வலிமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 10) எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அப்பாவின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. இன்னும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவிக்கான கருவிகளுடன் இருந்து வருகிறார். அவரது மற்ற செயல்பாடுகள் அனைத்தும் நலமாக உள்ளன. தொற்று எதுவும் இல்லை. நுரையீரல் செயல்பாடு, சுவாசம் மற்றும் உடல் வலிமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட முன்னேற்றம் தேவைப்படுகிறது. பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.

அப்பாவை மருத்துவர்கள் உட்கார வைக்கின்றனர். 15-20 நிமிடங்கள் அவரால் உட்கார முடிகிறது. அப்பா முயன்று வருகிறார். உங்களின் அன்பு, பிரார்த்தனைகளால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவின் பணியையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அப்பாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மிகுந்த ஆதரவாக இருந்து வருகின்றனர்.

மேலும் அப்பா நேற்றிலிருந்து வாய்வழியே சாப்பிட ஆரம்பித்திருக்கிறார். இது அவரது உடல் வலுப்பெற உதவும் என நம்புகிறேன். மீண்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE