அடுத்த ஜேம்ஸ்பாண்ட் டாம் ஹார்டியா? - ஹாலிவுட் ஊடகங்கள் தகவல்

நடிகர் டாம் ஹார்டி புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகராகத் தேர்வு செய்யப்படலாம் என ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தொடர் வரிசைத் திரைப்படங்களில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசை. 60களில் ஆரம்பித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள், தலைமுறைகளைக் கடந்து இன்றுவரை ரசிகர் கூட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஷான் கானரி, ஜார்ஜ் லேஸன்பை, ராஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் ஆகிய நடிகர்கள் நாயகன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில், அந்தந்தக் காலகட்டத்தில் நடித்துள்ளனர்.

தற்போது டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார். 'கேஸினோ ராயல்', 'குவாண்டம் ஆஃப் சோலேஸ்', 'ஸ்கைஃபால்', 'ஸ்பெக்டர்' ஆகிய 4 பாண்ட் திரைப்படங்களில் டேனியல் கிரெய்க் நடித்திருக்கிறார். அடுத்து வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' திரைப்படத்திலும் டேனியல் க்ரெய்கே ஜேம்ஸ் பாண்ட். ஆனால், இதன் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் தான் தொடர விரும்பவில்லை என்பதை டேனியல் க்ரெய்க் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக யார் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களிடம் இருந்து வந்தது. அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அமெரிக்க கருப்பின நடிகர் இட்ரிஸ் எல்பா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'கேப்டன் மார்வல்' படத்தில், நாயகியின் தோழியாக நடித்த லஷானா லின்ச் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே செய்திகள் வந்தன.

ஆனால், தற்போது இந்த இரண்டு செய்திகளையும் பொய்யாக்கும் வண்ணம் நடிகர் டாம் ஹார்டிதான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது என ஹாலிவுட் பத்திரிகையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். டேனியல் க்ரெய்க், ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வானதற்கு ஒரு சில மாதங்களுக்குப் பிறகே அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது என்பதால், டாம் ஹார்டியைப் பற்றிய அறிவிப்புக்கும் இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் 43 வயதான டாம் ஹார்டி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். 'இன்செப்ஷன்', 'மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட்', 'ரெவனன்ட்', 'வெனம்' ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மேடை நாடகங்களிலும் டாம் ஹார்டி நடித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE