நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை?- ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி

திரைப்படங்களில் நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'விக்ரம் வேதா' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்து வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:

"நடுத்தர வர்க்கக் குடும்பங்களை சினிமா ஏன் அழகியலுடன் காட்ட முயல்கிறது. நமது படங்களில் அனைத்துக் கதாபாத்திரங்களும் போதுமான பணவசதி கொண்டவர்களாகவும், அவர்களுடைய இடங்கள் அழகானதாகவும் காட்டப்படுகின்ற. ஏன் நடுத்தர வர்க்கத்தை அதன் உண்மைத்தன்மையுடன் காட்ட நாம் மிகவும் பயப்படுகிறோம்? ஹாலில் இருக்கும் அலமாரியில் பிரகாசமான பொம்மைகள் ஏன் காட்டப்படுவதில்லை?

பல்லாண்டு தூசி படிந்த சில வெற்றிக் கோப்பைகளைக் காட்டுவதில்லையே. ஜப்பானின் தொங்கும் தோட்டத்தின் படத்தைப் பின்னணியில் கொண்ட குடும்பப் புகைப்படங்கள், தூக்கி எறிய முடியாத ஆடம்பரமான அழைப்பிதழ், காலம் முடிந்து போன மரச்சாமான் போன்றவற்றையே காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையான பொருட்களைக் காட்டுங்கள் நண்பா. உண்மைத்தன்மையை உங்களால் வடிவமைக்க முடியாது".

இவ்வாறு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து அடுத்ததாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், "என்னுடைய முந்தைய பதிவில் நான் மலையாள படங்களைக் குறிப்பிடவில்லை. மலையாள சினிமா அனைத்தையும் சரியாகச் செய்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாதவனுடன் 'மாறா', விஷாலுடன் 'சக்ரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இரண்டு படங்களுமே ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE