ஆபாச நடிகை என்ற கங்கணாவின் விமர்சனம்: நடிகை ஊர்மிளாவுக்குக் குவியும் பிரபலங்களின் ஆதரவு

By ஐஏஎன்எஸ்

நடிகை கங்கணா ரணாவத், நடிகை ஊர்மிளா மடோண்ட்கரை ஆபாசப் பட நடிகை என்று கூறியதை எதிர்த்தும், ஊர்மிளாவை ஆதரித்தும் பிரபலங்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியாவின் ஆதிக்கம் உள்ளது என்ற கங்கணாவின் குற்றச்சாட்டுக்கு ஊர்மிளா பதிலளித்திருந்தார். முதலில் உங்கள் ஊரில் இருக்கும் போதை மருந்துப் பிரச்சினையை ஒழித்துவிட்டு பாலிவுட்டைப் பற்றிப் பேசுங்கள் என்கிற ரீதியில் ஊர்மிளா பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கங்கணாவிடம் கேட்கப்பட்டது. அப்போது, ''ஊர்மிளா எனது போராட்டங்களை நகைப்புக்குரியதாக்குகிறார். மேலும், அவர் ஒரு ஆபாசப் பட நடிகை'' என்று கங்கணா பதிலளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கங்கணாவுக்குக் கண்டனம் தெரிவித்தும், ஊர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்தும் பாலிவுட் கலைஞர்கள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

"மிக அழகான, நேர்த்தியான, உணர்ச்சிகரமான நடிகை நீங்கள்தான் என்று சொல்ல வேண்டும் என விரும்பினேன். உங்களுக்கு என் அன்பு ஊர்மிளா" என்று இயக்குநர் அனுபவ் சின்ஹா பகிர்ந்துள்ளார்.

"ஊர்மிளா நீங்கள் ஒரு சகாப்தம். ரங்கீலா கண்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் விருந்தாக இருந்தது. நீங்கள் நிர்ணயித்த அளவுகோலை எங்களில் பலர் எட்ட முயன்றோம். சக நடிகர்கள் மற்றும் ஒரு தலைமுறை திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறீர்கள். கவர்ச்சி, கண்ணியம் என இரண்டுமே உங்களுக்குள் இருந்தது. என் வணக்கங்கள்" என்று நடிகை பூஜா பட் பதிவிட்டுள்ளார்.

"தரமானவர்கள் மூர்க்கமாகவோ, கோபம் கொள்வதோ இல்லை. அந்தத் தரம் வெளியே மிளிரும். ஊர்மிளா, ஜெயா பச்சன், ஸ்வரா பாஸ்கர், டாப்ஸி, சோனு சூட் ஆகியோர் அப்படி பிரகாசமாக ஒளிர்கிறீர்கள்" என்று ஃபாரா கான் அலி தெரிவித்துள்ளார்.

"அன்பார்ந்த ஊர்மிளா. மஸூம், சமத்கார், ரங்கீலா, ஜுடாய், தவுட், சத்யா, பூத், கவுன், ஜங்கள், ப்யார் துனே க்யா கியா, தெஹ்ஸீப், பின்ஜார், ஏக் ஹசினா தீ உள்ளிட்ட திரைப்படங்களில் உங்களுடைய அற்புதமான நடிப்பை நினைத்துப் பார்க்கிறேன். உங்களது நடிப்பையும், அசாத்திய நடனத்தையும் பார்த்து வியந்துள்ளேன்" என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரீஷ் ஐயர் என்கிற சமூக ஆர்வலரும் கங்கணாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "அவர் ஆபாசப் பட நடிகை அல்ல. அப்படி இருந்தாலும் என்ன தவறு இருக்கிறது. தன்னைப் பற்றியே உயர்வாக நினைக்கும், மற்றவர்களை அசிங்கமாகப் பேசும் மரியாதை தெரியாத ஒரு நபரை விட நான் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக இருந்துவிட்டுப் போவேன்.

உச்சத்துக்கான பயணத்தில் பல சவால்கள் உள்ளன. உங்களை வீழ்த்த பலர் முயல்வார்கள். ஆனால் உங்களையும், உங்கள் திறனையும் நம்புபவர்களும் இருப்பார்கள். யாருமே அவராக உயர்வதில்லை. நம் வெற்றிக்குப் பங்காற்றியவர்களிடம் நன்றியுடன் இருக்க வேண்டும்" என்று ஹரீஷ் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE