1 கிலோ தங்க மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

By ஐஏஎன்எஸ்

தனது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது நடிகர் சச்சின் ஜோஷி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி பதிலளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், ராஜ் குந்த்ராவும், ஷில்பாவும் நடத்தி வரும் சத்யுக் கோல்ட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனம், தங்கம் வாங்கும் விவகாரத்தில் தன்னை ஏமாற்றியதாக சச்சின் ஜோஷி புகார் அளித்திருந்தார். சத்யுக் நிறுவனத்திலிருந்து ஜோஷி ஒரு கிலோ தங்கம் வாங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றிப் பேசியிருக்கும் ஷில்பா, "சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை. சத்யுக் கோல்ட் நிறுவனத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையும் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சச்சின் ஜோஷியின் ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். அதற்கான சுணக்கக் கட்டணத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை. இது சட்டபூர்வமான கட்டணமே. இந்தத் தொடர் மோசடியாளருக்கு எதிராக, காசோலை மோசடி வழக்கு ஒன்றையும் நாங்கள் தொடுத்துள்ளோம் என்பது பலருக்குத் தெரியாது.

அவரிடம் தங்கத்தைத் தர எங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீதிமன்றத்தில் அதை ஒப்படைத்திருப்போம். இதில் மத்தியஸ்தம் பேச நீதிமன்றம் ஒருவரை நியமித்துள்ளது. ரசீதிலும், இணையத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், மீதி கட்ட வேண்டிய பணம் பற்றிய விவரங்களை நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம்" என்று ஷில்பா கூறியுள்ளார்.

ராஜ் மற்றும் ஷில்பாவின் சட்ட ஆலோசனைக் குழுவும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE