சுஷாந்த் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர்: ஊடகங்களுக்கு எதிராக வழக்கு

By ஐஏஎன்எஸ்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசும், தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம், ஊடகங்கள் கட்டுப்பாட்டோடு செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணையில் போதை மருந்து சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி, போதை மருந்து தடுப்பு பிரிவினர் செய்த விசாரணையில், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், சைமன் ஆகியோரும் போதை மருந்து உட்கொண்டார் என்று வாக்குமூலம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதி நவீன் சாவ்லா, "கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதிகாரிகளுக்குத் தெரியும் முன்னே ஊடகங்களுக்கு எல்லாம் தெரிந்து விடுகிறது. நற்பெயர் கெட்டுப் போகிறது. அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும், ரகுல் ப்ரீத் சிங் தொடர்பான செய்திகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டுப்பாடு காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

மனுதாரர், தான் போதை மருந்து உட்கொண்டதே இல்லை என்று மறுத்துள்ளார். மேலும் சாரா அலி கானை, அவர் நினைவுக்குத் தெரிந்து, இரண்டு முறை மட்டுமே சந்தித்திருப்பதாகக் கூறியுள்ளார். சைமன் என்பவரைச் சந்தித்ததே இல்லை என்று கூறியுள்ளார்" என்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது கூறியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பிரஸார் பாரதி, இந்தியப் பத்திரிகை கவுன்ஸில் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய அரசு, பிரஸார் பாரதி மற்றும் பத்திரிகை கவுன்ஸில் ஆகியவை, இந்த மனுவை ஒரு பிரதிநிதித்துவமாகப் பார்த்து இது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

9 செப்டம்பர் அன்று ரியா தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும், ஆனால் 11 செப்டம்பர் வரை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தனக்கெதிராக அவதூறு பேசி வந்தன என்றும் ரகுல் ப்ரீத் கூறியுள்ளார். மேலும் சுஷாந்தின் வழக்கு விசாரணையில் தனது நற்பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவிதமான தகவலையும், எந்த ஒரு ஊடக வடிவமும் செய்தியாக்கக் கூடாது என்றும் ரகுல் ப்ரீத் கோரியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 15 அன்று நடக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE