இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் ஸ்பெஷல்: படங்களாலும் பாடல்களாலும் வென்ற இளைஞர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் இளம் பன்முகத் திறமையாளர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் தரண் அவருடைய முதல் குறும்படத்துக்கு இசையமைத்தார். அந்தக் குறும்படத்தைப் போட்டுக் காண்பித்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய முதல் படம் 'போடா போடி'. சிலம்பரசன் நாயகனாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகமான படம் அது. தரண் இசை அமைத்தார்.. இந்தப் படத்தின் பணிகள் 2008-ல் தொடங்கிவிட்டன. ஆனால் படம் வெளியாக நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2012 தீபாவளிக்கு வெளியான 'போடா போடி' இரு வேறு சிந்தனைப் போக்குகள் கொண்ட நபர்களுக்கிடையில் மலரும் காதலையும் மோதலையும் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி காதல் வெல்வதையும் புதிய பாணியில் காண்பித்து, ரசிகர்களை ஈர்த்தது.

'போடா போடி' படத்தை எழுதி இயக்கியதோடு அதில் மூன்று பாடல்களையும் எழுதினார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து அனிருத் இசையில் 'வணக்கம் சென்னை' படத்தில் அவர் எழுதிய 'எங்கடி பொறந்த' பாடலும் ரசிக்க வைத்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015-ல் வெளியான 'என்னை அறிந்தால்' படத்துக்கு அவர் எழுதிய 'அதாரு அதாரு' பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் மாஸ் தன்மையோடு அந்தப் பாடல் வரிகளை எழுதி ஒரு பாடலாசிரியராக பரவலான கவனத்தை ஈர்த்தார் விக்னேஷ் சிவன்.

இவற்றுக்கு இடையில் 2014-ல் வெளியான தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் ஒரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது.

2015-ல் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்த 'நானும் ரவுடிதான்' விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டாம் படம். நகைச்சுவை,. காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக அமைந்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் அனிருத் இசையில் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றிபெற்றன. விக்னேஷ் சிவன் ஐந்து பாடல்களை எழுதியிருந்தார். 'தங்கமே', 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட பாடல்கள் இளைஞர்களின் தேசிய கீதமாயின.

இதற்குப் பிறகு நட்சத்திர நடிகரான சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தை இயக்கினார். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன். செந்தில், சுரேஷ் மேனன், என சீனியர் நடிகர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார். இந்தியில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் மறு ஆக்கமான 'தானா சேர்ந்த கூட்டம்' தனித்தன்மையுடன் தமிழுக்கே உரிய கலகலப்பான வடிவத்தில் அமைந்திருந்தது. ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திலும் அனிருத் இசையில் விக்னேஷ் எழுதியிருந்த பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'சொடக்கு மேல சொடக்கு போடுது' என்னும் சூர்யாவின் அறிமுகப் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதுவரை வெவ்வேறு வகைமைகளில் மூன்று படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன் ஒரு பாடலாசிரியராகத் தொடர்ந்து இயங்கிவருகிறார். தனுஷ் நடித்த 'மாரி', சிவகார்த்திகேயனின் 'ரெமோ', சூர்யாவின் 'என்ஜிகே', நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா', 'விக்ரம் வேதா', 'இரும்புத்திரை', 'சாஹோ' என பல முக்கியமான படங்களிலும் வெற்றிப் படங்களிலும் அவர் எழுதிய வெற்றிப் பாடல்கள் இடம்பெற்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'மாஸ்டர்' படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் 'குயிட் பண்ணுடா' பாடல் இசை ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியான பிறகு இந்தப் பாடல் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசனின் 232 ஆம் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பதால் அதிலும் விக்னேஷ் சிவன் பாடல் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இயக்குநராக மீண்டும் 'நானும் ரவுடிதான்' கூட்டணியான விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் விக்னேஷ் சிவன். இதில் சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

மூன்று படங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் மூலம் ஒரு இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் ரசிகர்களின் மதிப்பைப் பெற்றுவிட்ட விக்னேஷ் சிவன் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க வேண்டும் என்று அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE