தனது பயோபிக்கை தானே இயக்கும் மடோனா

By செய்திப்பிரிவு

பாப் பாடகி மடோனா தனது பயோபிக்கை தானே இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி மடோனா, பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படுபவர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய கலைஞர்களில் ஒருவர். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வரும் மடோனாவின் பாடல் பதிவுத் தட்டுகள் 33.5 கோடிக்கும் அதிகமாக உலகளவில் விற்பனையாகியுள்ளது.

தற்போது மடோனாவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதை மடோனாவே இயக்கவுள்ளார். யூனிவர்ஸல் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஆஸ்கர் விருது வென்ற டயாப்லோ கோடி எழுதுகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும், யாரெல்லாம் நடிப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியான, பிரபலங்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த 'ராக்கெட் மென்', 'பொஹிமியன் ராப்ஸோடி' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பில், அந்தந்தப் பிரபலங்களே ஆலோசகர்களாக இருந்தனர். ஒரு பிரபலமே தன்னைப் பற்றிய படத்துக்கு இயக்குநராக மாறியுள்ளது இதுவே முதல் முறை.

"ஒரு கலைஞராக, இசைக் கலைஞராக, நடனக் கலைஞராக, மனிதராக என் வாழ்க்கை என்னை அழைத்துச் சென்ற அற்புதமான பயணம் குறித்து நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படம் இசையைப் பற்றியே இருக்கும். இசையும், கலையும் தான் என்னைச் செலுத்துகிறது, உயிரோடு வைத்திருக்கிறது.

பல சொல்லப்படாத, ஊக்கமூட்டும் கதைகள் உள்ளன. அதைச் சொல்வதற்கு என்னை விட யார் சிறந்த நபராக இருப்பார்கள். எனது குரல், எனது பார்வையில், என் வாழ்க்கையின் சுவாராசியமான பயணத்தைச் சொல்வது அவசியமாகிறது" என்று மடோனா கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு 'ப்ளாண்ட் ஆம்பிஷன்' என்ற பெயரில் மடோனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் திரைக்கதையை 2017 ஏப்ரலில் யூனிவர்ஸல் நிறுவனம் வாங்கியது. ஆனால் என்னைப் பற்றி முழுதும் பொய்யாகச் சித்தரிக்கும் ஒரு திரைக்கதையை ஏன் யூனிவர்ஸல் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று மடோனா அப்போது கேள்வியெழுப்பியிருந்தார்.

பல திரைப்படங்களிலும், சில குறும்படங்கள், மேடை நாடகங்களிலும் மடோனா நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். 'ஃபில்த் அண்ட் விஸ்டம்', 'டபிள்யூ.ஈ' ஆகிய திரைப்படங்களையும் ஏற்கெனவே இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE