’ரிதம் 20’ : ‘’அந்தக் கேரக்டருக்கு மீனா தான்!’’ - நடிகை மீனா குறித்தும் ‘ரிதம்’ குறித்தும் இயக்குநர் வஸந்த் பகிரும் நினைவுகள் 

By வி. ராம்ஜி

பிரமிட் பிலிம்ஸ் வி.நடராஜன் தயாரிக்க, அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் முதலானோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் வெளியானது ‘ரிதம்’. தலைப்புக்கு ஏற்றது போல், படத்தை அழகிய ஸ்ருதியுடனும் லயத்துடனும் அமைத்திருந்தார். அல்லது அப்படி அமைத்த இந்தப் படத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியிருந்தார்.

எல்லோரும் பார்க்கிற படமாக, எப்போதும் பார்க்கிற படமாக, இன்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்ததுதான் ‘ரிதம்’ படத்துக்குக் கிடைத்த வெற்றி. 2000மவாது ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது இந்தப் படம் 20 ஆண்டுகளாகின்றன.

‘ரிதம்’ அனுபவங்கள் குறித்து இயக்குநர் வஸந்த் எஸ்.சாயிடம் (வஸந்த்) கேட்டோம்.

இயக்குநர் வஸந்த் தெரிவித்ததாவது:

‘’அந்தக் கேரக்டருக்கு மீனாதான்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். என்னுடைய ‘நீ பாதி நான் பாதி’ படத்திலேயே மீனா நடிக்க வேண்டியது. ஹீரா ரோல்ல அவங்கதான் நடிச்சிருக்கணும். அப்போ அவங்க கால்ஷீட் கிடைக்கல. அதனால நடிக்கலை. அப்போதான் ஒரு படமோ என்னவோ பண்ணிருந்தாங்க. கவுதமியை ‘நீ பாதி நான் பாதி’ல எப்படி நடிக்கை வைச்சேனோ, அந்த மாதிரிதான் மீனாவையும் பாத்தேன். எப்படி யாரை யூஸ் பண்றோமோ அவங்க, அப்படிஅப்படி பண்ணப் போறாங்க.

கடலுக்கு, ஒரு லாரி எடுத்துட்டுப் போனீங்கன்னா, ஒரு லாரில தண்ணீர் எடுத்துட்டு வருவீங்க. ஒரு ஸ்பூன் எடுத்துட்டுப் போனீங்கன்னா, அவ்வளவுதான் தண்ணீர் எடுத்துட்டு வருவீங்க. அவங்ககிட்டலாம் நடிப்பு இருக்கு. நாமதான் கேட்டு வாங்கணும். நாமளும் நம்மகிட்ட இருக்கிற கதைக்கு, கதாபாத்திரம் அமைச்சு, அவங்களை நடிக்க வைக்கணும்.

அதேமாதிரிதான் தேவா சார்கிட்டயும். ’எங்கிட்ட யாரும் மெலடியே கேட்டதில்ல வஸந்த்’னு சொன்னாரு. அவரால அவ்ளோ கிரேட் மெலடிஸ் கொடுக்க முடியுது. அர்ஜுன் சாரால இவ்வளவு கிரேட் நடிப்பு கொடுக்கமுடியுது. மீனா, கிளாமர் ரோல்ல பண்ணிருந்தாலும் கூட, எவ்ளோ அழகா, மறக்க முடியாத ரோல்ல நடிச்சிருக்காங்கன்னா... அவங்க மேல நம்பிக்கை வைச்சு, அவங்களோ கதாபாத்திரத்துல நாம ஒர்க் பண்ணி, அவங்ககிட்ட கொடுத்துடணும்.

அதுதான் முக்கியக் காரணம். தவிர, எனக்கும் மீனாவுக்கும் மிகச்சிறந்த புரிதல் இருந்தது. என் படத்தில் நடித்த நடிகைகள் எல்லோருமே பிரமாதமா நடிச்சுக் கொடுத்தாங்க. ராதிகாலாம் ஒண்ணுமே சொல்லவேணாம். நினைச்சதை விட பல மடங்கு நடிப்பைக் கொடுத்தாங்க. ’கேளடி கண்மணி’ அப்படி பிரமாதமா பண்ணிருப்பாங்க ராதிகா. ’நீ பாதி நான் பாதி’ படத்துல, கவுதமி பிரமாதமா பண்ணிருப்பாங்க.

மத்தபடி நான் புதுமுகங்களை வைச்சுத்தான் படங்கள் பண்ணினேன். சுவலட்சுமியா இருக்கட்டும்... ‘நேருக்கு நேர்’ல சிம்ரனா இருக்கட்டும்... ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ல ஜோதிகாவா இருக்கட்டும். அவங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கிற பொஸிஷன்ல இருந்தேன். ஏன்னா... அவங்களாம் புதுமுகங்கள்.

மீனாகிட்ட ஒரு புரிதல் இருந்தது. நான் என்ன சொன்னாலும் மீனாகிட்ட, அவங்க முகத்துல அப்படியொரு எக்ஸ்பிரஷன் வந்துரும். ஆக்‌ஷனா வரும். அப்படியொரு அண்டர்ஸ்டாண்டிங்கோட நானும் மீனாவும் ‘ரிதம்’ படத்துல ஒர்க் பண்ணினோம். அப்படியொரு மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தாங்க மீனா’’.

இவ்வாறு இயக்குநர் வஸந்த், ‘ரிதம்’ படம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE