மீனா பிறந்தநாள் ஸ்பெஷல்: என்றும் குன்றாத அழகும் திறமையும்  

By ச.கோபாலகிருஷ்ணன்

தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப் படங்களிலும் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துவிட்ட நடிகை மீனா இன்று (செப்டம்பர் 16) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மனம் கவர்ந்த குழந்தை

சென்னையில் பிறந்த மீனா 1982-ல் வெளியான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ். தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'எங்கேயோ கேட்ட குரல்', 'அன்புள்ள ரஜினிகாந்த்' ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். 'சுமங்கலி', 'லட்சுமி வந்தாச்சு' படங்களில் சிவாஜி கணேசனுடன் நடித்தார். 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட, ஆதரவற்ற குழந்தையாக அவர் நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இதுபோன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கினார்..

நாயகியாக வெற்றிப் படிகள்

1990-ல் வெளியான 'சுமங்கலி' என்னும் தெலுங்கு படத்தில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நடித்தார். இதுவே மீனாவைக் கதாநாயகி ஆக்கிய படம். 1991-ல் கஸ்தூரி ராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரணின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழிலும் கதாநாயகி ஆனார். கிராமிய மண் சார்ந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே' என்னும் பாடல் மீனாவைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது.

இதன் பிறகு தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் 'பர்தா ஹை பர்தா' என்னும் இந்திப் படத்திலும் நாயகியாக நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'எஜமான்' படத்தில் நடித்தார். 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் இந்தப் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்ததால் திரையுலகம் பரபரத்தது. ஏவிஎம் தயாரித்த இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழிலும் மீனாவை நாயகி நடிகையாக நிலைநிறுத்தியது. அடுத்த ஆண்டு விஜயகாந்துடன் 'சேதுபதி ஐபிஎஸ்', ரஜினியுடன் 'வீரா', சரத்குமாருடன் 'நாட்டாமை', சத்யராஜுடன் 'தாய் மாமன்', பிரபுவுடன் 'ராஜகுமாரன்; என அந்தக் காலகட்டத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார். இவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும்

கடல் கடந்த ரசிகர் படை

'நாட்டாமை' மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. ரஜினிகாந்துடன் மீனா நடித்த மூன்றாம் படமான 'முத்து' இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இன்றுவரை ஜப்பானில் மீனாவுக்கென்று ஒரு பெரும் ரசிகர் படை உள்ளது.

90-களில் தமிழ். தெலுங்கு, மலையாளம். கன்னட மொழிகளில் அனைத்து முன்னணி நாயக நடிகர்களுடனும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்தார் மீனா. 1996-ல் கமல் ஹாசனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த 'அவ்வை ஷண்முகி' படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற நட்சத்திரங்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தார்.

நடிப்பும் சிறப்புதான்

1997-ல் சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தார் மீனா. அவ்வாண்டின் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வெளியான இவ்விரண்டு படங்களிலும் அவருடைய நடிப்புத் திறமை வெகு சிறப்பாக வெளிப்பட்டன. இரண்டு படங்களுக்காகவும் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை வென்றார்.

2000-ம் ஆண்டில் மீனா நடித்த 'வானத்தைப் போல', 'பாளையத்து அம்மன்', 'வெற்றிக் கொடிகட்டு', 'ரிதம்', 'மாயி' என மீனா நடித்த படங்கள் அவரை மிகத் திறமை வாய்ந்த நடிகையாக அடையாளப்படுத்தின. இவற்றில் வசந்த் இயக்கிய 'ரிதம்' கணவனை இழந்து மகனுடன் தனித்து வாழும் தாயாக அவர் நடித்திருந்தார். அவருடைய தோற்ற அழகை மிகக் கண்ணியமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் வெளிப்படுத்தியதோடு முதிர்ச்சியான நடிப்பையும் வெளிக்கொணர்ந்த அந்தப் படம் மீனாவின் திரை வாழ்வில் மிக முக்கியமான படம் என்று சொல்லலாம்.

'ஆனந்த பூங்காற்றே', 'வில்லன்' போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். 'ஷாஜஹான்' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துவந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழில் கதாநாயகி. இரண்டாம் நாயகி. வலுவான துணைக் கதாபாத்திரம் ஆகியவற்றில் மாறி மாறி நடித்துவந்தார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய 'கண்ணம்மா' படத்தில் தலைப்புக் கதாபாத்திரத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்தார்.

மற்ற மொழிகளில் முத்திரைப் படங்கள்

புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளின் பிற்பகுதியிலும் அடுத்த பத்தாண்டுகளின் முதல் பாதியிலும் மலையாளத்தில் 'உதயநானு தாரம்', 'கருத்த பக்‌ஷிகள்' 'கதா பறையும்போல்', , 'த்ரிஷ்யம்;' போன்ற ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட பல விருதுகளைக் குவித்த வெற்றிப் படங்கள் அமைந்தன. தெலுங்கு, கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்.

குழந்தையும் முதிர்ச்சியும்

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்ட மீனா நாயகி நடிகையான பிறகும் குழந்தைத்தனம் மிக்க இளம் பெண்ணாகவே பல படங்களில் நடித்தார். அதுவே அவருடைய அடையாளமாகிப்போனது. அழகு, இளமை, நடனம். கவர்ச்சி போன்ற நாயகி நடிகைகளின் வெற்றிக்குத் தேவையான அம்சங்களிலும் அவர் குறைவைக்கவில்லை. குழந்தைத்தனமான நடிகையாக இருந்தவர் பல படங்களில் முதிர்ச்சியாகவும் உணர்ச்சிகரமாகவும் நடிப்பதிலும் தன் வல்லமையை நிரூபித்தார்.

1990-களிலேயே தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறந்த நடிகைக்கான மாநில அரசுகளின் விருதுகளையும் ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பல முறை வென்றுள்ளார். இருந்தாலும் புத்தாயிரத்துக்குப் பிறகுதான் அவருடைய நடிப்புத் திறமை அதிக கவனம் பெறும் வகையிலான கதாபாத்திரங்கள் அமைந்தன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி அவர் ஒரு நடிகையாக தன் மீதான மதிப்பைப் பல மடங்கு உயர்த்திக்கொண்டார். அதே நேரம் வயது அதிகரிக்க அவருடைய அழகு குறையவில்லை. குறிப்பாக அவருடைய கண்களில் இருக்கும் காந்த சக்தி குன்றவேயில்லை.

தமிழில் சில ஆண்டு இடைவேளைக்குப் பிறகு ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' திரைப்படத்தின் மூலம் மறு வருகை புரிகிறார் மீனா. இதில் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது தெரியவில்லை என்றாலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் மீனா தமிழில் மீண்டும் ஒரு நெடிய இன்னிங்கஸைத் தொடங்குவார் என்றும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் வெல்வார் என்றும் நம்பலாம். அதற்காக அவரை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE