''உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே''- ரசிகர் உருக்கம்: நலமடைய வாழ்த்துத் தெரிவித்த ரஜினி

By செய்திப்பிரிவு

தனது ரசிகர் முரளியின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டி ரஜினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே மக்கள் பலருடைய வாழ்க்கை முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. கரோனா பாசிட்டிவ் என்று வந்தால் உடனடியாக உடலில் இருக்கும் இதர பிரச்சினைகள் ஒன்றிணைந்து முழுமையாக மோசமடைந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் எச்சரிகையாக இருக்கும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

நேற்று (செப்டம்பர் 16) முதல் ரஜினி ரசிகர் முரளியின் ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. முரளிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமயத்தில் அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, தனது ட்விட்டர் பதிவில், "தலைவா.என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பலரும் ஷேர் செய்து, அவர் பூரண நலம்பெற பிரார்த்தித்து வருகிறார்கள்.

ரசிகர் முரளி குறித்த செய்தியை ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் எடுத்துக் கூறினர். உடனடியாக முரளிக்கு ரஜினி ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் ரஜினி கூறியிருப்பதாவது:

"முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க".

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE